November 08, 2005

ஹாலந்து அனுபவம்

இந்தப் பதிவில் ஹாலந்து நாட்டில் சுற்றிப்பார்த்த அனுபவங்களைப் பற்றி நான் கூறப்போவதில்லை. ஆம்ஸ்டர்டாம் நகரில் அமைந்துள்ள ஒரு முப்பரிமாணத் திரையரங்கில் நடைபெறும் ஹாலந்து அனுபவம் (Holland Experience) என்ற முப்பரிமாணக் காட்சி (3D) பற்றியே இப்பதிவு.

ஆம்ஸ்டர்டாம் நகரில் கண்களுக்கு விருந்தளிக்கும் பல்வேறு இடங்கள் இருப்பினும் இந்த முப்பரிமாணக்காட்சி என்னை மிகவும் கவர்ந்தது. முப்பதே நிமிடங்கள் நடைபெறும் இந்தக் காட்சிக்கு அனுமதி பெற்று திரையரங்கில் சென்று அமர்ந்தீர்களேயானால் ஒரு வித்தியாசமான அனுபவம் உறுதி. ஆம்ஸ்டர்டாம் நகரின் மையத்தில் அமைந்துள்ள திறந்தவெளிச் சந்தைக்கு அருகில் அமைந்துள்ளது இந்தத் திரை அரங்கம்.அரங்கினுள் நுழைந்தவுடன், வழக்கம் போல் முப்பரிமாணக்காட்சி காண உதவும் கண்ணாடியினை வழங்கினர். அரங்கின் இருக்கைகள் விமானத்தின் இருக்கைகள் போல் வடிவமைக்கப்பட்டிருந்தன.வசதியாக இருக்கையிலமர்ந்து கண்ணாடியை அணிந்து கொண்டவுடன் சிறிது நேரத்தில் இருள் கவிழ்ந்து திரை ஒளிர்ந்தது. விமானம் ஒன்றைத் திரையில் காட்டினார்கள். விமானத்தின் உறுமல் சத்தம் நாம் உணரும் வண்ணம் அரங்கத்தின் அதிர்வுகள் எழுப்பப்பட்டன. விமானத்தில் அமர்ந்தது போல் உணர்ந்தோம்.விமானி எழுப்பும் அறிவிப்பு அடுத்ததாய்க் கேட்டது. "பயணிகளே, இன்னும் சிறிது நேரத்தில் நாம் ஆம்ஸ்டர்டாம் நகரினை அடைய இருக்கிறோம். உங்களது ஹாலந்துப் பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள்" என ஒலிபெருக்கிக் குரல் சொல்லியது. விமானம் தரையைத் தொட்டதும் எழுப்பும் அதிர்வை அரங்கினுள் உணர்ந்தோம். விமானம் ஓடுபாதையில் ஓடி, வேகம் குறைந்து நின்றதும், அரங்கமும் நிறுத்த நிலைக்கு வந்தது. அது ஒரு நகரும் திரையரங்கு. இடப்புறமோ, வலப்புறமோ , முன்னோ , பின்னோ திருப்பும் வண்ணம் அமைந்த நகர் அரங்கு.ஹாலந்து நாட்டின் எல்லாப் பகுதிகளையும் ஏறக்குறைய முப்பது நிமிடங்களில் சுற்றிக்காட்டினார்கள் என்றே சொல்லலாம். ஆம்ஸ்டர்டாம் நகரின் கால்வாய்களில் படகு சவாரி செய்வது போல் திரையில் காட்சிகள் தெரிய படகில் செல்வது போல் உணர்ந்தோம். கால்வாய்களைக் கடக்க அமைக்கப்பட்டிருந்த எண்ணற்ற வளைவுப் பாலங்களைப் படகு கடந்து செல்கிறது. படகு திரும்பி வளைந்து செல்கையில் அரங்கமும் சற்று வளைந்து கொடுத்து படகில் திரும்பிய உணர்வினை அளித்தது. ஹாலந்து நாட்டின் அரச பரம்பரையின் அரசி நம்மை நோக்கிக் கையசைக்கிறார். வண்ண உடை அணிந்த சின்னஞ்சிறு குழந்தைகள் நம்மைப் பார்த்துச் சிரிக்கின்றன. கால்பந்து மைதானத்தில் சிறார்கள் விளையாடிக்கொண்டிருக்கின்றார்கள். சிறுவன் உதைத்த பந்து திரையை விட்டு வெளியில் வந்து நம் மீது மோதுகிறது. ரோட்டர்டாம் நகரின் துறைமுகங்களில் கப்பல் போக்குவரவு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அங்கே பறக்கும் பறவை விர்ரென்று அரங்கத்தில் புகுந்து ஒலியெழுப்பிச் செல்கிறது.

ஆம்ஸ்டர்டாம் நகரின் சுற்றுலாச் சின்னங்கள் திரையில் தெரிகின்றன. புகழ் பெற்ற ரிக்ஸ் அருங்காட்சியகம், ஹாலந்து நாட்டின் எங்கு சென்றாலும் நீக்கமற நிரைந்திருக்கும் காற்றாலைகள் (Wind mills), புகழ் பெற்ற பீங்கான் காலணிகள் என்று வரிசையாகக் காட்சிகள் விரிந்தன. உலகப் புகழ் பெற்ற டூலிப் தோட்டம் அமைந்துள்ள கியீக்னாஃப்-க்குள்(Keukenhof) அடுத்து நுழைந்தோம். வண்ண வண்ண டூலிப் மலர்கள் திரையில் தெரிகையில் அரங்கினுள்ளும் மலர்களின் சுகந்த வாசம் வீசியது. மலர்களின் நடுவே நடந்த உணர்வு. பயணம் மதுரடாமிற்குத் தொடர்ந்தது. ஹாலந்து நாட்டின் நினைவுச் சின்னங்கள் எல்லாவற்றினையும் ஒரே இடத்தில் சிற்றளவாக்கம் செய்து (Miniature) வைத்திருக்கிறார்கள். மதுராடாம் (Maduradam) என்று அந்த இடத்துக்குப் பெயர். உலகப் பிரச்சினைகளை விசாரிக்கும் நீதிமன்றம் அமைந்துள்ள தி ஹேக் (The Hague) நகரில் தான் இந்த மதுராடாம் அமைந்திருக்கிறது.

திடீரெனறு கிராமப்புறம் நோக்கி ஒரு வண்டியில் ஏறிப் பயணம் செய்து கொண்டிருக்கிறோம். பசுமையான புல்வெளிகளும் தோட்டங்களும் கண்ணில் விரிகின்றன. அருவி ஒன்றில் நீர் வழிந்து கொண்டிருக்க , தட தடவென்று ஒரு பெண் நடுவில் ஓடுகிறாள். அருவி வழிவதையும் , பெண் ஓடுவதையும் நிஜமாகவே அமைத்திருந்தார்கள். திரையில் தெரிந்த பிம்பமல்ல அது.

முப்பது நிமிடங்கள் நொடியில் பறந்து விட்டன. முப்பது நிமிடத்திற்குள் ஹாலந்து நாடு முழுமைக்கும் ஒரு குற்றுலா சென்று வந்த உணர்வு. ஹாலந்து முழுவதும் சுற்றிப்பார்க்கு முன் இந்தக் காட்சியைப் பார்த்து விட்டுப் பின்னர் பயணம் செய்ய வேண்டிய இடங்களை முடிவு செய்யலாம். அல்லது சுற்றிப்பார்க்க நேரமில்லாதவர்கள் இந்தக் காட்சியை மட்டுமாவது கண்டு செல்லலாம். "ஹாலந்து அனுபவம்" தவிர, பிற முப்பரிமாணத் திரைப்படங்களும் விவரணப்படங்களும் இந்த அரங்கில் வழக்கமாக நடைபெறுகிறது.

படங்கள் உதவி: http://www.holland-experience.nl/

October 05, 2005

ஓஸ்லோ-விஜிலன்ட் பூங்கா-2

விஜிலன்ட் பூங்கா சுமார் எண்பத்தியிரண்டு ஏக்கர் பரப்பளவைக் கொண்டது. இருப்பினும் ஒரு குறிப்பிட்ட இடத்துக்குள்ளேயே எல்லாச் சிற்பங்களும் அமைந்திருக்கின்றன.மொத்தமாக 162 சிற்பங்கள்.

பூங்காவினை ஐந்து பகுதிகளாகப் பிரிக்கலாம். நுழைந்தவுடன் எதிர்ப்படும் பெரிய நுழைவாயில், அதனைக் கடந்து ஐம்பது மீட்டர் நடந்து சென்றால் வரும் பாலம், நீரூற்று, ஒரே கல்லினால் ஆன உயரமான தூண் மற்றும் வாழ்க்கைச் சக்கரம் எனப்படும் வட்டச் சிலை.

கிரானைட்டினாலான உயர்ந்த நுழைவாயிலைக் கடந்தவுடன் வலப்புறம் குஸ்தாவின் சிலை அமைக்கப்பட்டிருப்பதை ஏற்கனவே கண்டோம். அதனைக் கடந்து செல்லுங்கள். கோடை நேரத்தில் நீங்கள் சென்றால் இருபுறமும் பச்சைப்பசேலெனப் புல்வெளி வழி அமைத்துக் கொடுக்கும். குளிர்காலத்தில் சென்றீர்களேயானால் வெள்ளைப் பனி உங்களுக்குக் கம்பளம் விரிக்கும்.பாலத்தின் இருபுறமும் அமையும் தடுப்புச் சுவர்களில் ஏராளமான வெண்கலச் சிலைகள். மொத்தம் ஐம்பத்தெட்டுச் சிலைகள். இவற்றுள் பெரும்பாலானவை சிறுவர்களின் சிலைகள். கிரானைட்டில் அமைந்த இச்சிலைகள் சிலவற்றில் வெண்கலத்தாலான வளையமும் உண்டு.சிறுவர்கள் சிலை தவிர ஆண், பெண் உறவு நிலை, தந்தையும் குழந்தையும் விளையாடும் மகிழ்வு நிலை, குழந்தையைத் தூக்கிக் கொண்டு மகிழும் தாயின் பூரிப்பு நிலை எனப்பல்வேறு நிலைகளில் சிலைகள்.ஒரு காலை மட்டும் லேசாக உயர்த்திக் கோபமாய்ப் பார்த்துக் கொண்டிருக்கும் சிறுவனின் சிலை முக்கியமானது. சினங்கொண்ட சிறுவன் (Sinnataggen) எனப்பெயர் பெற்ற இச்சிலை வித்தியாசமாய் அமைந்து பலரையும் கவர்ந்து பூங்காச் சிலைகளுள் முக்கிய இடம் வகிக்கிறது.வட்ட வடிவ வளையத்தினுள் அமைக்கப்பட்டிருக்கும் ஆண்-பெண் சிற்பங்கள் இறவா நிலையைக் குறிக்கும் (Wheel of Eternity) சிறப்புச் சிற்பங்களாம்.
பாலத்தைக் கடந்து சென்றவுடன் எதிர்ப்படுவது ஒரு நீரூற்று. ஆறு பெரிய மனிதச் சிற்பங்கள் ஒரு பெரிய தட்டை ஏந்திப்பிடித்துள்ளனர். அந்தத் தட்டிலிருந்து நீர் வழிவது போல் அமைக்கப்பட்டிருக்கின்றது இந்த நீரூற்று.பூங்காவில் முதன் முதலில் அமைக்கப்பட்ட சிற்பங்களில் இதுவும் ஒன்று என்கிறார்கள். ஓஸ்லோ நகரின் பாராளுமன்றத்துமுன் இந்நீரூற்றினை அமைக்கத் திட்டமிடப்பட்டிருந்ததாம். பின்னர் அத்திட்டத்தினை மாற்றி பூங்காவில் இந்த நீரூற்று வடிவமைக்கப்பட்டது. நீரூற்றைச் சுற்றிலும் மரமும் மனிதர்களும் சேர்ந்த சிற்பங்கள் அமைந்துள்ளன. இரண்டு மீட்டர் உயரத்திற்கு வளர்ந்த இருபது சிற்பங்கள் மனித வாழ்வின் தொடக்கம் முதல் முடக்கம் வரை நிகழும் நிகழ்வுகளைச் சித்தரிக்கும் காட்சிகளைக் கொண்டிருக்கின்றன. வாழ்க்கை மரம் (Tree of Life) என்றழைக்கப்படுகின்றன இந்தச் சிற்பங்கள். இயற்கையோடு இணைந்த மனித வாழ்வை இச்சிறபங்கள் வெளிப்படுத்துகின்றன.


நீரூற்றைக் கடந்து பூங்காவின் உயரமான பகுதியில் ஏறினால் தெரிவது ஒரே கல்லினால் அமைக்கப்பட்ட தூண் (Monolith). மிகப்பிரம்மாண்டமாய் அமைக்கப்பட்ட இந்தத் தூண் சுமார் பதினைந்து மீட்டர் உயரம் உடையது.இந்ததூணில் 121 உருவங்கள் வடிக்கப்பட்டுள்ளன. ஒருவரை ஒருவர் பிடித்துக் கொண்டும் அணைத்துக்கொண்டும் நெருக்கமாய் அமைந்த சிற்பங்கள். மனித வாழ்வின் மறு பிறப்பு, வாழ்வின் போது படும் துயரங்கள், போராட்டம், தளைகளிலிருந்து விட்டு விடுதலை ஆகி இறைவனடி சேர எடுத்துக் கொள்ளும் முயற்சி போன்றவற்றைச் சித்தரிப்பதாய் விஜிலன்ட் இந்தத் தூணை வடிவமைத்தாராம். 1925-ல் வடிவமைக்கப்பட்ட இந்தத் தூணை நிர்மாணிக்கப் பல வருடங்கள் ஆனது. விஜிலன்ட் இறப்பதற்கு முன் 1943-ல் இந்தத் தூண் முழுமை பெற்றது.

இந்தத் தூணைச் சுற்றிலும் பெரிது பெரிதாய் அமைந்த கிரானைட் சிற்பங்கள். இவையும் மனித வாழ்க்கையச் சித்தரிப்பவையே. பெரிய தூணின் அருகே செல்ல அமைந்த படிகளை சுற்றிலும் இந்தச் சிற்பங்கள் அமைந்துள்ளன. ஒவ்வொரு குழுவிலும் ஒன்றுக்கு மேற்பட்ட சிற்பங்கள் அமைந்துள்ளன. மொத்தமாய் 36 குழுக்கள்.
தாயின் முதுகில் ஏறிச் சவாரி செய்யும் குழந்தைகள், தந்தையின் அரவணைப்பிலிருக்கும் குழந்தைகள், ஆணும் பெண்ணும் தழுவிக்கொண்டிருக்கும் காதல் நிலை, குழந்தைகள் மட்டும் கூடிக் குதூகலிக்கும் சிற்பங்கள், வயதான நிலையில் ஆணும் பெண்ணும் அடையும் துயர நிலை என்று வாழ்க்கையின் வெவ்வேறு நிலைகளைப் படம் பிடிக்கும் வண்ணம் அமைந்திருக்கின்றன இச்சிற்பங்கள். மலைக்க வைக்கின்றன.
இந்தத் தூணைக் கடந்து படிகளில் இறங்கித் தொடர்ந்து சென்றால் இறுதியாய் வரவேற்பது "வாழ்க்கைச் சக்கரம்" (Wheel of Life) என்றழைக்கப்படும் வளைய வடிவச் சிற்பம். விஜிலன்ட் பூங்காவின் இறுதிச் சிற்பமாய் , தன்னந்தனியே அமைந்திருக்கிறது இச்சிற்பம்.
ஒரு ஆண், ஒரு பெண் மற்றும் ஒரு குழந்தை , மூன்று சிற்பங்களும் வளைந்துகொண்டு ஒன்றையொன்று பிடித்துக் கொண்டு , சிற்பங்களால் செய்த ஒரு மாலை போல் அமைந்திருக்கின்றது. இப்பூங்காவின் அமைப்பினை ஒரே வார்த்தையில் விளக்கும் வண்ணம் (ஜனனம் முதல் மரணம் வரை) இச்சிற்பத்தை விஜிலன்ட் அமைத்தாராம். வெண்கலத்தாலானது இச்சிற்பம்.

ஓஸ்லோ செல்பவர்கள் இப்பூங்காவினைத் தவற விடுவதில்லை. கலை நேர்த்தியுடன் அமைக்கப்பட்ட இச்சிற்பங்களைக் காண வாய்ப்புக் கிடைத்தால் நழுவ விடாதீர்கள்!

June 20, 2005

ஓஸ்லோ-விஜிலன்ட் பூங்கா-1ஓஸ்லோ(Oslo) - நார்வே நாட்டின் தலைநகரம். ஓஸ்லோ நகரில் காண வேண்டிய இடங்கள் நிறைய இல்லை என்றாலும், அங்கிருக்கும் விஜிலன்ட் சிற்பப் பூங்கா (Vigeland Sculpture Park) கட்டாயம் பார்க்க வேண்டிய ஒரு சுற்றுலாச் சின்னம். நகரின் மையத்திலிருக்கும் மத்திய இரயில் நிலையத்திற்கு எதிரே ட்ராம் வண்டிகள் வந்து செல்லும். அவற்றுள் விஜிலன்ட் பூங்கா செல்லும் ட்ராம் வண்டியினுள் ஏறி அமர்ந்து கொள்ளுங்கள். பதினைந்து நிமிடப் பயணத்தில் ட்ராம் வண்டி இறுதி நிறுத்தமான விஜிலன்ட் பூங்காவில் உங்களை இறங்கச் சொல்லும். ட்ராம் வண்டியிலிருந்து இறங்கி எதிரே தெரியும் பிரம்மாண்டமான பூங்காவினுக்குள் நுழைந்து கொண்டால் போதும். வேறு உலகிற்கு நீங்கள் செல்வது போல் உணர்வீர்கள்.


பூங்காவின் நுழைவாயிலில் இருந்து நேராகப் பார்த்தால் ஐம்பது மீட்டர் தொலைவில் ஏகப்பட்ட சிற்பங்கள் தெரியலாம். நுழைந்தவுடன் வலப்புறம் திரும்பிப் பாருங்கள். மலர்களுக்கு நடுவே குஸ்தவ் விஜிலன்ட் (Gustav Vigeland) சிலையாய் நின்று கொண்டிருப்பார். தன் வாழ்நாள் முழுவதையும் சிற்பக்கலைக்கு அற்பணித்த நார்வே நாட்டுச் சிற்பி அவர். அங்கிருக்கும் சிற்பங்களையெல்லாம் பார்ப்பதற்கு முன் , அவருடைய வாழ்க்கைக் குறிப்பைச் சுருக்கமாய்ப் பார்த்து விடலாம், வாருங்கள்!1869-ல் நார்வே நாட்டுத் தென்பகுதித் துறைமுகமான மாண்டல் (Mandal) எனும் நகரில் மர வேலைகள் செய்யும் தச்சருக்கு மகவாகப் பிறந்தவர் குஸ்தவ் விஜிலன்ட். இளமையிலேயே ஓவியங்கள் வரையும் திறனும் சிற்பங்கள் செதுக்கும் திறனும் தனது மகனிடம் மிளிர்வதைக் கண்ட குஸ்தவின் தந்தை, இக்கலையை முறையாகப் பயிற்றுவிக்க எண்ணி, குஸ்தவுடன் ஓஸ்லோ சென்று அவருக்கு கலைக் கல்வி வழங்க ஏற்பாடு செய்தார். அப்போது குஸ்தவுக்குப் பதினைந்து வயது. ஆனால் இந்த ஏற்பாடு வெகுகாலத்துக்கு நீடிக்கவில்லை. ஓஸ்லோ சென்ற இருவருடங்களுக்குள் குஸ்தவின் தந்தை மரணமடைந்துவிடவே , குஸ்தவ் ஓஸ்லொ நகரை விடுத்து மீண்டும் மாண்டல் திரும்ப வேண்டியதாயிற்று. சிற்பம் வடிக்கும் வேலைதேடி மீண்டும் ஓஸ்லோவிற்கே சென்ற குஸ்தவிற்கு ஏமாற்றமே காத்திருந்தது. அங்கே உணவிற்கே திண்டாட வேண்டிய நிலைக்குத்தள்ளப்பட்டார். சிற்பங்கள் செய்ய பல்வேறு விதமான வரைவு மாதிரிகளை அவர் உருவாக்கிக் கொண்டிருப்பினும் அவருக்கு உதவி செய்ய எவருமில்லை. இறுதியாய் பிரையினுல்ப் பெர்க்ஸ்லெய்ன் (Brynjulf Bergslien) எனும் சிற்பி அவருக்கு உதவ முன்வந்தார். குஸ்தவின் திறமையைக் கண்ட அவர் குஸ்தவிற்கு பயிற்சி அளிக்கவும் ஒப்புக்கொண்டார்.

அவரிடம் சிற்பக்கலையைச் செயல்முறையாகக் கற்றுக்கொண்ட குஸ்தவ் மாலை நேரக் கலை வகுப்புகளுக்குச் சென்று கற்கவும் தவறவில்லை. பின்னர் மாதியாஸ் ஸ்கீப்ரொக் (Mathias Skeibroks) எனும் சிற்பியிடமும் சில காலம் சிற்பங்கள் செதுக்கும் உதவியாளராகப் பணிபுரிந்தார். 1889 ஆம் ஆண்டின் இறுதியில் அவரது சிற்பங்கள் அடங்கிய முதல் கண்காட்சி ஓஸ்லோவில் நடைபெற்றதாம்.


இளவயது குஸ்தவ்

பின்னர் டென்மார்க்கின் தலைநகர் கோபன்ஹேகனுக்குச் சென்ற குஸ்தவ் அங்கும் கலை பற்றி கற்கவும், சிற்பங்கள் உருவாக்கவும் செய்திருக்கிறார். அதன் பின் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகருக்குச் சென்று அங்கும் பல சிற்பக்கலை விற்பன்னர்களின் படைப்புகளைப் பார்த்தும், அவர்களுடன் பணிபுரிந்துமிருக்கிறார். புகழ்பெற்ற பிரெஞ்சுச் சிற்பியான ஆகஸ்ட் ரோடின் (August Rodin) என்பவரின் படைப்புகளைக் கண்டு, அவருடன் பழகும் வாய்ப்பும் குஸ்தவிற்கு ஏற்பட்டிருக்கிறது. குஸ்தவின் சிற்பங்கள் பலவற்றினுக்கு ரோடினின் சிற்பங்கள் ஒரு உந்து சக்தியாக, முன் மாதிரியாக இருந்திருக்கின்றன, ரோடினின் "நரகத்தின் கதவுகள்" எனும் சிற்பப்படைப்பு குஸ்தவை மிகவும் கவர்ந்திருக்கிறது. ரோடினின் காமச்சுவை ததும்பும் சிற்பங்களின் வடிவமைப்பில் மயங்கிய குஸ்தவ் பின்னாளில் அது போலவே தானும் பல்வேறு சிற்பங்கள் செய்திருக்கிறாராம். பின்னர் இத்தாலி நாட்டின் பல நகரங்களுக்கும் சென்று அந்நாட்டின் சிற்பக்கலை பற்றியெல்லாம் பார்த்தறிந்திருக்கிறார்.

மீண்டும் ஓஸ்லோ திரும்பிய குஸ்தவ் சில சிற்பக் கண்காட்சிகள் நடத்தியிருக்கிறார். அவை கலாரசிகர்களிடையே வரவேற்புப் பெற்றாலும் , பொருளீட்டும் வண்ணம் அமையவில்லை. எனவே தேவேலாயங்களுக்குச் சிற்பங்கள் வடியமைக்கும் வேலையிலமர்ந்தார். அவரது சிற்பத்திறன் பற்றிய புகழ் கொஞ்சம் கொஞ்சமாக நார்வே நாட்டில் பரவ ஆரம்பித்தது. 1900 முதல் 1910 வரையிலான காலகட்டத்தில் புகழ்பெற்ற நார்வே நாட்டுத்தலைவர்கள், அரச குடும்பத்தினர் ஆகியோரது உருவச்சிலை வடிக்கும் பணியில் ஈடுபட்டார் குஸ்தவ். நார்வே நாட்டின் தலை சிறந்த சிற்பி என்ற பெருமையை அப்போதே பெற்றவரானார். பின்னர் ஓஸ்லோ நகர சபையினர் ( 1924-ல்) , ஓஸ்லோவின் பெரிய பூங்காவான ப்ரோக்னெர் பூங்காவில் (Frogner Park) அவருக்கு இடமொதுக்கி அங்கு சிற்பக்கூடம் ஒன்றையும் உருவாக்கித் தந்தனர்.

அப்போது முதல் தன் வாழ்நாளின் இறுதி வரை (1943) அப்பூங்காவிலேயே சிற்பங்கள் செய்வதில் ஈடுபட்டிருக்கிறார், அவர் அப்போது வடிவமைத்த சிலைகள் தான் இன்று அப்பூங்காவினை அலங்கரித்துக்கொண்டிருக்கின்றன. அவரது மரணத்துக்குப்பின் ப்ரோக்னெர் பூங்கா குஸ்தவின் பெயர் கொண்டு விஜிலென்ட் பூங்கா (Vigeland park) என்றே அழைக்கப் பட்டு பொது மக்கள் பார்வைக்கென திறந்துவிடப்பட்டது.

சரி, குஸ்தவின் சிலையிலிருந்து புறப்பட்டு சற்று முன்னோக்கிச் செல்வோம். மொத்தம் இருநூற்றுப் பன்னிரெண்டு சிலைகள். கிரானைட் ,வெண்கலம் மற்றும் சில இரும்பாலானவை. அவரது பிரெஞ்சுப் பயணத்தில் கிடைத்த அனுபவங்களே சிலைகளாயிருக்கின்றன. வாழ்க்கை எனும் அலையினுள் அகப்பட்டு அல்லாடும் மனித இனத்தின் அனைத்து உணர்ச்சிகளையும் சிலையாய் வடித்துள்ளார். குழந்தையாய்த் தொடங்கும் பருவம் முதல் கிழடாய் முடங்கும் பருவம் வரை மகிழ்ச்சி, துன்பம், பாசம், காதல். காமம், என எல்லாச் சுவைகளையும் வெளிப்படுத்தும் வண்ணம் சிற்பங்கள் அமைந்துள்ளன. "இஸம்" என்று பார்க்கையில் காதல், உணர்வுபூர்வம் மற்றும் இருத்தலியல் (Romanticism ,Emotionalism and Realism) ஆகியவற்றின் அடிப்படையில் இச்சிற்பங்கள் அமைந்திருப்பதாக விவரம் அறிந்தவர்கள் வகைப்படுத்தியிருக்கிறார்கள்.

சரி, அடுத்த பதிவில் அந்தச் சிற்பங்களைப்பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

April 21, 2005

குட்டி ஐரோப்பா

பெல்ஜியத் தலைநகர் ப்ரஸ்ஸல்ஸ் நகரின் முக்கியச் சுற்றுலாத் தலம் குட்டி ஐரோப்பா (Mini Europe).

ஐரோப்பியச் சுற்றுலா செல்ல நினைப்பவர்கள் வந்து செல்ல வேண்டிய இடம் இது. அல்லது ஐரோப்பா முழுவதும் சுற்றிப் பார்க்க நேரம் இல்லாதவர்கள் இந்த இடத்திற்கு மட்டுமாவது வந்து சென்றால் ஐரோப்பிய நகர்களுக்குச் சென்ற திருப்தி நிச்சயம். ஐரோப்பிய நாடுகளின் முக்கியமான் கட்டிடங்களையும் பழமையான சின்னங்களையும் இங்கு காணலாம். அனைத்து சின்னங்களும் அதே வடிவத்தில் அல்ல, சிற்றளவாக்கப் பட்ட (Miniature) வடிவத்தில் காணலாம். பெரும்பாலான சின்னக்கள் 1:25 என்ற விகிதத்தில் சிற்றளவாக்கப் பட்டவை. ஒன்றிரண்டு சின்னங்கள் மேலும் குறைந்த விகிதத்தில், உதாரணமாய் இத்தாலி நாட்டில் எரிமலைத் தொடரான வெசுவியஸ் 1:1000 என்ற விகிதத்தில் சிற்றளவாக்கப் பட்டிருக்கிறது. முன்னூறுக்கும் மேற்பட்ட மாதிரிகள் இங்கு வைக்கப்பட்டுள்ளன.

ப்ரஸ்ஸல்ஸ் நகரின் பாதாள இரயிலில் (மெட்ரொ) பிரயாணித்து நகரின் சற்றே வெளிப்பகுதியில் அமைந்த இந்தக் குட்டி ஐரோப்பாவிற்கு நானும் எனது நண்பனும் வந்தடைந்தோம். இதற்கருகே மிகப்பெரிய உருவில் அடாமியம் (Atomium) அமைந்திருந்தது. நேரப்பற்றாக்குறையினால் இந்த அணுவகத்தினுள் செல்ல இயலவில்லை. அணுவின் அமைப்பு போல் வடிவமைத்திருந்தார்கள். 1958-ல் ப்ரஸ்ஸல்ஸ் நகரில் நடந்த ஒரு பொருட்காட்சியின் போது உருவாக்கப்பட்டதென்கிறார்கள்.பெரிய வரிசையில் நின்று குட்டி ஐரோப்பாவிற்கு நுழைய அனுமதிச்சீட்டு பெற்று உள்ளே நுழைந்தோம். வாண்டுகளின் எண்ணிக்கை அதிகமாகவே இருந்தது.

லண்டனின் அரச பரம்பரையினர் வசிக்கும் பக்கிங்கம் அரண்மனையைக் காவல் புரியும் சீருடை வீரர்கள் போல் ஒரு சிலை . தலைப்பகுதியில் வெற்றிடம். அங்கே நீங்கள் உங்கள் தலையை நுழைத்து, காவலாளி போல் ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம்.இங்கிலாந்துப் பார்லிமென்ட் கட்டிடம், அதனைத்தொடர்ந்து அதனருகே உலகப்புகழ் பெற்ற பிக் பென் "மணி"க் கோட்டை.உலக அதிசயங்களுள் ஒன்றான பாரிஸ் நகரத்து ஈபிள் கோபுரம். நேரில் பார்த்தால் 300 மீட்டர் உயரம். இங்கே உயரங்குறைக்கப் பட்டு 12 மீட்டர் மாதிரியாகத் தோன்றினாலும் பிற சின்னங்களின் நடுவே , இந்தச் சிற்றளவாக்க மாதிரியே மிகப்பெரியதாகத் தோன்றியது.

பாரிஸின் மற்றொரு வரலாற்றுச் சின்னமான வெற்றி வளைவு-ம் (Arch De Triumph)காணலாம்.ஜெர்மன் தலைநகர் பெர்லினின் பிரான்டன்பர்க் கோட்டை மற்றும் பெர்லின் சுவர் ஆகியவையும் காணலாம். எல்லாச் சின்னங்களையும் அப்படியே மாதிரியாய்க் காட்டினால் சுவாரஸ்யம் குறைந்து போய் விடும் என்று கருதிய அமைப்பாளர்கள் விறுவிறுப்பைக்கூட்ட சில பாவனையாக்க மாதிரிகளையும் (Simulated) அமைத்திருக்கிறார்கள். ஐரோப்பாவின் வேகமான இரயில் "தாலிஸ்" . சிறு தண்டவாளம் அமைக்கப்பட்டு அதன் மீது தாலிஸ் வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஆம்ஸ்டர்டாம் நகர வீதிகளின் நடுவே ஓடும் வாய்க்கால்களில் செல்லும் படகுகளைப்போல மாதிரிகளையும் காணலாம். இத்தாலி நாட்டு எரிமலை வெசுவியஸ் திடீரென்று வெடித்து வெளியேறுகிறது.

நம்ம ஊர் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போல் அமைந்த ( சற்று வேறுபட்ட ) ஸ்பெயின் நாட்டுக் காளை அடக்குப் போட்டி நடைபெறும் காளை வளைவு (Bull Ring ) ஒன்றின் மாதிரி அமைக்கப்பட்டு அந்த அரங்கத்தினுள் ஆயிரக்கணக்கான மக்கள் போட்டியினை இரசிப்பதுபோல் அமைந்துள்ளது. அடிக்கடி இரசிகர்கள் எழுப்பும் ஒலியான "ஒலே"(Olé) பின்னணியில் ஒலிக்கப்படுகிறது.பைசா (Pisa) நகரத்துச் சாய்ந்த கோபுரமும் , வெனிஸ் நகர வீதிகளில் மிதக்கும் படகுகளும் இங்குண்டு.ப்ரஸ்ஸல்ஸ் நகரின் அரண்மனைகளின் மாதிரியும் அவ்வரண்மனைகள் அமைந்துள்ள இடமான பேரிடத்தின் (Grand place) மாதிரியும் உண்டு. இந் நகரின் விமான நிலையத்தையும் இங்கே காண முடிகிறது. கோபன் ஹேகன் நகரின் பங்குச் சந்தைக் கட்டிடம் விமான நிலையத்திற்கு எதிரே அமைந்திருக்கிறது. ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தயாரிப்பான ஏரியன் ராக்கெட் புறப்படத்தயாராக செலுத்துதளத்தில் நிற்கிறது. கிரேக்க நாட்டுத் தலைநகர் ஏதென்ஸ் நகரின் வரலாற்றுப் புகழ் பெற்ற அக்ரொபோலிஸ் குன்றில் அமைந்துள்ள பழஞ்சின்னங்களையும் காணலாம்.

முப்பரிமாணத் திரைப்படங்களைத் திரையிடும் ஐ-மேக்ஸ் திரையரங்கும் இங்கு உள்ளது.

April 13, 2005

பின்லாந்து - 5

அக்ஸெலி மியூஸியத்திலிருந்து ஒரு வாடகைக்கார் மூலம் பயணித்து ஒரு பெரிய பூங்காவினை அடைந்தோம். இந்தப்பூங்காவினில் ஒரு நினைவகம் அமைந்துள்ளது. கலேவலாப் பாடல்களுக்கு இசையமைத்த ஜீன் ஸிபிலியஸ்-க்கு (Jean Sibelius)இங்கு ஒரு நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.சற்று வித்தியாசமான நினைவகம்.இசையமைப்பாளருக்கு ,இசைக்கருவியின் வடிவில் ஒரு நினைவுச் சின்னம். ஆர்கன் பைப் (Organ pipe)போன்ற அமைந்த பெரிய பெரிய குழாய்கள். மொத்தம் அறுநூறு குழாய்கள், துருப்பிடிக்காத இரும்பினால் ஆனவை.ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டு சுமார் பத்து மீட்டர் உயரத்திற்கு பிரம்மாண்டமாய் அமைந்திருக்கின்றது. இத்தனைக்கும் சிபிலியஸ் ஆர்கன் பைப் கொண்டு எந்தவொரு இசைத்தொகுப்பையும் வெளியிட்டதில்லை என்கிறார்கள். இந்த இரும்புக்குழாய்கள் ஒரு பாறை மீது அமைக்கப்பட்டிருக்க அருகே சிபிலியஸின் தலைச் சிலை, அதுவும் துருப்பிடிக்கா இரும்பினால் அமைக்கப் பட்டிருக்கிறது.தொண்ணூற்று ஒரு ஆண்டுகள் வாழ்ந்து, பின்லாந்தின் தலைசிறந்த இசையமைப்பாளராய் அறியப்படும் ஜீன் சிபிலியஸ் 1957-ல் மரணம் அடைந்தார். ஏழு ஸிம்பொனி இசைத்தொகுப்புகளை வெளியிட்டவர். கலேவலாப் பாடல்களுக்கும் இசை அமைத்துத் தொகுப்புகள் வெளியிட்டார். இவரது மறைவுக்குப் பின் இவருக்கு நினைவுச் சின்னம் அமைக்க விரும்பிய சிபிலியஸ் சொஸைட்டி அங்கத்தினர்கள் , சிறந்த சின்னம் வடிவமைக்கும் பொருட்டு ஒரு போட்டியினை அறிவித்தனர். பலத்த போட்டிக்கிடையே எய்லா ஹில்துனென் (Eila Hiltunen) எனும் பெண்மணி வடிவமைத்த , இந்தக் குழாய் வடிவச் சின்னம் தேர்ந்தெடுக்கப்பட்டது. இதற்குப் பரவலாய் எதிர்ப்பும் இருந்ததாம். அவரது உருவச் சிலை இதில் இடம் பெற வேண்டுமென பலரும் வற்புறுத்தவே, இந்த வித்தியாச வடிவமைப்புடன் அவரது உருவச் சிலையும் சேர்க்கப்பட்டது. சுமார் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாய் இதனை மிகக் கவனமுடன் வடிவமைத்து 1961-ல் இச்சின்னம் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. சுமார் முப்பத்தைந்து ஆண்டுகளாய் இன்னும் புத்தம் புதிதாய் அந்த நினைவுச் சின்னம் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.

பூங்காவிலிருந்து வெளியேறி அவ்வழியே சென்ற ட்ராம் வண்டியிலேறி மீண்டும் நகரின் முக்கியப்பகுதியான சந்தைக்கு வந்தோம். ஞாயிற்றுக் கிழமையாதலால் சந்தை பரபரப்பாய் இல்லை. அருகிலிருந்த இன்னொரு தேவாலயம் கண்ணைக் கவரவே அங்கு சென்றோம்.உஸ்பென்ஸ்கி தேவாலயம் (Uspenski)என்றிதற்குப் பெயர். ரஷ்யர்கள் பின்லாந்தை ஆட்சி செய்தபோது கட்டப்பட்டதாம்.கட்டப்பட்ட ஆண்டு 1868. மற்ற ஐரோப்பிய தேவாலயங்களின் கட்டுமான முறையிலிருந்து ரஷ்யர்களின் கட்டுமான முறை வேறுபட்டு அமைந்திருக்குமாம். இந்தத் தேவாலயம் ரஷ்யமுறைப்படி அமைந்த தேவாலயங்களில் பெரிய ஒரு ஆலயம்.

தேவாலயத்தின் கலசம் வெங்காய வடிவிலமைந்தது. மொத்தம் பதிமூன்று கலசங்கள் இதுபோன்று வெங்காய வடிவிலானவை. இயேசு மற்றும் அவரது பன்னிரெண்டு சீடர்களை உணர்த்தும் வகையில் அமைத்திருப்பதாய்ச் சொன்னார்கள். தேவாலயத்திற்குள் வண்ணமயமான பல ஓவியங்கள். இயேசுவின் வாழ்க்கை நிகழ்வுகளில் சிலவற்றைச் சித்தரிக்கும் ஓவியங்கள் , புத்தம் புதிது போல் பளபளப்பாயிருந்தன.

இது உட்புறம் வழியாகத் தேவாலயத்தின் உச்சியைக் காட்டும் படம்.


பின்னர் ஹெல்ஸின்கியின் முக்கிய வீதிக்கருகிலேயே அமைந்திருக்கும் அட்டெனியம் (Atteneum) எனும் கலைக் கூடத்திற்குச் சென்றோம். பின்லாந்தின் மிகப்பெரிய, சிற்ப மற்றும் ஓவியக் கண்காட்சியகம் இது. பின்லாந்தின் புகழ்பெற்ற ஓவியர்கள், சிற்பிகளின் ஆக்கங்களுடன் உலகப்புகழ் பெற்ற பல ஓவியர்களின் படைப்புக்களும் இங்கு பார்வைக்குக் கிடைக்கின்றன. அக்ஸெலி மியூசியத்திலிருந்த உதவியாளர் சொன்னது போல் அக்ஸெலி காலன் கலேலாவின் புகழ் பெற்ற கலேவலா ஓவியங்கள் இங்கு காணக்கிடைக்கின்றன.

கீழ்க்காணும் ஓவியம், கலேவலாவின் கதைநாயகன் வைனாமொயினனுக்கும் ஐனோ எனும் பெண்ணிற்கும் நடைபெற்ற உரையாடலைச் சித்தரிப்பது. தன்னை மணந்துகொள்ளும் படி கேட்ட வைனாமொயினனை மறுத்து, அவனை மணப்பதைவிட மரணம் மேல் என்று கருதி நீரில் மூழ்கி விடுகிறாள்.கீழேயுள்ள இவ்வோவியம் மரண வாசலில் இருக்கும் லெம்மின்கைனன் என்பவனின் தாயார் அவனை உயிர்ப்பிக்கும் முயற்சியில் இருப்பதைச் சித்தரிக்கிறது.


இது போருக்குப் புறப்படும் குல்லர்வோ


இன்னும் இதுபோலப் பல ஓவியங்கள், சிற்பங்கள் என அழகாக விரிந்தது அட்டெனியம்.

எங்கள் பயணத்தின் இறுதியாக ,இன்னும் ஒரு தேவாலயத்திற்குச் செல்லப் புறப்பட்டோம். இது மிகவும் வித்தியாசமான ஒரு தேவாலயம். டெம்பலியௌகியோ தேவலாயம் (Temppeliaukio) என்றிதற்குப் பெயர். குகைக்குள் அமைக்கப்பட்ட ஒரு ஆலயம் போன்ற ஒரு தோற்றம்.கற்களால் செய்த தேவாலயம் என்றும் இதற்குப்பெயர். சுவர் முழுவதும் கற்கலால் ஆனது. தாமிரத்தாலான இதன் கூரை அரைக்கோள வடிவமுடையது. தேவாலயத்திற்குள் நுழைந்தால் அதன் வித்தியாசமான கற்சுவர்களும் தாமிரக்கூரையும் வியப்பளித்தன. இசைக்கருவியான ஆர்கன் (Organ) மிகப்பிரம்மாண்டமான தோற்றத்தில் அமைக்கப்பட்டிருக்கின்றது.


படம்: தேவாலயத்தின் தாமிரக்கூரை

நிறைய இறை-இசை நிகழ்ச்சிகள் இங்கே நிகழ்வதுண்டாம். நாஙள் அங்கே சென்ற வேளையிலும் ஒரு சீருடை இசைக்குழு பக்திப்பாடல்களை இசைத்துக்கொண்டிருந்தது.

இத்துடன் எங்கள் பின்லாந்துப் பயணத்தை முடித்துக் கொண்டு விமான நிலையம் திரும்பினோம். ஒன்றரை மணி நேரப் பயணம் முடித்து கோபன்ஹேகன் இறங்குகையில் குளிர்ந்த காற்று எங்களை வரவேற்றது.

March 22, 2005

பின்லாந்து - 4

பின்லாந்து நாட்டின் தேசிய காவியம் "கலேவலா" பற்றி உங்களில் பலர் அறிந்திருக்கக் கூடும் . பின்னிஷ் மொழியிலிருந்து தமிழுக்கு ஆர். சிவலிங்கம் என்கிற உதணன் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்ட நூலையும் பலர் படித்திருக்கலாம். மதுரைத்திட்டத்தின் தொகுப்பில் இப்புத்தகம் இடம் பெற்றுள்ளது. எனினும், கலேவலா பற்றி ஒரு சிறிய அறிமுகம் தருகிறேன்: நீண்ட நெடுங்காலமாய் ஸ்வீடனின் ஆட்சிக்குட்பட்ட பகுதியாக பின்லாந்து இருந்து வந்தது. ஆட்சி மொழி ஸ்வீடிஷ்தான். மக்கள் விரும்பினால் பின்னிஷ் மொழியைப் படித்துக் கொள்ளலாம். பத்தொன்பதாம் நூற்றாண்டில் பின்லாந்து இரஷ்யா வசம் ஆனது. பின்னர் ஏற்பட்ட சுய விழிப்புணர்ச்சியினால் தங்களது மொழியின் வேர்களையும் பழைய வரலாறுகளையும் மீட்டு , தமது நாட்டின் தனித்தன்மையை மீண்டும் நிலைநாட்ட விரும்பினர். அதன் முயற்சியால் பின்லாந்தின் பழைய கதைகள், வரலாறுகள், நாடோடிப் பாடல்கள் பல தொகுக்கப் பட்டன. பின்லாந்தின் தூர கிழக்குப் பகுதியில் வாழ்ந்த பழங்குடி மக்கள் வெகு காலமாய் அந்த நாடோடிப் பாடல்களைப் பாடி வருவது அறிந்து அவற்றைத் தொகுத்துக் காவியமாக்க விருப்பம் கொண்டனர். அவ்வாறு தொகுத்தவர்களுள் எலியாஸ் லொன்ராத் (Elias Lönnrot) என்பவர் மிக முக்கியமானவர். அடிப்படையில் அவர் ஒரு மருத்துவர் எனினும் தாய்மொழியில் கொண்ட காதலால், மொழிப்பேராசியராகப் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்தார். பின்லாந்தின் வெகு பழமையான நாடோடிப்பாடல்களை எல்லாம் தொகுக்க எண்ணி பல இடங்களுக்கும் பயணம் செய்தார். அங்கு வாழ்ந்த கிராம மக்கள் பாடிய பாடல்களையெல்லாம் தொகுத்தார். இப்பாடல்களின் தொகுப்பு 1835-ல் வெளியானது. பின்லாந்துப் பள்ளிக்களில் பாடமானது இத்தொகுப்பு. பின்னர் மேலும் பல பாடல்களைத் தேடிச் சேகரித்த எலியஸ் விரிவான மற்றொரு தொகுப்பை வெளியிட்டார். பின்லாந்து நாட்டின் தேசிய காவியமாக இப்பாடல் தொகுப்பு அறிவிக்கப் பட்டு , கலேவலா நாள் (Kalevala Day) ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 28-ஆம் நாள் கொண்டாடப் பட்டு வருகிறது. "லார்ட் ஆப் த ரிங்ஸ்" எழுதிய ஜே. ஆர். ஆர். டால்க்கீன் - அவருக்கு மிகவும் பிடித்த தொகுப்பு கலேவலா. அவரது ஸில்மாரில்லியான் - எனும் புத்தகத்தில் கூட கலேவலாவின் கருத்துக்கள் சிலவற்றைக் காணலாம். இப்பாடல்களுக்கு இசை வடிவம் கொடுத்தவர் சிபிலியஸ்(Sibelius) எனும் இசைமேதை. கலேவலா காவியத்தின் பல பாடல்களுக்கு ஓவிய வடிவம் கொடுத்தவர் அக்ஸெலி காலன் கலேலா (Akseli Gallen-Kallela) எனும் புகழ் பெற்ற ஓவியர்.

நிற்க, எங்களது பின்லாந்துப் பயணத்தின் அடுத்த நாள்- அக்ஸெலி காலன் கலேலா வசித்த, தற்போது ஒரு அருங்காட்சியகமாகப் பாதுகாக்கப்படும் வீட்டிற்குச் சென்று வரப் புறப்பட்டோம். ஹெல்ஸின்கியின் மேற்கு எல்லையில் அமைந்திருக்கும் சிறிய நகரான எஸ்பூ (Espoo) விற்கும் ஹெல்ஸின்கிக்கும் நடுவே தர்வஸ்பா (Tarvaspaa) எனும் இடத்தில் அக்ஸெலி வசித்த வீடு அமைந்திருக்கிறது. ட்ராம் வண்டியொன்றில் ஏறிப் பயணித்தோம். ட்ராம் வண்டியின் கடைசி நிறுத்தத்தில் இறங்கினால் அருங்காட்சியகம் செல்லும் வழியை அம்புக்குறியினால் தெரிவித்து இன்னும் 2.6 கிலோமீட்டர் தொலைவு என அறிவித்திருந்தார்கள். நடக்க ஆரம்பித்த சிறிது நேரத்தில் அடர்ந்த காடு எதிர்ப்பட்டது. காட்டிற்கருகே , அதனை ஒட்டிய வண்ணம் சலசலத்துக் கொண்டிருந்தது கடல். லாயலஹ்தி விரிகுடா என்றதற்குப்பெயர். சில இடங்களில் கடற்கரை மணல் வெளியும் தென்பட்டது. நாங்கள் சென்ற பாதை மேடு பள்ளமாய் அமைந்திருந்தது. காலை நேரத்தில் சைக்கிளிலும், நடந்தும் உடற்பயிற்சி செய்பவர்களுக்கு ஏற்ற இடம். வழி நெடுக நடையோட்டம் செய்து கொண்டிருந்தவர்கள் எங்களைக் கடந்து சென்றனர். ஓரிடத்தில் கடல் மிகக் குறுகலாய் இருக்க அதன் மீது ஒரு மரப்பாலம் . நாங்கள் வந்த பாதை சரியானது தானா என எதிர்ப்பட்ட ஒருவரிடம் விசாரிக்க , அவர் பாலத்தைக் கடந்து மறுபுறம் செல்லும்படி கூறினார். பாலத்தைக் கடந்தவுடன் சற்று விசாலமான சாலைகள். வளைந்து நெளிந்து உயர்ந்து சென்றது. சாலைகளின் இருமருங்கும் பசுமரங்கள் (Spur) ஓங்கி உயர்ந்து நிழல் சேர்த்தன. ஜூலை மாத காலை வெய்யில் சுள்ளென்று சுட்டது. தொடர்ந்த சாலையில் விலகிச் சென்ற ஒரு சரிவான பாதை. இயற்கையோடு இயைந்து வாழ நினைத்தே ஓவியர் அக்ஸெலி இவ்விடத்தைத் தேர்ந்தெடுத்து வாழ்ந்திருக்க வேண்டும். இறுதியாய் ஒரு சிறிய வீடு - சிறிய கோட்டை போன்ற அல்லது சிம்னி போன்ற உச்சியைக் கொண்ட வீடு எங்கள் முன் தென்பட்டு , இது தான் நீங்கள் தேடி வந்த காட்சியகம் என்றது.இவ்வளவு தூரம் கடந்து நாங்கள் இந்த அருங்காட்சியகத்திற்கு வந்தது அருங்காட்சியக் ஊழியர்களுக்கு வியப்பை அளித்திருக்கக் கூடும், ஆச்சரியத்துடன் வரவேற்றார்கள். நுழைவுக்கட்டணம் செலுத்தி வீட்டினுள் நுழைந்தோம். அக்ஸெலியின் வீடு மற்றும் ஓவிய அறையாக-, இரு பயன்பாடுகட்கும் இவ்விடம் பயன்பட்டிருக்கிறது. அருங்காட்சியகத்தைச் சுற்றுப்பார்க்கும் முன் அக்ஸெலி காலன் கலெலாவின் வாழ்க்கையச் சிறிது விரைவாகப் புரட்டிப்பார்க்கலாமா?1865 -ல் பிறந்த இவர் இளவயதில் ஓவியம் மற்றும் பின்னிஷ் நுண்கலைகள் பற்றிய படிப்பைத் தேர்ந்தெடுத்துக் கற்றிருக்கிறார். பின்னர் பாரிஸ் சென்று அங்கும் ஓவியம் படித்திருக்கிறார். 1890-ல் திருமணம். பின்னர் பெர்லினில் நடந்த ஓவியக் கண்காட்சியில் இவரது படைப்புக்கள் பிரசித்தி பெற்றனவாம். 1900 முதல் கலேவலாவின் கதைக்காட்சிகளை ஓவியங்களாய்த் தீட்ட ஆரம்பித்திருக்கிறார். ஹங்கேரி, பிரான்ஸ், ஜெர்மனி, கென்யா போன்ற நாடுகளுக்குப் பயணித்து ஓவியக் கண்காட்சிகள் நடத்தியிருக்கிறார். புதிய பல ஓவிய நுட்பங்களையும் கற்றிருக்கிறார். 1911-ல் இந்த வீடு கட்டப்பட்டது. பின்னர் 1920 -ல் வெளிவந்த கலேவலா- புத்தகத்தை இவரது ஓவியங்கள் அலங்கரித்தன. அமெரிக்காவிற்கு இருமுறை பயணம் செய்து வந்திருக்கிறார். அமெரிக்கக் கலை, கலச்சாரம் பற்றிக் கற்றுத் திரும்பியிருக்கிறார், கலேவலா தவிர பிற ஓவியங்களும் சிற்பங்களும் அமைத்திருக்கிறார். 1931-ல் கோபன் ஹேகன் சென்று திரும்புகையில் உடல்நிலை சீர்கெட்டு ஸ்டாக்ஹோமில் மரணமடைந்தார்.அருங்காட்சியகத்துள் நுழைந்ததும் முதல் அறை அவர் ஓவிய அறை. சுற்றிலும் பல்வேறு ஓவியங்கள். அவரது உருவத்தை அவரே வரைந்த ஒரு படமும் உண்டு. அவரது மனைவியைய் மற்றும் தாயின் உருவங்களையும் வரைந்திருக்கிறார். வரையப் பயன்படுத்திய அச்சு ஒன்று, லண்டனில் இருந்து தருவித்தது - இன்னும் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது. இது தவிர, அக்ஸெலி ஓவியம் வரையப் பயன்படுத்திய பொருட்கள் பலவும் காணக் கிடைக்கின்றன. ஓவியம் வரையும் சாய்பலகையும் இருந்தது. அந்த அறையைக் கடந்து அடுத்த அறையினுள் கலேவலாக் கதை ஓவியங்கள் ஒன்றிரண்டு தென்பட்டன. கலேவலாக் கதையின் நாயகனான வைனாமொயினன் படகிலேறி வடக்கு நோக்கிச் சென்றதைச் சித்தரிக்கும் ஒரு ஓவியம் இருந்தது.பின்னர் சுழல் படிகள் ஏறி மாடி அறைக்குச் சென்றால் படிகளை ஒட்டிய ஒரு அறை- குளியல் அறை. அமெரிக்கா சென்று திரும்பியதும் அங்கிருந்த குளியல் அறைகளைப் போல மாற்றி அமைத்துக் கட்டியதாம் இது. உச்சியில் அவரது படிப்பறை. அந்த அறையில் ஜன்னல் வழியே வெளியே பார்த்தால் அவ்விடத்தின் இயற்கை அத்தனையும் கண்ணுக்குள் விரிகிறது. அறையினுள் அக்ஸெலி படித்த புத்தகங்கள் சிலவும் அவர் விளையாடப் பயன்படுத்திய பழைய டென்னிஸ் மட்டைகளும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இன்னொரு குட்டி அறை. அதிலும் பல ஓவியங்கள். பின்னிஷ் மொழியில் கலேவலாப் பாடல் வரிகள் எழுதப் பட்டிருக்க அவ்வரிகள் ஓவியமாக்கப்பட்டிருந்தன.அக்ஸெலி பற்றிய புத்தகங்களும் ஓவியக் குறிப்புகள் பற்றிய புத்தகங்களும் நிறைய இருந்தன. ஆனால் அனைத்தும் பின்னிஷ் மொழியில் இருந்தன. அங்கிருந்த உதவியாளரிடம், கலேவலா ஓவியங்கள் இங்கு குறைவாக இருப்பதைக் குறிப்பிட்டோம். ஹெல்ஸின்கி நகரின் மத்தியில் இருக்கும் அட்டெனியம் எனும் கண்காட்சியகத்தில் நிறைய இருப்பதாய்க் கூறினார்.

March 14, 2005

பின்லாந்து - 3

தீவுக்கூட்டங்களைச் சுற்றி முடித்துவிட்டு மீண்டும் ஹெல்ஸின்கி செல்லும் படகுக்காய்க் காத்துக்கொண்டிருக்கையில் ஒரு வயதான பாட்டி எங்களுடன் பேச்சுக் கொடுத்தார். "இந்தியாவிலிருந்து எங்கள் நாட்டைப் பார்ப்பதற்கா இத்தனை தூரம் வந்தீர்கள்" என்று ஆச்சரியம் பொங்கக் கேட்டார். நாங்கள் ஸ்வீடனில் வசிப்பதாய் மறுமொழி சொன்னோம். ஸ்வீடனில் என்ன செய்கிறீர்கள் , எங்கு பணிபுரிகிறீர்கள் என்றெல்லாம் கேட்டுக் கொண்டு வந்தார். ஸோனி எரிக்ஸனில் பணி புரிவதாய்க் கூறியவுடன் " அப்படியானால் நீங்கள் எங்களது போட்டியாளர்கள்" (செல்பேசி தயாரிப்பில் முதலிடம் வகிக்கும் நோக்கியா பின்லாந்து நாட்டில் பிறந்த நிறுவனம்) என்று விளையாட்டாய்க் கூறிச் சிரித்தார்.

ஹெல்ஸின்கி நகர் அடைந்து பேருந்து நிலையம் தேடி நடந்து சென்றோம். மார்க்கெட் சதுக்கத்திலிருந்து நேராகச் செல்லும் முக்கிய வீதியில் வழியெங்கும் பச்சை மரங்களும் சிலைகளும் கடந்து செல்ல நடந்து கொண்டிருந்தோம். ஒரு சிறிய மேடை அமைக்கப்பட்டு பின்லாந்திய இசை நிகழ்ச்சி ஒன்றை வழியில் கண்டோம். தொடர்ந்து செல்கையில் ஒரு பெண் நாய், பூனை முதலியவை கொண்டு சிறு சிறு வித்தைகள் காட்டி, கூடிய கூட்டத்தினை மகிழ்வித்துக்க் கொண்டிருந்தாள்.பேருந்து நிலையம் அடைந்து பொர்வூ (Porvoo) எனும் சிற்றூர் செல்லும் பேருந்தில் அமர்ந்தோம். சுமார் ஒரு மணி நேரப் பயணம். கடல் வழியாகவும் பொர்வூ செல்லலாம் . ஆனால் பயண நேரம் அதிகமாகும். பொர்வூ -வில் நிறைய மர வீடுகள் உண்டு. இவற்றைப் பார்த்து வரவே இந்தப் பேருந்துப் பயணம். வழி எங்கும் கோடைக்கால பசுமை இனிமை சேர்த்தது. ஆனால் பொர்வூ-வை நெருங்குகையில் மேகங்கள் கூடி மழை பொழிந்துவிடப் போவதாய் மிரட்டின.

மேடு பள்ளமான நிலப்பகுதியில் அமைந்த ஊர் இது. சரிவுகளில் வரிசையாய் வீடுகள்; பெரும்பான்மையான வீடுகள் மர வீடுகளே. ஊரின் தென்பகுதியில் ஓடும் ஒரு ஆறு. ஊரின் பெயரே ஆற்றின் பெயர். பொர்வூ ஆறு என்றே அழைக்கிறார்கள். ஆற்றினைக் கடக்க அமைந்த வளைவுப் பாலங்கள் அழகாயிருந்தன. ஆற்றின் வழியெங்கும் இளைப்பாறிக் கொண்டிருந்தன பலவகைப்பட்ட இயந்திரப் படகுகள்.தொலைவில் மரங்களர்ந்த ஒரு வனப் பகுதி. ஆற்றின் கரையோரத்திலும் நிறைய மரவீடுகள் , வரிசையாய், சின்னச் சின்னதாய் அமைந்திருக்கின்றன. ஆற்றங்கரையில் நடந்து கொண்டிருக்கையில் மழை பெய்ய ஆரம்பித்தது. அருகிருந்த மரத்தினடியில் ஒதுங்கிச் சிறிது நனைந்து மழையை ரசித்தோம். சற்று நேரத்தில் மழை தூறலாக மாறவே தொடர்ந்து நடந்து சென்றோம். குறுகலான வளைவான உயர்ந்து இறங்கும் சாலைகள்; சாலைகளின் இருபுறமும் முற்றிலும் மரத்திலேயே அமைந்த வீடுகள் என வித்தியாசமான ஊர்தான். மேடான இடத்தில் அமைந்த ஒரு தேவாலயம் எதிர்ப்பட்டது. ஒரு திருமணம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.தொடர்ந்த தாழ்வான வீதிகளில் இறங்கி, மீண்டும் பேருந்து நிலையம் அடைந்து ஹெல்ஸின்கி திரும்பினோம். பொர்வூவில் பெய்த மழை இங்கில்லை. வானமும் தெளிவாக இருந்தது. வெய்யிலும் சுள்ளென்று சுட்டது. ஹெல்ஸின்கிக்கு அருகிலுள்ள தீவுக்கூட்டங்களைப் படகிலிருந்து பார்த்துக்கொண்டே செல்லும் ஒரு படகுச் சுற்றுலா தயாராய் இருக்கவே படகிலேறி அமர்ந்தோம்.படத்தில் குறிக்கப்பட்டுள்ள பாதையில் பயணம் அமைந்திருந்தது. படகில் அமைக்கப்பட்டிருந்த ஒலிபெருக்கிகள் ஆங்கிலம், ஸ்வீடிஷ், பின்னிஷ் மற்றும் ஜெர்மனிய மொழிகளில் கடந்து சென்ற இடங்களைப் பற்றிய வர்ணனை வழங்கின. " இடது புறம் நீங்கள் காண்பது, வலது புறத்தில் நீங்கள் காண்பது" என்று சொல்லச் சொல்ல படகில் பயணம் செய்த அனைவரும் வலப்புறமும் இடப்புறமும் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே வந்தோம்.

முதலில் எதிர்ப்பட்டது நாங்கள் ஏற்கனவே பார்த்த சௌமன்லின்னா தீவுக் கூட்டங்கள். அதனைக் கடந்து சென்றால் இன்னொரு தீவு, அதன் பெயர் சான்டாஹமினா(Santahamina). ராணுவ அருங்காட்சியகமும் விலங்குகள் சரணாலயமும் இங்கிருப்பதாய்க் கூறினார்கள். சிறு சிறு தீவுகள் தொடர்ந்து எதிர்ப்பட கடல் சில இடங்களில் குறுகி , தீவுக்கு வழி விடுகிறது. இரண்டு தீவுப்பகுதிகளை இணைக்க ஓரிடத்தில் நகரும் இரும்புப்பாலம் ஒன்றிருக்கிறது. படகுகள் செல்கையில் இப்பாலம் நகர்ந்து வழி விடுகிறது.படகுகள் கடந்தவுடன் மீண்டும் மூடிக்கொண்டு தீவுகளை இணைக்கிறது. வலப்புறம் காணப்பட்ட அடுத்த பெரிய தீவு லாயசலோ (Laajasalo) . உயர்ந்த பல கட்டிடங்களும் , மரங்களும் தென்பட்டன. கடற்கரை மணல்வெளி சூரியக் குளியலுக்கு ஏற்றது.
வளைந்து நெளிந்த , குறுகலான பாதைகளில் படகு பயணித்துத் திரும்பியது. திரும்பும் வழியில் பெரிய பெரிய கப்பல்கள் நின்று கொண்டிருந்தன.பனி உடைக்கும் கப்பல்களாம் இவை. குளிர்காலத்தில் வெப்பநிலை உறைநிலைக்குக் கீழ் பல பாகை செல்ஸியஸ் குறைந்து விடுவதால் கடல்நீர் இறுகி உறைந்து விடுகிறது. உறைந்த பனிக் கட்டிகளை உடைத்துக் கப்பல் பயணம் மேற்கொள்ளும் பணியினை இக்கப்பல்கள் நிகழ்த்துகின்றன. பல மீட்டர் ஆழம் சென்று பனியினை உடைத்து வழி செய்யும் ஆற்றல் மிக்கவையாம் இந்தக் கப்பல்கள்.
சற்று நேரத்தில் படகு , பயணம் தொடங்கிய மார்க்கெட் சதுக்கத்தை அடைந்து நின்றது. இரவு பத்து மணியான பின்னும் சிறிது சூரிய வெளிச்சம் மிச்சமிருந்தது. முக்கிய வீதியிலிருந்த "நமஸ்கார்" எனும் இந்திய உணவகத்தில் இரவு உணவு உண்டு விடுதி திரும்பினோம்.

அடுத்த பதிவிலும் பின்லாந்து தொடர்கிறது.