June 20, 2004

டக்கவ் மரண முகாம் - 2

டக்கவ் முகாமைக் காண நாங்கள் வழிகாட்டியின் துணையுடன் கூடிய (Guided Trip) உலாவினைத் தேர்ந்தெடுத்திருந்தோம். வழிகாட்டியும் இடங்களைப் பற்றி நன்றாகக் குறிப்புகள் கொடுத்ததுடன் அது தொடர்பான மற்ற தகவல்களையும் கூறிக்கொண்டிருந்தார்.

ஹிட்லரைக் கொலை செய்வதற்கு பதினேழு முயற்சிகள் அவரது ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப் பட்டனவாம், அவற்றைத் தவிர , ஹிட்லர் தப்பித்த மற்றொரு சுவையான சம்பவமும் உண்டு. தனியொருவனாய்த் திட்டமிட்டு ( The Lone Assasin) வெடிவைத்துக் கொல்ல சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஜார்ஜ் எல்ஸர் என்பவரின் முயற்சியே அது. மியூனிக் நகரினில் உரை நிகழ்த்த ஒவ்வொரு வருடமும் ஹிட்லர் வருவது வழக்கம். அந்த நிகழ்ச்சியினைத் தன் திட்டத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளத் திட்டமிட்டார் எல்ஸர். ஹிட்லர் உரை நிகழ்த்தவிருந்த மண்டபத்தினைச் செப்பனிட உதவும் தச்சு வேலை செய்பவராகச் சேர்ந்தார். பிறர் அறியாவண்ணம், மேடையின் அருகிலிருந்த தூணிற்குள் நேரவெடி (டைம் பாம்) ஒன்றினை மறைத்துவைத்தார். இந்த வெடியை உருவாக்க சுமார் ஒரு வருடகாலம் முயற்சி செய்ய வேண்டியிருந்ததாம். சம்பவ தினத்தன்று , ஹிட்லரும் வந்தார். மண்டபத்தில் உரையாற்றவும் ஆரம்பித்தார். நம்மூர் அரசியல்வாதிகளைப் போலவே ஹிட்லரும் மணிக்கணக்காய்ப் பேசுவதில் ஆர்வம் கொண்டிருந்தவர். எனவே அவர் வெகுநேரம் பேசுவார் என்று கருதி, எல்ஸர் அவர் பேச ஆரம்பித்து ஒரு மணி பத்து நிமிடங்கழித்து வெடிகுண்டு வெடிக்க கடிகாரத்தில் நேரம் அமைத்திருந்தார். ஆனால் நிகழ்ந்தது வேறு. அன்றைய வானிலை சரியில்லாததால்,பெர்லினுக்கு விமானத்தில் செல்வதற்குப் பதிலாய் இரயிலில் செல்ல ஹிட்லரின் பயணத் திட்டம் மாற்றியமைக்கப் பட்டிருந்தது. எனவே அவர் ஒரு மணி நேரத்திற்குள் தனது உரையை முடித்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பி விட்டார். ஹிட்லர் புறப்பட்ட பன்னிரெண்டு நிமிடங்களில் குண்டு வெடித்துச் சில உயிர்களைப் பலி கொண்டது. எல்ஸரும், சுவிட்சர்லாந்து நுழைய பயணம் செய்யும்போது ஜெர்மனியின் எல்லையில் கைது செய்யப் பட்டு ஒரு மரண முகாமில் அடைக்கப் பட்டார். சில ஆண்டுகள் கழித்துக் கொல்லப்பட்டார்.


டக்கவ் முகாமில் அடுத்ததாக நாங்கள் கண்டது கொல்லப் பட்டவர்களை எரிக்கும் எரியறைகள். உடல் வலு குறைந்து இறந்தவர்கள், சித்திரவதையினால் இறந்தவர்கள் தற்கொலை செய்து கொண்டவர்கள் எனப் பலவகைப் பட்டவர்களையும் எரிக்க இவை பயன்படுத்தப் பட்டன. தினசரி ஏராளமானவர்களை எரிக்க வேண்டியதிருந்ததால் இந்த அறைகள் இராப்பகலாய் புகைந்தவண்ணமிருந்தன. பின் வந்த நாட்களில் சாவு எண்ணிக்கை அதிகரித்தது . மேலும் எரிபொருள் ( நிலக்கரி) கையிருப்பும் குறையவே இறந்தவர்களை பிணவறையில் மலை போல் குவிக்க ஆரம்பித்தனராம் காவலர்கள்.



இந்த அறைகளுக்கு அருகில் விஷவாயு அறையும் உண்டு. கைதிகளை மொத்தமாக இந்த அறைக்குள் அடைத்துவைத்து விஷ வாயுக்களை அறைக்குள் புகுத்திக் கொல்ல இவை அமைக்கப்பட்டன. ஆனால் டக்கவ்-விலிருந்த இந்த விஷவாயு அறை பயன்படுத்தப் படவில்லையாம்.விஷவாயு அறைகளுக்கு அருகில் தூக்கு மேடைகள் அமைக்கப் பட்ட இடங்களும் இருந்தன.

இந்த இடங்களைத் தவிர புகைப்படங்களின் தொகுப்பு அடங்கிய ஒரு காட்சியகமும் உண்டு. 1900 க்குப்பின் ஜெர்மனியில் நிகழ்ந்த நிகழ்வுகளின் பதிவு அது. ஹிட்லரின் கட்சி வளர்ந்த விதம், ஹிட்லரின் வெற்றி, அவரது பதவி ஏற்பு என அனைத்து நிகழ்வுகளையும் கண்முன் நிறுத்தும் புகைப்படங்களை இங்கு காணலாம். இந்த முகாமின் நிகழ்வுகள் பற்றியும் விரிவான புகைப்படங்களின் தொகுப்பும் உண்டு. கண்ட சில புகைப்படங்களில் மனம் பதைத்தது. ஹிட்லர் காலத்து மருத்துவர்கள் தங்களது சோதனைகளுக்கு இம்முகாமிலிருந்த கைதிகளைப் பயன்படுத்திக் கொண்டனராம். மனித உடல் தாங்கும் குறைந்தபட்ச வெப்பநிலை எவ்வளவு என்ற சோதனையா? ஒரு கைதியைப் பிடித்து சோதனை அறையில் அடைத்து விடுவார்கள். சோதனை அறையின் வெப்பநிலையைக் குறைத்துக் கொண்டே வந்து இறுதியில் உள்ளே அடைக்கப்பட்டிருக்கும் கைதி இறக்கும் வரை சோதனை தொடரும். கைதியின் எதிர்வினைகளை ஒவ்வொரு நிலையிலும் படம் பிடித்து கடைசியில் சோதனை முடிவுகளை ஹிட்லரின் காவல்தலைவர் ஹிம்லருக்கு அனுப்புவார்களாம். மனித உடல் தாங்கும் குறைந்த அழுத்தம் எவ்வளவு என்று பரிசோதனை செய்யவும் கைதிகள் பயன்படுத்தப்பட்டனர். பல்வேறு நிலைகளில் மருத்துவர்கள் பதிவு செய்த புகைப்படங்கள் இங்கே காண்பதற்கு மனதை உலுக்கும். கைதிகளைக் காவலர்கள் இரக்கமின்றித் தண்டிக்கும் படங்கள் , இறந்தவர்களை மலை போலக் குவித்திருக்கும் புகைப்படங்கள் , இறுதியில் நேச நாட்டுப் படைகள் வந்து கைதிகளை விடுவித்தவுடன் ஏற்பட்ட சந்தோஷங்களை வெளிப்படுத்தும் படங்கள் என நிறைய புகைப்படங்கள் இங்கே காணக் கிடக்கின்றன.

எல்லாக் குகைகளின் முடிவிலும் வெளிச்சம் தோன்றுவதைப் போல் டக்கவ் முகாமில் உயிரோடிருந்த மற்றும் சித்திரவதைகளிருந்து உயிர் பிழைத்த கைதிகளுக்கும் ஒருநாள் விடுதலை வந்தது. இரண்டாம் உலகப் போரில் நேச நாடுகள் வெற்றி பெற்று ஜெர்மனிக்குள் முன்னேறினர். ஒவ்வொரு முகாமல் அடைக்கப் பட்டிருந்தவர்களையும் அவர்கள் விடுவித்து சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கச் செய்தனர். டக்கவ் முகாமிற்கு வந்த நேச நாட்டுப் படையினரின் முதல் வேலை அவர்களுக்கு வயிறார உணவு தயாரித்து அளிப்பதாயிருந்தது. மகிழ்ச்சி மிகுதியில் பல ஆண்டுகளுக்குப் பின் வயிறார உணவு உண்ட பல கைதிகள் , அவ்வுணவு வயிற்றுக்கு ஒவ்வாமல் மரணித்த சம்பவங்களும் நிகழ்ந்தனவாம்.



புகைப்படங்கள் அடங்கிய காட்சியகத்திற்கு அருகில் ஒரு சிறிய திரையரங்கும் உண்டு. முப்பது நிமிடக் குறும்படம் இங்கு திரையிடப் படுகிறது. ஹிட்லர் பதவி ஏற்கும் காட்சியுடன் தொடங்கும் இக் குறும்படம் அதற்குப் பின் நிகழ்ந்த கொடுமைகளை நம் கண்முன் நிறுத்துகிறது. இறுதியில் இம்முகாமில் அடைபட்டிருந்தவர்கள் விடுதலையாவதுடன் நிறைவடைகிறது இப்படம்.

மியூனிக் நகர் வரும் அனைவரும் இந்த முகாமிற்கு வந்து வரலாற்றின் பக்கங்களைச் சற்றுப் புரட்டிப் பார்த்துவிட்டுச் செல்லலாம்.

1 Comments:

Blogger ஈழநாதன்(Eelanathan) சொல்கிறார்...

சுவைபடத்தரும்போதுதான் அவலத்தையும் காதுகொடுத்துக் கேட்கமுடியும் என்று நம்பமுடிகிறது

2:36 PM  

Post a Comment

<< Home