சால்ஸ்பர்க் - 1
சால்ஸ்பர்க் (Salzburg) - ஜெர்மனியின் தென் எல்லைக்கு வெகு அருகில் அமைந்த ஆஸ்திரிய நகர். மியூனிக் மாநகரிலிருந்து இரண்டு மணிநேர இரயில் பயணத்தில் சால்ஸ்பர்க்கை அடையலாம். ஜெர்மனி வந்த சில வாரங்களில் நானும் எனது சகாக்களும் முதன்முதலில் இந்நகருக்குத்தான் பயணம் செய்தோம். ஆல்ப்ஸ் மலையின் அடிவாரத்தில் குடிசை போட்டு அமர்ந்திருக்கும் நாடுகளில் ஆஸ்திரியாவும் ஒன்று. குளிர்காலங்களில் உடம்பெல்லாம் வெள்ளைப்பனி ஆடை உடுத்திக் கொண்டும் , வேனிற்காலங்களில் பச்சையாடை அணிந்துகொண்டும் காண்பதற்கு இனிமையான பல இடங்களைக் கொண்டது ஆஸ்திரியா.
ஒரு செப்டெம்பர் மாத வேனிற்காலத்தில் சால்ஸ்பர்க் பயணம் செய்தோம். மியூனிக் நகரிலிருந்து சால்ஸ்பர்க் செல்லும் வழி நெடுகிலும் பசுமை , நீரோடைகள் , மலைச்சரிவுகள் என இயற்கை விரித்த அதிசயங்கள் தொடர்ந்தன. எழில் கொஞ்சும் சால்ஸ்பர்க்கில் தனிச் சிறப்புக்கள் பல இருந்தாலும் முக்கியமான ஒன்று- இசை மேதை மொஸார்ட் பிறந்த ஊர் இதுதான். எனவே நகரின் எந்த மூலைக்குச் சென்றாலும் எதாவது ஒரு குழு அல்லது ஒருவர் இசை வாசித்துக்கொண்டிருந்தார்கள். மொஸார்ட் பிறந்த வீடும் தற்போது அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது.
நகரை இருபகுதிகளாக வகிடெடுப்பது சல்ஸாஹ் (Salzach) எனும் நதி. மிகப்பெரிய நதியல்ல. நதியின் இப்புறத்திலிருந்து அப்புறம் செல்ல, நதியின் குறுக்கே அமைந்த பாலங்கள் பல உண்டு. நதியோரத்தில் நடந்து சென்றால் சலசலத்து ஓடும் நீரின் ஓட்டத்தில் மனமும் ஓடும். நதியிலிருந்து பார்த்தால் எதிரே ஓர் பழைய கோட்டை தெரிந்தது. பதினோராம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஹோஹென்சால்ஸ்பர்க் எனும் மலைக்கோட்டையே அது. பாலம் ஒன்றைக் கடந்து அக்கரை அடைந்து கோட்டை செல்லும் வீதியில் நடந்தோம். சர்ச் ஒன்றும் இவ்வழியில் உள்ளது. செல்லும் வழியெல்லாம் மக்கள் வெள்ளம். அகலமான வீதிகளில் இசை நிரைந்து வழிந்தது. வித்தியாசமான சதுரங்க அட்டையில் இருவர் செஸ் விளையாடிக்கொண்டிருந்தனர். நாம் சாதாரணமாக இரு விரல்களால் நகர்த்தும் காய்களை இரு கைகொண்டு தூக்கி நகர்த்தினர்.
எதிர்பட்டார் மொஸார்ட். அவரது சிலைதான்.
சுமார் 400 அடி உயரமான கோட்டையை அடைய கம்பி மூலம் இயங்கும்(funicular) இரயில் உண்டு. சற்றே சரிந்த பாதை. நிமிட நேரத்தில் உச்சியை அடையும் வேகம். உச்சியை அடைந்ததும் நகரின் மொத்த உருவமும் கண் எதிரில். பறவையின் பார்வை (Bird's View) நகர் மட்டுமல்ல . தொலைவில் தெரிந்த பனியொழுகும் ஆல்ப்ஸ் மலைத்தொடர்களும் தான்.
பதினோராம் நூற்றாண்டில் இந்நகரை ஆண்ட ஆர்ச்பிஷப் ( மன்னர்) கட்டிய இக்கோட்டை மத்திய ஐரோப்பாவின் பெரிய மலைக்கோட்டையாகும். பின்னர் பதினைந்தாம் நூற்றாண்டில் மேலும் விரிவு செய்யப்பட்டது. கோட்டைச்சுவர்கள் மிகவும் தடிமனாக , எந்தவொரு தாக்குதலையும் தாங்கும் வண்ணம் அமைக்கப்பட்டிருந்தன. போர்க்காலங்களில் மக்கள் பாதுகாப்பாக மறைந்து கொள்ளவும் இக்கோட்டை பயன்பட்டது. சில வேலைகளில் இக்கோட்டையின் பெரிய அறைகள் சிறைக்கூடங்களாகவும் மாறின. எல்லா மலைக்கோட்டைகளிலும் இருப்பது போல் இங்கும் ஒரு மியூசியம். பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள், ஆயுதங்கள், உடைகள், மன்னர்களது அறைகள், கட்டில்கள், நாற்காலிகள் என விரிந்தது. குற்றவாளிகளைப் பிடித்து அடைத்து வைத்து அவர்களைச் சித்திரவதை செய்யும் அறைகளும் (Torture rooms) இருந்தன. அவற்றிற்கருகில் இருந்த சில சிறிய அறைகளில் காவலாளிகள் தங்கும் அறைகளுமுண்டு. ஒரு சிறிய திரையரங்கும் பொம்மலாட்டம் நடைபெற்ற ஒரு அறையும் இருந்தன. கோட்டையின் திறந்த வெளிகளில் தற்போது சிறியரக உணவகங்கள் அமைக்கப்பட்டு அதை ஒட்டிய அரங்குகளில் சிம்பனி இசை நிகழ்ச்சிகளும் நடந்த வண்ணம் இருந்தன. ஒரு சிலர் ஆஸ்திரியாவின் பழைய பாரம்பரிய உடையணிந்து நடந்துகொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment
<< Home