June 23, 2004

ஹன்ஸ் குகைகள் - 1



பெல்ஜியம், லக்ஸம்பெர்க் மற்றும் நெதெர்லாந்து (ஹாலந்து) ஆகிய மூன்று நாடுகளும் ஒன்றோடொன்று ஒட்டிக் கொண்டிருக்கும் சிறிய நாடுகள் . மூன்று நாடுகளையும் இணைத்து பீனலக்ஸ் (Benelux) என்று சொல்லுவார்கள்.

இந்தப் பதிவில் நாம் காணப்போவது பெல்ஜியத்தின் தென் பகுதியிலமைந்த ஹன்ஸ் குகைகள்.

பெல்ஜியத்தின் தலைநகரம் ( ஐரோப்பாவின் தலைநகரமும் கூட) ப்ரஸல்ஸ் (Brussles) நகரிலிருந்து லக்ஸம்பர்க் செல்லும் வழியில் அமைந்திருக்கிறது இக்குகை. மேலே தெரியும் வரைபடத்தில் குறிப்பிடும் அளவுக்கு பெரிய ஊர் இல்லை. குகைக்கு அருகே அமைந்த பெரிய நகரம் நாமுர் (Namur). நாமூரைக் கடந்து சிறிது நேரத்தில் இரயில் யெமிலி (Jemille) என்ற சிற்றூரில் நிற்கும்போது இறங்கிக் கொள்ள வேண்டும். யெமிலியிலிருந்து பேருந்துப் பயணம். சுமார் பத்து கிலோமீட்டர் கடந்தால் உங்களை வரவேற்கிறது ஹன்ஸ் சுர் லெஸ்ஸி (Hans-Sur-Lesse) . சற்று வித்தியாசமான பெயர்தான். நான் அங்கே சென்ற நேரம் நல்ல கோடைகாலம், என்றாலும் வழக்கத்திற்கு மாறான குளிரும் மழையும் அன்று பயணத்திற்கு இடையூறாய் இருந்தது.

குகைச் சுற்றுலா செல்ல அனுமதிச்சீட்டு வாங்கி, தயாராக நின்றிருந்த சிறிய செந்நிற ட்ராம் வண்டியில் அமர்ந்தோம். சில்லென்ற குளிர்காற்று முகம் வருட, வண்டி புறப்பட்டது. சரிவான பாதை. குகையின் வாசலை அடைய பத்து நிமிடப் பயணம் . செல்லும் வழியில் பச்சைப் பசேலென்ற புல்வெளியும் , புல் மேய்ந்துகொண்டிருந்த மான்கூட்டங்களும் , வழியெங்கும் அணிவகுத்த உயரமான மரங்களும் மனதை மயக்கின. கீழேயுள்ள படத்தில் காண்பது நாங்கள் பயணம் செய்த ட்ராம் வண்டி. குகை வாசலில் நிற்கிறது.



அனைவரும் இறங்கியவுடன் வழிகாட்டிகள் வரவேற்கிறார்கள். ஜெர்மன், ஆங்கிலம், டச்சு, பிரெஞ்சு என மொழிக்கு ஒரு வழிகாட்டி. சில சமயத்தில் இரு மொழிகட்கு ஒரு வழிகாட்டியும் அமைவதுண்டு. பயணிகளை மொழிவாரியாகப் பிரித்து சிறுசிறு குழுக்களாய் குகைக்குள் அனுப்புகிறார்கள். எங்களுக்கமைந்த வழிகாட்டி ஆங்கிலம் மற்றும் ஜெர்மன் மொழிகளில் குறிப்புகள் அளித்தார். குகைக்குள்ளே குளிர் அதிகம் இருக்கும் என்றார். சற்றே இருட்டாயிருந்த குகைக்குள் ஒவ்வொருவராய் நுழைந்தோம். வெளிச்சம் குறைந்த பல மின் விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தன, சிறு சிறு படிகள் அமைக்கப்பட்டிருக்க கீழே இறங்கினோம். இந்தக் குகை செயற்கையாய்ச் செய்த குகை அல்ல. இயற்கையே அமைத்த குகை. உள்ளே நிறையப் பாறைகள். கற்பாறைகள் அல்ல , அனைத்தும் சுண்ணாம்புப் பாறைகள். வெளிச்ச நிறத்தில் பளிங்கு போல் பளபளத்தன. இவையனைத்தும் மனிதன் போல் வளரும் பாறைகள். குகைக்குள் ஈரக்கசிவு இருப்பதால் பாறைகள் மீது ஈரம் சேர்ந்து பல நூறாண்டுகளாய் வளர்ந்து ஆச்சரியம் கொடுத்தன.



குகையின் தரையிலிருந்து மேல்நோக்கி வளர்வன ( stalagmites) , குகையின் கூரையிலிருந்து கீழ்நோக்கி வளர்ந்து தொங்குவன(stalactites) , திரைச்சீலை (curtain) போல அடுக்கடுக்காய், வளைவு வளைவாய் அமைவன , கண்ணாடிபோல் பளபளக்கும் படிவுப்பாறைகள் , ஈரக்கசிவினால் மினுமினுத்து பாறையின் நுனியில் ஈரம் உறைந்த ( பாதி நீர்த்துளியாகவும் பாதி பாறையாகவும் ) பாறைகள், கத்திபோல் வளர்பவை, செய்து வைத்த சிலைபோல் உருவங்கொண்ட பாறைகள் , யானைத்தந்தம் போல அமைந்தவை என எண்ணிலடங்காப் பாறைகள்.



இந்தக் குகையின் மொத்த நீளம் பதினோரு கிலோமீட்டர்கள் . ஆனால் பாதுகாப்புக்காரணம் கருதி , சுமார் நான்கு கிலோமீட்டர் நீளக்குகைதான் பார்வையாளர்களுக்கு அனுமதிக்கப்படுகிறது.குகை முழுவதும் சுற்றுவதற்கு மரத்திலமைக்கப்பட்ட சிறு சிறு படிகள் , சில இடங்களில் ஏறுவதற்கும் சில இடங்களில் இறங்குவதற்கும் அமைக்கப்பட்டிருந்தன. சுமார் 400 படிகள் உண்டு. சில இடங்களில் குறுக்கிடும் சிறு நீரோடைகளைக் கடப்பதற்கு குறுகிய மரப்பாலங்களும் உண்டு.

மேலும் பல தகவல்களுடன் அடுத்த பதிவிலும் குகை பற்றி எழுதுகிறேன்.

1 Comments:

Blogger ஈழநாதன்(Eelanathan) சொல்கிறார்...

பிரயோசனமான பயணக்கட்டுரை தொடர்ந்து தாருங்கள்

8:36 AM  

Post a Comment

<< Home