July 24, 2004

சால்ஸ்பர்க் - 2


நான்  சால்ஸ்பர்க் வந்த நேரத்தில் ( செப்டம்பர், 2000) ராமராஜனோ , லல்லுவோ இங்கு வந்திருந்தால் மிகுந்த சந்தோசம் அடைந்திருப்பர். நகரம் முழுதும் வண்ண வண்ணப் பசு மாடுகள் நின்றுகொண்டும் அமர்ந்து கொண்டும் இருந்தன, உயிருள்ள பசுக்கள் அல்ல, அனைத்தும் சிலைகள். சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சேர்ந்து நூற்றைம்பது பசுச் சிலைகளை உருவாக்கினர். நகரின் பல்வேறு இடங்களில் இப்பசுச் சிலைகள் சுமார் மூன்று மாதங்களுக்கு வைக்கப்பட்டு பார்வையாளர்களைக் கவர்ந்தன. இந்த நிகழ்ச்சியின் பின்னணி சுவையானது. 

பதினைந்தாம் நூற்றாண்டில் நடைபெற்ற விவசாயிகளின் போர் (Peasant's war) ஜெர்மனியிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் பரவியது. சால்ஸ்பர்க்கில் விவசாயிகள் ஆர்ச்பிஷப்-பின் வசிப்பிடமான கோட்டையை (ஹோஹன்சால்ஸ்பர்க் கோட்டை) முற்றுகையிட்டனர். மரக்குண்டுகளால் (அந்தக் காலத்தில் பீரங்கி ஏது?) கோட்டையின் சுவர்களைத் தாக்க ஆரம்பித்தனர். முற்றுகை பல நாட்களுக்கு நீடித்தது. கோட்டைக்குள் இருந்த உணவுப் பொருட்களின் கையிருப்பு குறைந்துபோக ஆரம்பித்தது. இதைக்கண்ட ஆர்ச்பிஷப் கவலை கொண்டார். இந்த விசயம் வெளியே முற்றுகையிட்டிருக்கும் விவசாயிகளுக்குத் தெரிந்தால் அவர்கள் தங்கள் முற்றுகையை நீடிப்பர்; உணவுப் பொருட்களெல்லாம் தீர்ந்து போனபின் வேறுவழியின்றி கோட்டையை விட்டுத் தர வேண்டியிருக்கும் என்று ஆர்ச் பிஷப் அச்சம் கொண்டார். கோட்டையில் இருந்த மாடுகள் அனைத்தும் தீர்ந்து போய் விட எஞ்சியிருந்தது ஒரே ஒரு பசு மட்டும் தான். 



அப்போது எந்த புத்திசாலிக்கு இந்த ஐடியா உருவாயிற்றோ தெரியவில்லை. எஞ்சியிருந்த மாட்டின் மீது வண்ணம் பூசி கோட்டையின் சுவர்கள் மீது விவசாயிகள் பார்க்கும் வண்ணம் நடக்கவிட்டனர். அடுத்த நாள் அந்தப் பசுவின் மீது வேறு நிற வண்ணம் பூசி கோட்டையின் மீது நடக்கவிட்டனர். இவ்வாறு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வண்ணம் பூசி,  பசு கோட்டைச் சுவர்கள் மீது நடைபோட்டதாம். இதைக் கண்ட விவசாயிகளும் கோட்டைக்குள் நிறைய மாடுகள் (உணவு)இருப்பதாய் நம்பி ( அவ்வளவு முட்டாள்களா என்ன? ) வெறுத்துப் போய் தமது முற்றுகையைக் கைவிட்டனராம். இந்த நிகழ்ச்சியை நினைவுறுத்தும் வகையிலேயே இந்தப் பசு விழா ( Kuh und Kunst) நடைபெற்றது.

நகரின் மத்தியப் பகுதியின் ஒரு நீண்ட குறுகலான தெருவில் அமைந்திருப்பது மொஸார்ட்டின் பிறப்பிடம். 



1756, ஜனவரி 27 ஆம் தேதி இங்குதான் உல்ப்காங் அமேடஸ் மொஸார்ட் ( Woffgang Amadeus Mozart) பிறந்தார். மொஸார்ட்டின் தந்தை லியோபோல்ட் மொஸார்ட் ஒரு சிறந்த இசை ஆசிரியர். எனவே மிக இள வயதிலேயே மொஸார்ட்டுக்கு  இசையில் ஈடுபாடு வந்ததில் ஆச்சரியமொன்றும் இல்லை. சிறுவயது முதலே மன்னனின் சபைகளில் இசை நிகழ்ச்சிகள் செய்ய  அழைப்புகளும் இசைப்பதவிகளும் அவரைத் தேடி வந்தன.



ஆஸ்திரியா மட்டுமின்றி ஐரோப்பிய நாடுகள் பலவும் சென்று தனது இசையினால் பெரும்புகழ் அடைந்தார். சால்ஸ்பர்க்கில் அவர் பிறந்த இடம் தற்போது ஒரு அருங்காட்சியகமாக மாற்றப் பட்டுள்ளது. அங்கே அவர் உபயோகித்த இசைக் கருவிகள்(பியானோ , வயலின்) , நாற்காலிகள் , மேசைகள் மற்றும் இசைக்குறிப்புகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. அவரது பெற்றோர், சகோதரி , மனைவி மற்றும் பலரது ஓவியங்களும் இருந்தன. இரண்டாவது உலகப் போரின் போது இந்த நினைவிடம் சேதப்பட்டாலும், அதன் பின்னர் புதுப்பிக்கப்பட்டது.

சால்ஸ்பர்க்கின் மிக அழகிய மிரபெல் தோட்டம் (Mirabel Garden) பதினாறாம் நூற்றாண்டில் அமைக்கப் பட்டது.



அப்போதைய ஆர்ச் பிஷப் தனது  மனைவிக்காக அரண்மனையை ஒட்டிய வெளியில் மிகப்பெரிய இந்தத் தோட்டத்தை அமைத்தார். மன்னர் தனது ஓய்வு நேரத்தில் இத்தோட்டத்தில் கழி(ளி)த்தாராம். பசும்புல்வெளிகளும், வண்ண வண்ண மலர்களும் விதவிதமான நீரூற்றுக்களும் காண்போர் மனதையெல்லாம் கொள்ளை கொள்ளும்.

2 Comments:

Blogger ராஜா சொல்கிறார்...

எழில், பதிவுகள் அனைத்தும் அருமை. இத்தனை நாள் இங்கே வராததற்கு வருந்துகிறேன். பயண கட்டுரைகள் என்றால் இயல்பாகவே எனக்கு மிகவும் விருப்பம். உங்கள் சரளமான நடை என் ஆர்வத்தை மேலும் அதிக படுத்துகிறது. தொடர்ந்து எழுதுங்கள்.

6:39 AM  
Blogger அன்பு சொல்கிறார்...

எனக்கும் பயணக்கட்டுரை மிகவும் பிடிக்கும். மணியன், லேனா, சிவசங்கரி, தமிழன்பன் ஆகியோர் எழுத்துக்களைப் படித்திருக்கிறேன். இப்போது உங்களுடைய எழுத்து... புதுப்புது தகவல்கள், தொடர்ந்து எழுதுங்கள்.

என்ன இங்கு சிங்கையில் பல இடங்களில் வண்ண வண்ணமாக சிங்கங்கள் வைத்துள்ளனர், அங்கு ராமராஜ, லல்லுக்களா!

5:20 PM  

Post a Comment

<< Home