சால்ஸ்பர்க் - 3
ஹெல்ப்ருன் மாளிகை(Helbrunn palace) சால்ஸ்பர்க்கின் மத்தியப் பகுதியிலிருந்து நான்கு கிலோமீட்டர்கள் தள்ளியிருக்கிறது. இதுவும் பதினாறாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஒரு சொகுசு மாளிகை. அப்போதைய ஆர்ச் பிஷப் ,மார்குஸ் சிடிகுஸ்(Markus Sittikus) தனது கோடைக்காலத்தை உல்லாசமாகக் கழிக்க நகரை விட்டுத்தள்ளி இயற்கையோடு ஒன்றியிருந்த இந்த இடத்தைத் தேர்வு செய்தார். தனது நண்பர் ஸான்டினோ ஸொலாரி (Santino Solari)எனும் கட்டடக் கலை நிபுணரை இத்தாலிய முறைப்படி கட்டச் சொன்னார். சுமார் நான்கு வருடங்களில் இந்த அரண்மனை கட்டப்பட்டது. அரண்மனையைச் சுற்றி பசும்புல்வெளிகளும் ஓங்கியுயர்ந்த மரங்களும் மலைகளும் விலங்கினங்களும் சலசலத்து ஓடும் குற்றாறுகளும் ஓடைகளும் அம்மாளிகைக்கு எழில் சேர்த்தன.
மாளிகைக்குள் நுழைந்துவிட்டால் நாம் அந்த நூற்றாண்டுக்குச் சென்றுவிட்ட உணர்வு. முன்பு பயன்படுத்திய பொருட்களனைத்தும் நம் பார்வைக்குக் கிடைக்கின்றன. உணவறையில் அமைக்கப்பட்டிருந்த நாற்காலிகள் தோலுறை அணிந்தவை. மரவேலைப்பாடுகள் அமைந்த உணவு மேசைகள் , கட்டில்கள், பெரிய சிவிகை போன்று அமைந்த வெப்பமூட்டப்பட்ட அறைகள், மன்னர் தனது அமைச்சர்களோடு கலந்துரையாட அமைக்கப்பட்ட இரகசிய அறைகள், மன்னர் நடனம் இரசிக்கும் அறைகள் என விரிந்தது. எண்கோண (Octogon) வடிவில் இருந்த இசை கேட்கும் அறை - கேட்பொலி விளைவுடன்(Acoustical effects) கூடியது . போர்வாட்கள், போர் உடைகள் கவசங்கள் முதலியவைகளும் இருந்தன. அரண்மனை முழுதும் இருந்த ஓவியங்களும் சிலைகளும் நேர்த்தியாய் வடிவமைக்கபட்டவை. பறவைகளின் ஓவியங்கள் , விலங்குகளின் சிலைகள் என்னைப் பெரிதும் கவர்ந்தன. குறிப்பாக, ஒருகொம்புக் குதிரை (Unicorn) யின் சிலை அழகாயிருந்தது. எட்டுக் கால்கள் கொண்ட குதிரையின் ஓவியம் ஒன்றின் கற்பனையும் நன்றாயிருந்தது
அரண்மனையின் மாடியின் ஒரு அறையிலிருந்து எதிரே பார்த்தால் மலைத்தொடர் விரிகிறது. மலையினடியில் சிறிய ஒரு வீடு தனியாக , அழகாக, சிறியதாகத் தெரிகிறது. அரண்மனையின் பின்புறம் இருப்பவை பெரிய தோட்டம் மற்றும் நீரூற்றுத் தோட்டம். உலகப் புகழ் பெற்றவை இங்குள்ள தந்திர நீரூற்றுக்கள் .
சிறு சிறு குழுக்களாக தண்ணீர்ப் பூங்காவினுள் அழைத்துச் சென்றனர். முதலில் எதிர்ப்பட்டது கல்லினால் செய்யப்பட்ட நீளமான மேசையும் , அதைச் சுற்றி இடப்பட்டிருந்த கல் இருக்கைகளும். அனைவரும் அருகே இருந்த கற்படிகளில் வரிசையாய் அமர்ந்தோம். வழிகாட்டி எங்கள் குழுவில் இருந்த ஒரு சிலரை அந்தக் கல் இருக்கைகளில் அமரும்படி கூறினார். அந்த இடத்தின் முக்கியத்துவத்தைக் கூற ஆரம்பித்தார். மன்னர் தனது நண்பர்கள் மற்றும் விருந்தினர்களுடன் அமர்ந்து மதுவருந்திக்கொண்டே பேசுவதற்கு அமைக்கப்பட்டவை இந்த இருக்கைகளும் மேசையும். கோடைக்காலத்தில் மன்னர் தன் நண்பர்களை அழைத்து விருந்து கொடுப்பது வழக்கம் என்று கூறிக்கொண்டே வழிகாட்டி தன் சகாவிற்கு சமிக்ஞை செய்தார். அவர் மறைவிடத்திலிருந்த ஒரு விசையை அழுத்த, மேசையைச் சுற்றிலும் தரையில் மறைவாயிருந்த (கண்களுக்கு எளிதில் புலப்படாத) சிறு குழாய்களில் இருந்து தண்ணீர் பீய்ச்சி அடித்தது. இதை எதிர்பாராத பயணிகள் திகைத்துப் பின் தண்ணீரில் நனைந்தவாறே மகிழ்ந்தனர். இதுபோல் தான் சுமார் நானூறு ஆண்டுகட்கு முன் மன்னரும் தன் நண்பர்களுக்கு திடீர் தண்ணீர் விருந்து அளிப்பாராம் ( தண்ணி அடிச்சுக்கிட்டே தண்ணீர் அடிக்கிறது இதுதானோ?)
தொடர்ந்து இதுபோல் தண்ணீர் அதிர்ச்சிகள் இருக்கும் என்று எச்சரிக்கை செய்த வழிகாட்டி கவனமாய்த் தொடரும்படி விளையாட்டாய்க் கூறி முன்னேறிச் சென்றார். நாங்களும் பின் தொடர்ந்தோம். இரு புறமும் அடர்த்தியாய் வளர்ந்த செடிகளைக் கடந்து செல்கையில் செடி மறைவில் இருந்த நுண்குழாய்களில் திடீரென்று நீர் பீறிட்டு எங்களை நனைத்தது. அழகிய சிலைகள் , சிலைகள் அருகே தடாகங்கள் மலர்த்தோட்டங்கள் , புல்வெளிகள் எனத் தொடர்ந்தது. சுவரில் மாட்டி வைக்கப்பட்டிருந்த மானின் தலை வடிவச் சிலையிலிருந்தும் நீர் சடாரெனப் பீறிட்டது.
ஒரு சிறிய குகை போன்ற அமைப்பு. வெவ்வேறு சிலைகள் இருந்தன. தரையிலிருந்து எழும் நீர் ஊற்று ஒன்று இருந்தது. மேலெழும்பும் நீரின் விசை , அதன் மேல் இருந்த பந்தினைத் தாங்கிப் பிடித்து ( பந்து கீழே விழாவண்ணம் ) பந்தினைச் சுழற்றியது. அங்கிருந்த மற்ற சிலைகளைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே குகைச் சுவரின் நுண்ணிய துளைகளிலிருந்து நீர் சிதற, மீண்டும் நனைந்தோம். தொடர்ந்த பாதையில் , நீரின் விசையால் உருளும் சிறு சிறு பொம்மைகள், சுழலும் சிறு சக்கரங்கள் , தறிகள் எனப் பல சுவாரஸ்யமான உருவங்கள். சுவர்களில் ஓவியங்களும் சிலைகளும் மிக நேர்த்தியாய் அமைக்கப் பட்டிருந்தன. ஒரு சிறிய அரங்கு ( கல்லினாலானது) போன்ற அமைப்பு, அதனுள் ஏராளமான பொம்மைகள் , அனைத்தும் நீரின் விசையால் இயங்குபவை. இதைத் தொடர்ந்த தோட்டத்தில் வண்ண மலர்களும் புல்தரையும் கண்ணுக்குக் குளிர்ச்சியளித்தன. தோட்டத்திற்கு வரவேற்பு கூறும் வண்ணம் இரண்டு ஒற்றைக்கொம்புக் குதிரைகளின் சிலைகள் முன்கால்கள் தூக்கி நின்று கொண்டிருந்தன.
வனவிலங்ககம் ஒன்றும் அருகே உள்ளது.அத்தனை இயற்கையையும் கண்டு மனமகிழ்ந்து , நனைந்த உடைகள் உலர்ந்து நாங்கள் திரும்பினோம்.
Sound of Music எனும் திரைப்படம் பற்றி அறிந்திருப்பீர்கள். இது சால்ஸ்பர்க்கின் பல இடங்களிலும், மாளிகைகளிலும் படமாக்கப்பட்டது. இது படமாக்கப்பட்ட இடங்களுக்கெல்லாம் அழைத்துச் சென்று சுற்றிக் காட்டும் உலா (The Sound of Music Tour) ஒன்றும் இங்கு உண்டு. இது தவிர சால்ஸ்பர்க்கின் அருகே உப்புச் சுரங்கங்களும் உண்டு . ( Salz என்றால் உப்பு என்று பொருள்) . நேரமின்மையால் இங்கு செல்ல இயலவில்லை.
ஐரோப்பியச் சுற்றுலா மேற்கொள்பவர்கள் சால்ஸ்பர்க் வந்து செல்லாவிடில் அப்பயணம் ஒரு நிறைவான பயணமாகாது என்பது என் கருத்து. அப்படித்தானே?
1 Comments:
/அப்படித்தானே? /
நிச்சயமாக அப்படித்தான் தோன்றுகிறது :-)
Post a Comment
<< Home