August 06, 2004

வாஸா - 1

வாஸா - முதல் பயணத்திலேயே மூழ்கிப்போன கப்பல். முன்னூறு வருடம் மூச்சடக்கிய பின் முழுதாய் மீட்கப்பட்ட கப்பல். ஸ்வீடனின் தலைநகரமான ஸ்டாக்ஹோமின் கடலோரக் குடிலில் கம்பீரமாய்க் குடியிருக்கும் கப்பல்.




இந்தக் கப்பல் பிறந்த கதை, கடலில் மூழ்கிய கதை, மீட்கப்பட்ட கதை , தற்போதைய மியூசிய வாழ்க்கைக் கதை - எல்லாக் கதைகளையும் விரிவாய்க் கூறுகிறேன்.

தோன்றிய கதை

கி பி 1624. ஸ்வீடனின் மன்னராக ஆட்சி செய்து கொண்டிருந்தவர் குஸ்தவ் II அடோல்ப் (Gustav II Adolf) என்பவர். தனது பதினேழு வயதிலேயே மன்னரானவராம். பின்லாந்தும் ஸ்வீடனின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. மன்னர், நாடு என்றாலே போர்கள் தானே வரலாறு? குஸ்தவ் II-ம் அதற்கு விதிவிலக்கல்ல. அண்டை நாடான டென்மார்க், ரஷ்யா மற்றும் போலந்து ஆகிய நாடுகளுடன் போர்களில் ஈடுபட்டார். இத்தனைக்கும் போலந்து நாட்டை ஆட்சி செய்தவர் இவரது உறவினரே. இருந்தாலும் மண்ணாசை யாரை விட்டது? அடிக்கடி போர்கள் புரிந்ததனால் படைகளும் கப்பல்களும் சேதமாயின. இருந்த கப்பல்களும் பழையதாய் இருந்தன. எனவே புதிதாகக் கப்பல் செய்ய மன்னர் உத்தரவிட்டார். ஹென்ரிக் ஹைபர்ட்ஸன் (Henrik Hybertsson) எனும் டச்சுக்காரர் கப்பல் கட்டுவதில் புகழ்பெற்றவராம். இரண்டு பெரிய கப்பல்கள் மற்றும் ஏராளமான சிறிய ரகக் கப்பல் கட்டும்படி தளபதியிடமிருந்து உத்தரவு வரவும் கப்பல்கள் கட்டும் பணியினைத் தொடங்கினார். இரவும் பகலும் வேலைகள் தொடர்ந்தன.

கப்பலகள் செய்வதற்கு ஸ்வீடனின் காடுகளிலிருந்து சுமார் ஆயிரம் ஓக் மரங்கள் வெட்டப்பட்டன. ஓக் மரங்கள் சற்று எடை அதிகமானவை, உறுதியானவை. இரண்டு பெரிய கப்பல்களுள் ஒன்றினுக்கு வாஸா என்றும் மற்றொன்றிற்கு மூன்று கிரீடங்கள் (Tre Kronar) என்றும் பெயர் சூட்டப்பட்டது. வாஸா என்பது மன்னரின் பரம்பரையைக் குறிப்பது ( Vasa Dynasty).
சுமார் நான்கு வருடங்களில் கப்பல்கள் கட்டி முடிக்கப்பட்டன. வாஸா, ஸ்டாக்ஹோம் நகரக் கடற்கரையில் கம்பீரமாய் நின்றது. மரக்கப்பலில் வண்ணம் பூசப்பட்டது. கப்பலின் முகப்பில் மர வேலைப்பாடுகளாலான சிற்பங்கள் செதுக்கப்பட்டன.



இது ஒரு நான்கடுக்குக் கப்பல். கப்பலின் எடை ஆயிரத்து இருநூறு டன்கள், கப்பல் கடலின் காற்றில் கவிழ்ந்துவிடாமல் பாதுகாக்க (கப்பலைச் சமநிலைப்படுத்தும் எடைக் கற்கள் - Ballast) நூற்று இருபது டன் கற்கள். கப்பலின் இரு தளங்களில் ஆயுதங்களும் பிற போர்க்கருவிகளும் ஏற்றப்பட்டன. எழுபது மீட்டர் நீளமும் , கப்பலின் தடித்த நடுப்பகுதி பதினோறு மீட்டர் அகலமும் உடையது. நான்கு அடுக்குகளில் கீழ்தட்டில் உணவுப்பொருட்கள் அடுக்கப்பட்டன. இரண்டாவது மற்றும் மூன்றாவது அடுக்கை சுற்றி சிறியரக பீரங்கிகளைத் தாங்கும் மேடைகள் அமைக்கப்பட்டன. போர்வீரர்கள் படுத்து உறங்கவும் ஓய்வெடுக்கவும் இந்த இரு தளங்களையும் பயன்படுத்திக் கொண்டனராம்.


கப்பலைச் சுற்றிலும் மர வேலைப்பாடுகளைக் கொண்ட சிற்பங்கள் அமைக்கப்பட்டன. இவற்றின் எண்ணிக்கை ஐநூறு இருக்குமாம். இப்படியாய் நான்கு ஆண்டுகளில் முழுமை பெற்ற இக்கப்பலை நீரில் மிதக்கவிட்டனர். அந்த நேரத்தில் மன்னர் போலந்து நாட்டின்மீது போர் புரியச் சென்றிருந்தார். அவருக்கு போரில் உதவி செய்ய ஆயுதங்களும் வீரர்களும் தேவைப் பட்டனர். வாஸா தயாராகி விட்டதா என்று கேட்டு விரைவாகக் கட்டி முடிக்கவும் ஆணையிட்டார். கப்பல் கட்டி முடித்து வெள்ளோட்டம் பார்க்கும் முன்னர் கப்பலை அனுப்ப மன்னர் மீண்டும் அவசரப் படுத்தினார்.
1628-ஆம் வருடம் ஆகஸ்ட் மாத மதிய நேரம் ஒன்றில் வாஸா கடற்பயணம் மேற்கொள்ளத் தயாரானது. இருநூரு படை வீரர்களையும் ஏராளமான ஆயுதங்களையும் ஏற்றிக் கொண்டு குண்டுகள் முழங்க தனது முதற்பயணத்தைத் தொடங்கியது. பயணம் மேற்கொண்ட சில நிமிடங்களில் பலத்த காற்று வீச ஆரம்பிக்க , காற்றில் நிலை கொள்ளாது தள்ளாடி கடலில் கவிழ ஆரம்பித்தது.


கப்பலில் இருந்தவர்களுள் பலர் நீந்தித் தப்பித்தனர். சுமார் ஐம்பது பேர் மூழ்கி மாண்டனர். முழுவதுமாய் மூழ்கி சுமார் முப்பது மீட்டர் ஆழத்தில் புதைந்து போனது.

0 Comments:

Post a Comment

<< Home