பெர்லின் சுவர் -1
நான் பத்தாவது வகுப்பில் படித்துக் கொண்டிருந்தபோது (1989) பெர்லின் சுவர் இடிக்கப்பட்டது. செய்தித்தாள்களில் வண்ண வண்ணப் படங்கள் வெளிவந்தன. சுவரின் அருகே நிற்கும் காவலாளி ஒருவருக்கு பெண் ஒருவர் பூச்செண்டு கொடுப்பது போல் ஒரு படமும் சுவரின் மீது ஏறி சிலர் இடித்துக் கொண்டிருந்த ஒரு படமும் இன்னமும் என் நினைவில் நிற்கிறது.அப்போதைக்கு இரண்டு ஜெர்மனிகளும் இணைகின்றன;இரு நாடுகளையும் பிரித்து வைத்த சுவர் உடைக்கப்பட்டது என்ற அளவிலேயே என் புரிந்துகொள்ளுதல் இருந்தது.
பெர்லின் சுவர் இருந்த இடங்களை நாமும் பார்த்துவிடுவோம் என்று கனவில் கூட நான் எண்ணியதில்லை. சென்ற ஆண்டின் இறுதியில் ஜெர்மனி வாசம் முடிந்து ஸ்வீடனுக்கு குடியேற ( குடியேற்ற உரிமை பெற) பெர்லினில் இருந்த ஸ்வீடன் தூதரகத்திற்குச் செல்ல வேண்டியிருந்தது. அந்த வேலை முடிந்ததும் மூன்று நாட்கள் பெர்லினையும் சுற்றிவரத்( நானும் எனது மனைவியும்) தீர்மானித்தோம்.
பெர்லின் சுவர் இருந்த சுவடு தெரியாமல் முற்றிலும் மறைந்து விட்டாலும் சுவரின் மிச்சங்கள் இன்றும் ஓரிரு இடங்களில் சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்காகவும் நினைவுச் சின்னமாகவும் பாதுகாக்கப் பட்டுள்ளன. இது பற்றிய ஒரு மியூசியமும் உண்டு.
இவற்றையெல்லாம் காணும் முன் வரலாற்றைச் சற்றே புரட்டிப்பார்த்துவிட்டு வரலாம், வாருங்கள்.
இரண்டாம் உலகப்போரில் ஹிட்லரின் அழிவுக்குப்பின் ஜெர்மனியில் புதிய மாறுதல்கள் ஏற்பட்டன. கிழக்கு ஜெர்மனி , மேற்கு ஜெர்மனி என்று இரு புதிய நாடுகள் உதயமாயின. அன்றிலிருந்து பெர்லின் நகரம் பிரச்சனைக்குரிய பகுதியானது. அன்றைய பெர்லின் நகரம் நான்கு பகுதிகளாய்ப் பிரிக்கப்பட்டு அதன் நிர்வாகம் நேச நாடுகளான அமெரிக்கா, பிரிட்டிஷ், ப்ரான்ஸ் மற்றும் ரஷ்யாவிடம் பகிர்ந்தளிக்கப்பட்டது. ரஷ்யா வசம் இருந்த கிழக்கு பெர்லின் கிழக்கு ஜெர்மனியின் தலைநகராகவும் ஆனது. ரஷ்யாவின் ஆதிக்கத்தில் இருந்ததால் இங்கு கம்யூனிஸம்தான். முதலில் இரு நாடுகளுக்குமிடையே எல்லை கடந்து செல்வது பிரச்சினையாக இல்லை. நாளடைவில் "மேற்கு பெர்லினில் இருக்கும் நேச நாடுகள் விலகிக் கொண்டு மேற்கு பெர்லினை சுதந்திரப்பகுதியாக்க வேண்டும்" என்ற கிழக்கு ஜெர்மனியின் வாதம் கேட்க ஆரம்பித்தது. அமெரிக்க , பிரெஞ்சு மற்றும் பிரிட்டிஷ் அரசுகள் இதற்கு உடன்படவில்லை. மேற்கு பெர்லினின் சுதந்திரத்தைத் தாங்கள் பாதுகாத்துக் கொள்ள தொடர்ந்து இருப்பதாகக் கூறிவிட்டார்கள்.
படம்: பெர்லின் நகர் - 1961 ஆம் வருடத்தில், நான்கு கட்டுப்பாட்டுப்பகுதிகளுடன். மஞ்சள் வண்ணப் பட்டை - பெர்லின் சுவர் கட்டப்பட்ட பகுதி.
இதனால் வெறுப்பைடந்த கிழக்கு ஜெர்மனி அரசு , மேற்கு ஜெர்மனியிலிருந்து எல்லை கடந்து வருவதற்குப் பல கட்டுப்பாடுகளை விதிக்க ஆரம்பித்தது.இரு பகுதிகளையும் இணைக்கும் தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. அப்போதைய ரஷ்ய அதிபராயிருந்த க்ருஷேவ் , மேற்கு பெர்லினில் இருந்து நேச நாட்டுப்படைகள் , ஒரு குறித்த நாளுக்குள் வெளியேற வேண்டும் என்று கெடு விதித்தார். இதற்கு நேச நாடுகள் மறுத்துவிட்ட நிலையில் இரு பகுதிகளுக்குள்ள ராஜ்ஜிய உறவு மேலும் சீர்கெட்டது. அமெரிக்க அதிபர் கென்னடிக்கும் க்ருஷேவிற்குமிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகளும் பயனின்றிப்போய் விட்டன.
கிழக்கு ஜெர்மனி அரசு அதன் பின்னர் எல்லை கடந்து செல்வதற்கு தடை விதித்தது. தடை விதிக்கப்பட்ட அத்தினத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கிழக்கு ஜெர்மனியிலிருந்து வெளியேறி மேற்கு ஜெர்மனியில் அடைக்கலமாயினராம். இதைத் தடுக்க இரு நாடுகளையும் பிரிக்கும் சுவர் ஒன்றைக் கட்ட எண்ணிய கம்யூனிஸ அரசு திட்டமிட்டது . 1961-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13 ஆம் நாள், இரவு இரண்டு மணிக்கு காவல்படை இரு பகுதிகளையும் பிரிக்கும் இடத்தில் அணிவகுத்தது. வேலிகள் இடப்பட்டன. இரு பகுதிகளுக்கும் பேருந்துப்போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அன்று காலையில் இதைக்கண்ட கிழக்கு பெர்லின் மக்கள் ஆத்திரமடைந்தனர். அரசை எதிர்த்துப் பல கிளர்ச்சிகள் நடைபெற்றன. காவலர்கள் அறியா வண்ணம் மேற்கு பெர்லினுக்குப் பலர் தப்பித்துச் சென்றனர்.
வேலிக்கு அருகே அதனைத் தொடர்ந்து அகழிகள் தோண்டப்பட்டன. சுவர் நெடுநெடுவெனக் கட்டப்பட்டு வளர்ந்தது. எல்லை நெடுகிலும் கண்காணிப்புக்கோட்டைகள் கட்டப்பட்டன.அரசிடமிருந்து அனுமதி ( விசா) பெறாமல் எல்லை கடப்பது சட்டவிரோதம் என அறிவிக்கப்பட்டது.
சுமார் நூற்றி ஐம்பத்தைந்து கிலோமீட்டர்கள் நீளமுள்ளது இச்சுவர். சுவரின் தடிமன் முப்பது சென்டிமீட்டர். பதிமூன்றே நாட்களில் இப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு கிழக்கு பெர்லின் மேற்குப் பகுதியிலிருந்து முற்றிலுமாய்த் துண்டிக்கப்பட்டது.
0 Comments:
Post a Comment
<< Home