வாஸா - 3
வாஸா அருங்காட்சியகத்தில் நுழைந்ததும் மெல்லிய வெளிச்சம் நம்மைச் சூழ்ந்துகொள்கிறது. மெல்லிய வெளிச்சத்தைத் தொடர்ந்து செல்ல, பிரம்மாண்டமான கப்பல் எதிர்ப்பட்டது. கப்பலின் முகப்புப் பகுதியை அண்ணாந்து பார்த்ததில் கழுத்து வலித்தது. கப்பலின் அடித்தளத்திலிருந்து மேல்தளம் வரை , கப்பலின் ஒவ்வொரு பகுதியாய்ச் சென்று பார்ப்பதற்கு ஏழு தளங்கள். கப்பலின் முன்பகுதியில் மூக்கு போல் நீட்டிக்கொண்டிருந்த அலகு (Beak) அதில் ரோம் மன்னன் நீரோவின் உருவம் பொறித்த சிலை. தண்ணீரில் மூழ்கி இற்றுப் போயிருந்த அச்சிலையை மீண்டும் புதுப்பித்திருந்தார்கள். மன்னர் குஸ்தவ் இள வயதில் முடி சூட்டிக்கொள்வது போல் ஒரு சிலை. மரத்தில் இழைத்துச் செய்யப்பட்டிருந்த அனைத்து சிலைகளும் அதிசயமாய் இருந்தன. கப்பலின் மேலிரு தளங்களில் அமைக்கப்பட்டிருந்த பீரங்கி மேடைகளும் சுற்றிலும் அமைக்கப்பட்ட அறுபத்தி நான்கு துளைகளும் இருந்தன. கப்பல் மூழ்குவதற்கு இந்த ஈரடுக்கு பீரங்கித் துளைகளும் ஒரு காரணம்.
மியூசியத்தின் உள்ளே ஒரு திரையரங்கு. மணிக்கொருதரம் காட்டப்படும் குறும்படத்தில் வாஸாவை மீட்கப்பட்ட காட்சி முதல் அதைச் செப்பனிட்டு எவ்வாறு தற்போதுள்ள மியூசியத்தில் வைக்கப்பட்டது என விரியும் காட்சி வரை விளக்கமாய்க் காணலாம். படம் ஸ்வீடிஷ் மொழியில் தான் , நல்லவேளையாக ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு திரைமேல் சிவப்பு எழுத்துக்களில் ஓடுகிறது. மூழ்கிய கப்பலை மீட்டெடுக்கும் காட்சிகளும் , கப்பல் மூழ்கிய இடத்தைச் சுற்றிலும் இறைந்து கிடந்த மரப் பலகைகளும் ஆணிகளும் பிற பொருட்களும் மீட்கப்பட்டு , எவ்வாறு அதே ஆணிகளைக் கொண்டு அப்பலகைகள் மீண்டும் பொருத்தப்பட்டன என்பதௌ விளக்கும் காட்சிகளும், கப்பல் மீண்டவுடன் அதனுள் குவிந்து கிடந்த சகதியை வெளியேற்றி , கப்பல் சுத்தப்படுத்தப்பட்டு , வேதிப்பொருட்கள் கொண்டு கப்பல் புதுப்பிக்கப்பட்ட காட்சிகளும் சுவையாய் இருந்தன.
நிஜக் கப்பலின் அருகே அதன் மாதிரி வடிவமொன்று சிறியதாய் வைக்கப்பட்டிருந்தது. கடலினடியில் தேடிக்கண்டுபிடிக்கப்பட்ட பல்வேறு வகையான பொருட்களும் பார்வைக்குக்கிடைத்தன. கப்பலில் சென்ற போர் வீரர்கள் பயன்படுத்திய தோலாலான உடைகள் மற்றும் காலணிகள் , பீரங்கிகள் உபயோகப்படுத்திய பாத்திரங்கள் , போர்க்கருவிகள் என எண்ணிலடங்கா.
"கப்பல் ஏன் மூழ்கியது?" என்ற கேள்விக்கு மியூசியத்தின் ஒரு சிறிய அறையில் விடை கிடைக்கிறது. அசையாப் படங்களை (Slide Show) ஒரு திரையில் காண்பித்து , அப்படத்திற்கேற்ப பின்னணியில் விளக்க உரை , நல்ல வேளையாக ஆங்கிலத்திலும் வழங்கப்படுகிறது. அறையிலுள்ள ஒலிபெருக்கிகள் டிஜிடல் டால்பி முறையில் அமைக்கப்பட்டிருந்தன. கப்பல் மூழ்கியபோது ஏற்பட்ட விளைவினை நம் கண்முன் நிறுத்த , கப்பல் மூழ்குவது போன்ற ஒரு ஓவியமும் அதன் பின்னணியில் கப்பல் மூழ்கும்போது எழும் ஓசையை விட அதிக அதிர்வை ஏற்படுத்தும் இசையையும் தந்து பிரமிப்பு ஏற்படுத்தினார்கள். கப்பல் மூழ்கியபோது மன்னர் போலந்து நாட்டில் இருந்ததால் மந்திரி ஒருவர் தலைமையில் விசாரணைக் கமிஷன் ஒன்று அமைக்கப்பட்டு இதற்கான காரணம் ஆராயப்பட்டதாம். இயற்கையின் விளையாட்டு என ஒரு சிலர் எண்ணினர். எவரோ செய்த சதி என்று சிலர் சந்தேகித்தனர். கப்பலிலிருந்து தப்பித்தவர்கள், கப்பல் கட்டிய தொழிலாளர்கள் , கப்பலைக் கட்டிய ஹென்ரிக் ஹைபர்ட்ஸன் என அனைவரும் விசாரிக்கப்பட்டனர். முடிவில் யார் மீதும் குற்றம் நிரூபிக்கப்படவில்லை. யாரும் தண்டிக்கப்படவுமில்லை. பின் ஏன் கப்பல் மூழ்கியது? மன்னரின் விருப்பப்படி ஈரடுக்குப் பீரங்கித்துளைகள் கப்பலில் அமைக்கப்பட்டதால், அத்துளைகள் கப்பலின் கீழ்தளத்தில் சமநிலைப்படுத்தும் கற்கள் (Ballasts) நிரப்பும் இடத்தைப் பெரிதும் பாதித்தது. எனவே போதிய கற்கள் எடுத்துச் செல்லாமல் குறைவான கற்களே நிரப்பப் பட்டன. காற்று பலமாக வீசியதால் கப்பல் தனது எடையச் சமன் செய்து கொள்ள முடியாது கவிழ்ந்து விட்டது.
கப்பலின் அடிப்பகுதி முதல் மேல்பகுதி வரை ஒவ்வொரு தளமாய்ப் பார்த்து வியந்தோம். ஒவ்வொரு தளத்திலும் இது தவிர வேறு எதாவது காட்சியோ , குறிப்புகளோ அல்லது மீட்டெடுக்கபட்ட பொருட்களோ வைக்கப்பட்டு மேலும் சுவை சேர்த்தன. மூழ்கிய கப்பலை மேலே உயர்த்த கப்பலினடியில் துளைகள் இட்டு, வளையும் கம்பிகள் செலுத்தித் தூக்கியதைக் கண்முன் நிறுத்தும் ஒரு மாதிரியும் (Model) ஒரு தளத்தில் இருந்தது. கப்பலின் மீது செதுக்கிய சில சிலைகளையும் தனியாக ஒரு தளத்தில் காண முடிந்தது. சிற்பங்கள் அனைத்தும் நுண்ணிய வேலைப்பாடுகளுடன் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தன.
மியூசியம் விட்டு வெளிவந்த பின்னும் வாஸாவின் பிரம்மாண்டம் கண்களுக்குள் புகுந்து தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. இன்றும் !
0 Comments:
Post a Comment
<< Home