வாஸா - 2
வாஸா மூழ்கியபின் அதனைத் தேடி மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்ட அனைவரின் முயற்சிகளும் தோல்வியிலேயே முடிவுற்றன. அவ்வளவு எடையுள்ள கப்பலை மீட்பது சவாலான காரியந்தான். வாஸா மூழ்கி சுமார் முன்னூற்று முப்பது ஆண்டுகளுக்குப்பின் இம்முயற்சி செயல் வடிவம் பெற்றது. ஆன்டர்ஸ் ப்ரென்ஸீன் (Anders Frenzen) என்பவர் கடல் தொல்பொருள் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தவராவார். வாஸா இருக்குமிடத்தைக் கண்டுபிடித்தபின் அதை எவ்வாறு மீட்பது என்பது குறித்து, நடைமுறைக்கு ஒத்துவரக்கூடிய வகையில் திட்டமிட்டார். கடலுள் ஆய்வு செய்யும் இருவர் துணையுடன் வாஸா மூழ்கியிருக்கும் நிலை பற்றி ஆய்வு செய்தார். நல்ல வேளையாக வாஸா தலைகீழாய்க் கவிழாமல் நேராகவே அமர்ந்திருந்தது.
எனவே கப்பலை அப்படியே தூக்குவது என முடிவானது. தூக்குவது என்ன பத்து கிலோவா? டன் கணக்கில் எடை. கப்பலைத் தூக்குகையில் முன்னூறு வருடங்களாய் கடல்நீரில் ஊறிய மரங்கள் உடையவும் வாய்ப்பிருந்தது. சற்றுக் கடினமான செயல்தான். செலவு அதிகம் வைக்கும் திட்டம் இது. அனைத்துச் செலவுகளையும் ஸ்வீடனின் கடற்படையும் ஒரு தனியார் நிறுவனமும் ஏற்றுக்கொண்டன. முதலில் கப்பல் அமர்ந்திருந்த கடல்தரையில் (கடல் மட்டத்திலிருந்து முப்பது மீட்டர் ஆழம்) ஆறு சிறிய சுரங்கங்கள் தோண்டப்பட்டன. அதாவது , தடிமனான வளையும் இரும்பு கம்பிகளை ஒருபுறம் செலுத்தி மறுபுறம் எடுத்து அப்படியே மேலே உயர்த்தும் திட்டத்துடன் இந்தத் துளைகள் இடப்பட்டன. தடிமனான இரும்புக்கம்பிகளை துளைகளில் செலுத்தி இயந்திரங்களின் உதவியுடன் சிறிது சிறிதாக கப்பல் மேலே உயர்த்தப்பட்டது. இந்தப்பணிகளெல்லாம் சுமார் ஐந்து வருடங்கள்( 1956 முதல் 1961 வரை) தொடர்ந்தன.
ஏப்ரல் 24, 1961. மூழ்கிய கப்பல் மீண்டும் மூச்சு வாங்க வெளியுலகம் வரும் நாள். இச்செய்தி உலகெங்கும் பரவிவிட செய்தியாளர்களும் பார்வையாளர்களும் ஸ்டாக்ஹோமை முற்றுகை இட ஆரம்பித்தனர். நாடெங்கும் இதே பேச்சு. ஸ்வீடனின் தொலைக்காட்சியும் இந்நிகழ்ச்சியை நேரடியாய் ஒளிபரப்பு செய்தது. சரியாய் காலை ஒன்பது மணிக்கு வாஸாவின் மேல்தளம் கண்ணுக்குப் புலப்பட ஆரவாரக்கூச்சல்களில் கடலே அதிர்ந்ததாம்.
படம்: 1961-ல் கப்பல் மீட்கப்பட்டு தற்காலிகமாய் நிறுத்தப்பட்டிருந்தபோது.
பின்னர் கப்பல் மூழ்கிய இடத்தைச்சுற்றிலும் சிதறிக்கிடந்த மரப்பலகைகள், ஆணிகள், இறந்தவர்களின் எலும்புகள் , சிதறிய ஆயுதங்கள் , உடைந்த சிற்பங்கள் முதலியன தேடி எடுக்கப்பட்டன.
கப்பலை மீட்டெடுத்த பின் அதைச் செப்பனிடும் வேலை ஆரம்பமானது. அவ்வேலை, கப்பலைத்தூக்கி எடுக்கும் வேலையை விடச் சிரமமானதாகவும் அதிக நேரம் எடுப்பதாகவும் இருந்தது. இவ்வளவு ஆண்டுகள் கடல் நீரைக் குடித்த மரப்பலகைகள் , பல ஆண்டுகள் கெட்டுப்போகாதவாறு பதப்படுத்தும் வேலை தொடர்ந்து நடைபெற்றது. மரங்கள் கெடாதவாறு பாதுகாக்கும் பாலிஎதிலின் கிளைகால் எனும் வேதிப்பொருள் கப்பல் முழுதும் தடவப்பட்டது. மரங்கள் இற்றுப்போகா வண்ணம் இருக்க போரிக் அமிலம் கலந்த கலவையும் பூசப்பட்டதாம். உடைந்த சிற்பங்கள் மீண்டும் செப்பனிடப்பட்டு கப்பலில் பொருத்தப்பட்டன. தளர்ந்த ஆணிகள் முடுக்கப்பட்டன.செப்பனிடும் பணிகள் தொடர்ந்து நடைபெற தற்காலிகமாய் ஒரு இடத்தில் பார்வைக்கென வைக்கப்பட்டது. இப்பணிகள் எல்லாம் நிறைவடைந்தபோது 1990 ஆம் ஆண்டு பிறந்திருந்தது. பின்னர் ஸ்டாக்ஹோமின் யூர்காடன் (Djurgarten) எனும் தீவில் நிரந்தரமாய்க் குடியேறியது வாஸா.
இந்த வருடத்தின் ஈஸ்டர் விடுமுறை நாட்களில் ஸ்டாக்ஹோம் பயணித்தபோது வாஸா மியூசியத்தைப் பார்வையிடச் (நானும் எனது மனைவியும்) சென்றோம். ஸ்டாக்ஹோம் சென்றுவரத் திட்டமிட்டால், பயணத்தின் முதல் அதிகாரம் வாஸா கப்பல் தான்.
மியூசியத்தில் கண்டவை பற்றி அடுத்த பதிவில்..
0 Comments:
Post a Comment
<< Home