ஓஸ்லோ-விஜிலன்ட் பூங்கா-2
விஜிலன்ட் பூங்கா சுமார் எண்பத்தியிரண்டு ஏக்கர் பரப்பளவைக் கொண்டது. இருப்பினும் ஒரு குறிப்பிட்ட இடத்துக்குள்ளேயே எல்லாச் சிற்பங்களும் அமைந்திருக்கின்றன.மொத்தமாக 162 சிற்பங்கள்.
பூங்காவினை ஐந்து பகுதிகளாகப் பிரிக்கலாம். நுழைந்தவுடன் எதிர்ப்படும் பெரிய நுழைவாயில், அதனைக் கடந்து ஐம்பது மீட்டர் நடந்து சென்றால் வரும் பாலம், நீரூற்று, ஒரே கல்லினால் ஆன உயரமான தூண் மற்றும் வாழ்க்கைச் சக்கரம் எனப்படும் வட்டச் சிலை.
கிரானைட்டினாலான உயர்ந்த நுழைவாயிலைக் கடந்தவுடன் வலப்புறம் குஸ்தாவின் சிலை அமைக்கப்பட்டிருப்பதை ஏற்கனவே கண்டோம். அதனைக் கடந்து செல்லுங்கள். கோடை நேரத்தில் நீங்கள் சென்றால் இருபுறமும் பச்சைப்பசேலெனப் புல்வெளி வழி அமைத்துக் கொடுக்கும். குளிர்காலத்தில் சென்றீர்களேயானால் வெள்ளைப் பனி உங்களுக்குக் கம்பளம் விரிக்கும்.
பாலத்தின் இருபுறமும் அமையும் தடுப்புச் சுவர்களில் ஏராளமான வெண்கலச் சிலைகள். மொத்தம் ஐம்பத்தெட்டுச் சிலைகள். இவற்றுள் பெரும்பாலானவை சிறுவர்களின் சிலைகள். கிரானைட்டில் அமைந்த இச்சிலைகள் சிலவற்றில் வெண்கலத்தாலான வளையமும் உண்டு.
சிறுவர்கள் சிலை தவிர ஆண், பெண் உறவு நிலை, தந்தையும் குழந்தையும் விளையாடும் மகிழ்வு நிலை, குழந்தையைத் தூக்கிக் கொண்டு மகிழும் தாயின் பூரிப்பு நிலை எனப்பல்வேறு நிலைகளில் சிலைகள்.
ஒரு காலை மட்டும் லேசாக உயர்த்திக் கோபமாய்ப் பார்த்துக் கொண்டிருக்கும் சிறுவனின் சிலை முக்கியமானது. சினங்கொண்ட சிறுவன் (Sinnataggen) எனப்பெயர் பெற்ற இச்சிலை வித்தியாசமாய் அமைந்து பலரையும் கவர்ந்து பூங்காச் சிலைகளுள் முக்கிய இடம் வகிக்கிறது.
வட்ட வடிவ வளையத்தினுள் அமைக்கப்பட்டிருக்கும் ஆண்-பெண் சிற்பங்கள் இறவா நிலையைக் குறிக்கும் (Wheel of Eternity) சிறப்புச் சிற்பங்களாம்.
பாலத்தைக் கடந்து சென்றவுடன் எதிர்ப்படுவது ஒரு நீரூற்று. ஆறு பெரிய மனிதச் சிற்பங்கள் ஒரு பெரிய தட்டை ஏந்திப்பிடித்துள்ளனர். அந்தத் தட்டிலிருந்து நீர் வழிவது போல் அமைக்கப்பட்டிருக்கின்றது இந்த நீரூற்று.
பூங்காவில் முதன் முதலில் அமைக்கப்பட்ட சிற்பங்களில் இதுவும் ஒன்று என்கிறார்கள். ஓஸ்லோ நகரின் பாராளுமன்றத்துமுன் இந்நீரூற்றினை அமைக்கத் திட்டமிடப்பட்டிருந்ததாம். பின்னர் அத்திட்டத்தினை மாற்றி பூங்காவில் இந்த நீரூற்று வடிவமைக்கப்பட்டது. நீரூற்றைச் சுற்றிலும் மரமும் மனிதர்களும் சேர்ந்த சிற்பங்கள் அமைந்துள்ளன. இரண்டு மீட்டர் உயரத்திற்கு வளர்ந்த இருபது சிற்பங்கள் மனித வாழ்வின் தொடக்கம் முதல் முடக்கம் வரை நிகழும் நிகழ்வுகளைச் சித்தரிக்கும் காட்சிகளைக் கொண்டிருக்கின்றன. வாழ்க்கை மரம் (Tree of Life) என்றழைக்கப்படுகின்றன இந்தச் சிற்பங்கள். இயற்கையோடு இணைந்த மனித வாழ்வை இச்சிறபங்கள் வெளிப்படுத்துகின்றன.
நீரூற்றைக் கடந்து பூங்காவின் உயரமான பகுதியில் ஏறினால் தெரிவது ஒரே கல்லினால் அமைக்கப்பட்ட தூண் (Monolith). மிகப்பிரம்மாண்டமாய் அமைக்கப்பட்ட இந்தத் தூண் சுமார் பதினைந்து மீட்டர் உயரம் உடையது.
இந்ததூணில் 121 உருவங்கள் வடிக்கப்பட்டுள்ளன. ஒருவரை ஒருவர் பிடித்துக் கொண்டும் அணைத்துக்கொண்டும் நெருக்கமாய் அமைந்த சிற்பங்கள். மனித வாழ்வின் மறு பிறப்பு, வாழ்வின் போது படும் துயரங்கள், போராட்டம், தளைகளிலிருந்து விட்டு விடுதலை ஆகி இறைவனடி சேர எடுத்துக் கொள்ளும் முயற்சி போன்றவற்றைச் சித்தரிப்பதாய் விஜிலன்ட் இந்தத் தூணை வடிவமைத்தாராம். 1925-ல் வடிவமைக்கப்பட்ட இந்தத் தூணை நிர்மாணிக்கப் பல வருடங்கள் ஆனது. விஜிலன்ட் இறப்பதற்கு முன் 1943-ல் இந்தத் தூண் முழுமை பெற்றது.
இந்தத் தூணைச் சுற்றிலும் பெரிது பெரிதாய் அமைந்த கிரானைட் சிற்பங்கள். இவையும் மனித வாழ்க்கையச் சித்தரிப்பவையே. பெரிய தூணின் அருகே செல்ல அமைந்த படிகளை சுற்றிலும் இந்தச் சிற்பங்கள் அமைந்துள்ளன. ஒவ்வொரு குழுவிலும் ஒன்றுக்கு மேற்பட்ட சிற்பங்கள் அமைந்துள்ளன. மொத்தமாய் 36 குழுக்கள்.
தாயின் முதுகில் ஏறிச் சவாரி செய்யும் குழந்தைகள், தந்தையின் அரவணைப்பிலிருக்கும் குழந்தைகள், ஆணும் பெண்ணும் தழுவிக்கொண்டிருக்கும் காதல் நிலை, குழந்தைகள் மட்டும் கூடிக் குதூகலிக்கும் சிற்பங்கள், வயதான நிலையில் ஆணும் பெண்ணும் அடையும் துயர நிலை என்று வாழ்க்கையின் வெவ்வேறு நிலைகளைப் படம் பிடிக்கும் வண்ணம் அமைந்திருக்கின்றன இச்சிற்பங்கள். மலைக்க வைக்கின்றன.
இந்தத் தூணைக் கடந்து படிகளில் இறங்கித் தொடர்ந்து சென்றால் இறுதியாய் வரவேற்பது "வாழ்க்கைச் சக்கரம்" (Wheel of Life) என்றழைக்கப்படும் வளைய வடிவச் சிற்பம். விஜிலன்ட் பூங்காவின் இறுதிச் சிற்பமாய் , தன்னந்தனியே அமைந்திருக்கிறது இச்சிற்பம்.
ஒரு ஆண், ஒரு பெண் மற்றும் ஒரு குழந்தை , மூன்று சிற்பங்களும் வளைந்துகொண்டு ஒன்றையொன்று பிடித்துக் கொண்டு , சிற்பங்களால் செய்த ஒரு மாலை போல் அமைந்திருக்கின்றது. இப்பூங்காவின் அமைப்பினை ஒரே வார்த்தையில் விளக்கும் வண்ணம் (ஜனனம் முதல் மரணம் வரை) இச்சிற்பத்தை விஜிலன்ட் அமைத்தாராம். வெண்கலத்தாலானது இச்சிற்பம்.
ஓஸ்லோ செல்பவர்கள் இப்பூங்காவினைத் தவற விடுவதில்லை. கலை நேர்த்தியுடன் அமைக்கப்பட்ட இச்சிற்பங்களைக் காண வாய்ப்புக் கிடைத்தால் நழுவ விடாதீர்கள்!
0 Comments:
Post a Comment
<< Home