February 06, 2005

பாலம் - 2



கோபன் ஹேகன் செல்லும் விமானங்களில் நீங்கள் பயணம் செய்தால், தரையிறங்கும் போது விமானச் சன்னல் வழியாக வெளியே பாருங்கள். அன்றைய வானிலை தெளிவாயிருந்தால் நீல நிறக் கடலும், கடலின் ஊடே ஓடும் ஒரு பாலமும் அழகாய்க் கண்ணில் விரியும். கடல் நடுவே திடீரென்று பாலம் மறைந்து போவதையும் பார்ப்பீர்கள். நடுக்கடலில் உயரமான நான்கு தூண்கள் பாலத்திற்கு மேல் வளர்ந்து கொண்டிருப்பதும் தெரியும்.



உலகிலேயே இரண்டாவது நீளமான தொங்கு பாலம் ( Suspension Bridge) இதுதான். சுமார் 1.6 கீலோமீட்டர் நிளத்தில் அமைந்தது இந்த கம்பி தாங்குப் பாலம் (Cable-stayed). உயர் இழுவிசை(Hyper tension) கொண்ட இக்கம்பிகளைத் தாங்கும் தூண்கள் (Pylons) இரு நூறு மீட்டர் உயரத்திற்கும் மேல் கம்பீரமாய் நிற்கின்றன. ஸ்வீடனின் மிக உயர்ந்த கட்டிட அமைப்பு இந்தத் தூண்கள் எனலாம். இந்தத் தொங்கு பாலத்தின் இரு புறமும் இணைபவை அணுகு பாலங்கள் (Approach bridges) . ஸ்வீடனின் மேற்குப்பகுதியிலிருந்து தொங்கு பாலத்தில் இணைவது ஒன்று; பாலத்தைத் தாங்க 120 மீட்டர் இடைவெளியில் அமைந்த தூண்கள் நான்கு கிலோமீட்டர் நீளத்திற்குத் தொடர்ந்து தொங்கு பாலத்தில் முடிகிறது. தொங்குபாலத்தின் முடிவில் தொடரும் மற்றொரு அணுகு பாலம் மூன்று கிலோமீட்டர்கள் நீளமுடையது. நூற்று நாற்பது மீட்டர் இடைவெளியிலமைந்த தூண்கள் இப்பகுதியைத் தாங்குகின்றன. கடல் மட்டத்திற்குக் கீழ் பதினைந்து மீட்டர் ஆழத்திற்குச் செல்வன இத்தூண்கள். கடலுக்குள் செயற்கையாய் அமைக்கப்பட்டிருக்கும் தீவுப்பகுதியில் இந்த அணுகு பாலம் முடிகிறது.


படம்: பாலத்தின் கீழ் தளம் , இரயில் பாதை

கடலின் மேலே ஓடிக்கொண்டிருந்த பாலம் கடலுக்குள் ஓடி முகம் புதைத்துக்கொள்ளுவது போன்ற ஒரு தோற்றம். பாலம் சுரங்கப்பாதையாய்த் தொடர்வதற்கு ஏதுவாய் இந்தச் செயற்கைத் தீவுப்பகுதி அமைக்கப்பட்டிருக்கிறது. மேலடுக்கில் சாலையும், கீழடுக்கில் இருப்புப்பாதையுமாய் அமைந்த பாலத்தின் உருவம் இத்தீவுப்பகுதியில் மாற்றம் கொள்கிறது. சாலையும் இரயில் பாதையும் இணையாகச் சிறிது தூரம் செல்கின்றன. இத்தீவின் நீளம் சுமார் நான்கு கிலோமீட்டர்கள். கடலுக்குள் நிலப்பகுதியை உருவாக்க ஏகப்பட்ட மணலும் கல்லும் தேவைப்பட்டன.ஏழு மில்லியன் கன மீட்டர் மணலும் ஒன்றரை மில்லியன் கன மீட்டர் கற்களும், பாலம் அமைக்கையில் தோண்டப்பட்ட கடலடி மண்ணும் இப்பகுதியில் கொட்டப்பட்டு நிலமானது.

தீவிலிருந்து ஆரம்பிக்கும் சுரங்கப்பாதை கோபன்கேஹன் நகரின் கிழக்குக்கரையில் முடிகிறது. இந்தச் சுரங்கம் நான்கு குழாய்களைக்கொண்டது. இரண்டு சாலைக்குழாய்கள் , இரண்டு இரயில் பாதைக்குழாய்கள். அனைத்தும் ஒருவழிப்பாதைகள். நான்கு கிலோமீட்டர் நீளச் சுரங்கத்தில் அவரச வழிகள் 88 மீட்டர் இடைவெளியில் அமைக்கப்பட்டிருக்கின்றன, இந்த நான்கு குழாய்கள் தவிர அவசர காலத்தில் பயன்படுத்தும் ஒரு பாதையும் சுரங்கத்தை ஒட்டியே அமைக்கப்பட்டிருக்கிறது. சுரங்கத்தின் உட்சுவர்கள் எளிதில் தீப்பிடிக்காத பொருட்கள் கொண்டு அமைக்கப்பட்டிருக்கின்றன.
தொடரும் இரயில் பாதை கோபன் ஹேகனின் விமான நிலையம் வழியே சென்று நகரின் மையத்தை அடைகிறது. விமான நிலையத்தின் அடித் தளத்திலேயே இரயில் நிறுத்தம் அமைந்திருக்கிறது.


மேலே படம்: வாகனங்கள் செல்லும் சுரங்கப்பாதை

இந்தப்பாலம் கட்டி முடிக்க இரண்டு பில்லியன் ஈரோ செலவானது.கி. பி 2000 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் தேதி போக்குவரவுக்குத் திறக்கப்பட்டது.டென்மார்க்கும் ஸ்வீடனும் பனியுலகுக் காலத்தில் (Ice Age) உறைபனியின் மூலம் இணைக்கப்பட்டிருந்தனவாம். இரு நாடுகளும் சுமார் ஏழாயிரம் ஆண்டுகளுக்குப் பின் இந்தப் பாலம் மூலம் மீண்டும் தரைவழியால் இணைக்கப்பட்டன.



இன்னும் சில தகவல்கள், குறிப்புகளாய்.

1. ஒருமுறை இப்பாலத்தைக் கடப்பதற்கு முப்பது ஈரோ நுழைவுக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பாலத்தை அடிக்கடி கடக்கும் டாக்ஸிகளுள் உணர்வி (Sensor) ஒன்று பொருத்தப் பட்டிருக்கும் . சுங்கம் வசூலிக்கும் இடத்துக்கருகே வந்ததும் இந்த உணர்வியை டாக்ஸி ஓட்டுனர்கள் இயக்குகிறார்கள். டாக்ஸியின் தகவல்கள் உடனடியாய்ப் பறிமாறப்பட்டு கடன் அட்டைகள் மூலம் கட்டணம் வசூலாகிறது.

2.பாலப்போக்குவரவு துவங்குவதற்கு முதல் மாதம் 21 கிலோமீட்டர் தூர மராத்தான் ஓட்டம் பாலம் வழியாய் நடைபெற்றது. எண்பதாயிரம் பேர் இதில் பங்கேற்றனர். வருடந்தோரும் கோடையில் இந்த ஓட்டம் நடைபெறுகிறது.

3. பாலம் திறக்கப்பட்டு மூன்று மாதங்களுக்குள் பத்து லட்சம் வாகனங்கள் இதனைக்கடந்து சென்றன. மூன்று ஆண்டுகளில் ஒரு கோடி வாகனங்கள் பாலம் மீது பயணம் செய்திருக்கின்றன.

4. மோசமான வானிலை, சூறைக்காற்றுக்கள் வீசும் சமயங்களிம் தற்காலிகமாய்ப் பாலப் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. சில வேளைகளில் சுரங்கப் பாலத்தில் தீப் பிடித்ததாய் வதந்தி நிலவியும் போக்குவரவு ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

5. சர்வதேச பாலங்கள் மற்றும் கட்டுமானப் பொறியியல் அமைப்பு (IABSE) , 2003 -ஆம் ஆண்டின் சிறந்த பாலமாக ஒர்ஸுன்ட் பாலத்தைத் தேர்ந்தெடுத்தது.

1 Comments:

Anonymous Anonymous சொல்கிறார்...

அதனருகே கடற்பயணத்த போது கடல் நடுவே திடீரென்று பாலம் மறைந்து போனது கண்டு வியந்தது உண்டு.


பரணீதரன்
http://blog.baranee.net

2:54 PM  

Post a Comment

<< Home