January 25, 2005

பாலம் - 1

நான் வசிக்கும் மால்மோ ஸ்வீடனின் தென்பகுதியிலுள்ள நகரம் . இது ஸ்வீடனின் மூன்றாவது பெரிய நகரம். ஸ்வீடனின் தலைநகர் ஸ்டாக்ஹோம், மால்மோவிலிருந்து சுமார் அறுநூறு கிலோமீட்டர் தொலைவில் அமைகிறது. மால்மோ மூன்றாவது பெரிய நகரம் என்றாலும் மிகப் பெரிய நகர் அல்ல. ஒரு குட்டி விமான நிலையமே உள்ளது. இங்கிருந்து டென்மார்க் மிகவும் அருகாமையில் அமைந்திருக்கிறது. டென்மார்க்கின் தலைநகர் கோபன்ஹேகன் மால்மோவிற்கு மேற்கே அமைந்த ஒரு பெரு நகரம். மால்மோ வையும் கோபன்ஹேகனையும் பிரிப்பது பால்டிக் கடல். கடல் பிரிக்கும் இந்தப்பகுதிக்கு ஒர்ஸுண்ட் (Oresund) என்று பெயர். ஐந்தாண்டுகளுக்கு முன் வரை கோபன்ஹேகனுக்குப் பயணம் செய்யச் சாலை வழி எதுவும் இல்லை. கடல் வழிதான். கோபன்ஹேகனில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்குச் செல்வதற்கோ , மற்ற சரக்குப் போக்குவரத்து மேற்கொள்ளுவதற்கோ கப்பற்போக்குவரத்தையே முற்றிலும் நம்பியிருந்த நிலை.



இக்கடலின் குறுக்காக ஒரு பாலம் அமைத்தால் போக்குவரத்துக்கு மிகவும் வசதியாக இருக்குமே என்று இரு நாட்டு அரசுகளும் நீண்ட காலமாகவே யோசித்து வந்தன. இறுதியாக அத்திட்டத்துக்கு செயல் வடிவம் கொடுக்கப்பட்டது. கி. பி 1990-ல் இறுதித் திட்டம் வகுக்கப்பட்டு மால்மோவிற்கும் கோபன்ஹேகனுக்கும் இடையே கடலின் மீது பாலம் அமைக்கும் வேலைகள் தொடங்கப்பட்டன. திட்டம் வெற்றிகரமாக நிறைவுற்றால் மிகப்பெரும் நன்மைகள் இரு நாடுகளுக்கும் கிட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. சுற்றுலா, கலை, பண்பாடு , வேலை வாய்ப்புகள் மற்றும் கல்வி ஆகிய துறைகளுள் இரு நாடுகளும் மேலும் நெருங்கி வெருவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாய் இரு அரசுகளும் அறிவித்தன.

கடலில் சுமார் பன்னிரெண்டு கிலோமீட்டர் நீளத்துக்குப் பாலம் அமைப்பது எளிய காரியமன்று. இது சாலை மற்றும் இரயில் செல்லும் இருப்புப்பாதை என ஈரடுக்குப் பாலமாக, அமைக்க முடிவானது. மேல்தளத்தில் சாலையும் கீழ்தளத்தில் இரயில் பாதையும் அமைப்பதற்கென வேலைகள் விறுவிறுப்பாய் ஆரம்பிக்கப்பட்டன. ஆனால் கடல்பாலம் கட்டும் கட்டுமானப் பணிகளிலுள்ள சவால்களைச் சமாளிப்பதைவிட இப்பாலம் கட்டுவதற்கு எழுந்த எதிர்ப்புகளைச் சமாளிப்பது இரு அரசுகளுக்கும் பெரிய சவலாய் இருந்தது.

கடலின் நடுவே இப்பாலம் கட்டப்பட்டால் சுற்றுச் சூழல் பாதிக்கப்படும் என்று பல்வேறு அமைப்புகள் அச்சம் தெரிவித்தன. இப்பகுதியில் உள்ள அரிய பல பறவையினங்களுக்கு பாதிப்பு நேரும் என்றனர். பால்டிக் கடலின் அடியில் உள்ள இயற்கை வளங்கள் பாதிக்கப்படுவதோடு கடல் நீரின் ஓட்டம் இதனால் தடைப்படும் என்றும், பாலம் கட்டப்படுவதால் ஏற்படப்போகும் மாசு மற்றும் வேதிப்பொருட்களினால் மீனினங்கள் மாண்டுவிடும் என்றும் கிளர்ச்சிகள் எழுந்தன. கடல் நீரின் உவர்ப்புத்தன்மையில் (Salinity) மாறுதல் ஏற்பட்டுச் சூழியல் சமனிலையின்மை நிலவும் என்றும் எதிர்ப்புத் தெரிவித்தனர். பசுமையமைதி அமைப்பும் (Green Peace) எதிர்ப்புத் தெரிவித்தது.

இரு நாட்டு அரசுகளும் இப்பிரச்சினைகளை விவாதிக்க சிறப்பு விசாரணைகளை நடத்தின. சூழல் மாசுபடாவண்ணம் பாலத்தைக் கட்டிக்கொள்ளும் வகையில் பாலம் கட்டும் திட்டத்தில் பல மாறுதல்கள் செய்யப்பட்டன. பெரும்பான்மையான அமைப்புகளிடம் ஒப்புதல் பெறப் பட்டது. ஆனால் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்வீடன் நாட்டு சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த ஒலோஃப் யோஹன்ஸன் (Olof Johansson) என்பவர் தனது பதவியைத் துறந்தார்.

தொடர்ந்த எதிர்ப்புகளுக்கிடையில் கட்டுமானப்பணிகள் தொடங்கின. முதலில் வகுத்திருந்த திட்டத்தில் பல மாறுதல்கள் செய்யப்பட்டன. கடல் மீது எட்டு கிலோமீட்டருக்கு ஒரு பாலம், பின்னர் கடலுக்குள் நான்கு கிலோமீட்டர் நீளத்தில் ஒரு சுரங்கப்பாலம் மற்றும் கடற்பாலத்திலிருந்து சுரங்கப்பாலம் இணையுமிடத்தில் ஒரு செயற்கைத்தீவு ஆகியவை அமைக்க முடிவானது.



அடுத்த பதிவிலும் "பாலம்" தொடர்கிறது.

0 Comments:

Post a Comment

<< Home