பின்லாந்து - 1
ஸ்கான்டினேவிய நாடுகளுள் பின்லாந்து சற்று வித்தியாசமானது. நார்வே, டென்மார்க் மற்றும் ஸ்வீடனில் பேசப்படும் மொழிகளான நார்வீஜியன், டானிஷ் மற்றும் ஸ்வீடிஷ் , ஒன்றோடொன்று தொடர்புடைய மொழிகள். பின்லாந்து நாட்டின் மொழியான பின்னிஷ் சற்றே வேறுபட்டது. உச்சரிப்பிலும் வேறுபாடுகளுண்டு. பின்லாந்து தவிர மற்ற நாடுகள் இன்னும் ஈரோ -விற்கு மாறவில்லை. இன்னும் தனித்தனி நாணயங்களே உபயோகத்தில் இருக்கின்றன ( நார்வே - நார்வீஜியன் க்ரோனார் [Kronor] , டென்மார்க் - டானிஷ் க்ரோனார் , ஸ்வீடன் - ஸ்வீடிஷ் க்ரோனார்) . ஸ்கான்டினேவிய நாடுகளுள் ஐஸ்லாந்தையும் சேர்த்துக்கொள்ளலாம். பின்லாந்தின் விமான சேவையை பின் ஏர் (Finn Air) கவனித்துக்கொள்ள மற்ற நாடுகளில் ஸ்கான்டினேவியன் ஏர்லைன்ஸ் செயல்படுகிறது. பின்லாந்து ஸ்கான்டினேவிய நாடுகளுள் ஒன்றல்ல என்று நம்புபவர்களும் ஐரோப்பாவில் உண்டு.

சென்ற வருடக் கோடையில் (2004) பின்லாந்தின் தலைநகரான ஹெல்ஸின்கி (Helsinki) செல்லத் தீர்மானித்து, ஒரு வார இறுதியில் பயணித்தோம். குளிர்காலங்களில் பின்லாந்தின் வெப்ப நிலை உறை நிலைக்குக் கீழ் இருபது , இருபத்தைந்து பாகை வரை வரலாம். கோடையில் அதிகபட்சமாக இருபது பாகை வரை செல்வதுண்டு. எனவே வெயில் காலத்தின் ஒரு வாரயிறுதியில் எங்கள் பயணம் அமைந்திருந்தது. கோபன் ஹேகனிலிருந்து ஸ்கான்டினேவியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் ஒன்றரை மணி நேரம் பயணித்து ஹெல்ஸின்கி சென்றடைந்தோம். பின்லாந்தின் நேரக் கணக்கீடு மற்ற மத்திய ஐரோப்பிய நாடுகளின் நேரக் கணக்கீட்டிலிருந்து மாறுபட்டது. மத்திய ஐரோப்பிய நேரத்தை விட பின்லாந்தில் ஒரு மணி நேரம் அதிகம். எனவே பயணம் இரண்டரை மணி நேரம் போலத் தோன்றலாம்.
இரவு மணி பதினொன்று என்றாலும் வெயில் மிச்சமிருந்தது. சூரியன் அஸ்தமனம் செய்யத்தயாராக இருக்கையில் விமான நிலையம் விட்டு ஹெல்ஸின்கி நகரம் செல்லும் பேருந்தினுள் ஏறினோம். நகரின் மத்திய இரயில் நிலையம் அடைந்து நாங்கள் முன்பதிவு செய்த விடுதி வழி செல்லும் சுரங்க இரயிலைத் தேடினோம்.
கறுப்பு உடையணிந்த நிறைய இளைஞர்கள் கையில் பீர் பாட்டிலுடன் எதிர்ப்பட்டனர். தொண்டை கிழியக் கத்திக் கொண்டும் ஓடிக்கொண்டும் ஏராளமான இளைஞர்கள். பெண்களும் உண்டு. அவர்களது வித்தியாசமான உடை ( மேலாடையும் கீழாடையும் கறுப்பு ) , நீளமாய்த் தொங்கிய முடி ,ஆர்ப்பட்டம் போன்றவை வேறெங்கும் நான் கண்டதில்லை. ஒருவேளை வார இறுதிக் கூத்திற்காக இருக்கலாம் என்று எண்ணினேன். ஆனால் நாங்கள் பின்லாந்தில் தங்கியிருந்த மற்ற இரு நாட்களில் கூட கறுப்பு உடை இளைஞர் கூட்டத்தை மாலை வேளைகளில் அதிகம் காண முடிந்தது.
இரயிலில் பயணம் செய்து குறிப்பிட்ட இடத்தை அடைந்து விடுதியைத் தேடினோம். அந்த இடம் முழுதும் கறுப்புடை இளைஞர்களின் ஆர்ப்பாட்டம் அதிகமாயிருந்தது. விடுதியைத் தேடி நடந்து கொண்டிருக்கையில் ஒரு இளம்பெண் உதவிக்கு வந்தாள். நாங்கள் தேடும் இடம் அவளுக்குத் தெரியுமென்றும், ஏற்கனவே அவள் அங்கு தங்கியிருக்கிறாள் என்றும் கூறினாள். இந்த இரவு நேரத்தில் பெட்டிகளைத் தூக்கிக் கொண்டு இப்படி நடந்து வருவது ஆபத்தானது என்றும் சொன்னாள். என்ன ஆபத்து என்று என் மனைவி கேட்டதற்கு , " ஒன்றுமில்லை, இந்த இளைஞர்கள் குடித்துக் கும்மாளம் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். எதற்கும் எச்சரிக்கையாய் இருப்பது நல்லது" என்றாள். அந்த விடுதியை அடைந்த பிறகு தான் அது தவறான இடம் என்று தெரிந்தது, அவ்விடுதி வரவேற்பாளனிடம் வழி கேட்டு மீண்டும் வந்த வழியே திரும்பித் தேடலானோம்.
வீதிகளின் பெயர்ப்பலகை இரண்டு மொழிகளில் (ஸ்வீடிஷ் மற்றும் பின்னிஷ் மொழிகளில்)குறிப்பிடப் பட்டிருந்தது. நீண்ட காலமாக பின்லாந்து நாட்டை ஸ்வீடிஷ் மன்னர்கள் பிடித்து வைத்துக் கொண்டு ஆண்ட காரணத்தினால் ஏற்பட்ட வழக்கமிது. பேருந்துகளிலும், இரயில்களிலும் கூட இந்த இருமொழிக்கொள்கை அறிவிப்பு வழக்கமிருக்கிறது. நாங்கள் வைத்திருந்த நகர வரைபடத்தில் பின்னிஷ் மொழியில் மட்டும் குறிப்பிடப்பட்டிருக்கவே சற்றுக் குழம்பிய படியே தேடிக்கொண்டிருந்தோம். வழியில் கண்ட ஒரு குடித்த இளைஞன் எதுவும் உதவி வேண்டுமா எனக் கேட்டான். நிற்க முடியாமல் தள்ளாடிக் கொண்டிருந்தவனிடம் எப்படி வழி கேட்பது? இருப்பினும் வரைபடத்தைக் காட்டி வழி கேட்டோம். அவனும் அதைப்பார்த்து விட்டு ஒரு திசையில் கை நீட்டி அத்திசையில் தொடர்ந்த சாலைவழி செல்லச் சொன்னான். அதிர்ஷ்டவசமாக அந்தச் சாலை வளைவிலேயே விடுதி தென்பட்டது. அதற்குள் இன்னொரு நடுத்தர வயதுக்காரர் "நீங்கள் இந்த விடுதியைத்தான் தேடுகிறீர்கள் என்று நினைக்கிறேன்" என்று கூறி கைகாட்டிவிட்டுச் சென்றார். பரவாயில்லை , இந்த ஊரில் உதவும் மனப்பான்மை சற்று அதிகமாகவே இருக்கிறது என்று எண்ணியபடியே விடுதியை அடைந்து ஓய்வெடுத்தோம்.
மறுநாள் காலையில் எழுந்து தயாராகி காலை உணவிற்காக விடுதியின் உணவகத்திற்குச் சென்றபோது, அதே கறுப்பு உடையில் இளைஞர்கள் பலர் உறக்கம் கலையாத கண்களுடன் தென்பட்டனர். இரவு முழுதும் ஆட்டம் , பாட்டம் கொண்டாட்டம்தான்.
முதலில் நாங்கள் சென்றது ஹெல்ஸின்கி நகரின் சின்னம் போல் விளங்கும் ஒரு தேவாலயம். நகரின் முக்கியப்பகுதியான ஸெனட் சதுக்கத்தில் இது அமைந்துள்ளது. இந்த ஸெனட் சதுக்கத்தில் தான் அரசு கட்டிடங்கள் , பல்கலைக் கழகம், நூலகம் போன்றவை அமைக்கப்பட்டிருக்கின்றன, இத்தனை கட்டிடங்களுக்கும் மகுடம் வைப்பது போல் அமைக்கப்பட்டிருக்கிறது இந்த தேவாலயம். கிறித்துவ மதத்தின் ஒரு பிரிவான ப்ரொட்டெஸ்டென்ட் இனத்தின் மற்றொரு உட்பிரிவு லூதரின். அதாவது மார்டின் லூதர் கருத்துக்களை ஒட்டி அமைந்த ப்ரொட்டெஸ்டென்ட் இனம்; அதன் கோட்பாடுகளை பின்பற்றிக் கட்டப்பட்ட தேவாலயங்களுள் இது மிகவும் பிரசித்தி பெற்றது.

சுமார் நூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன், பின்லாந்து ரஷ்யர்களின் வசமிருந்த போது இது கட்டப்பட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிரபலமாய் விளங்கிய நியோகிளாசிகல் (Neo Classical) முறைப்படி ( பழங்காலக் கிரீக்க மற்றும் ரோமானிய முறையைப் பின்பற்றியது என்கிறார்கள்) இக்கட்டடம் கட்டப்பட்டதாம். இதனைக் கட்டியவர் கார்ல் லுட்விக் எங்கெல்(Karl Ludwig Engel) எனும் ஜெர்மானியர். தரையிலிருந்து சற்று உயர்த்திக் கட்டப்பட்டுள்ளது. கட்டிடத்தின் முகப்பில் நிறைய படிகள். கவிழ்த்து வைத்த கொப்பரை போலப் பச்சை வண்ணக் கலசம்; தாமிரத்தாலானது. அதனைச் சுற்றியும் நான்கு சிறிய கூம்புக் கலசங்கள். தேவாலயத்தின் முகப்பில் அமைந்த தூண்கள் கம்பீரமாய் நிற்கின்றன. தூய வெள்ளையிலும், பச்சைக் கலசங்கள் கொண்ட உச்சியுமாய்ப் பளீரென்று வசீகரிக்கின்றது. பின்லாந்து நாட்டில், சுற்றுலாப்பயணிகளால் அதிக அளவு புகைப்படங்கள் எடுக்கப்பட்ட சின்னம் இது என்ற பெயரும் பெறுகிறது. தேவாலயத்தின் முன் பரந்த வெற்று வெளி. அந்த வெளியின் நடுவே ட்ஸார் அலெக்ஸாண்டரின் சிலை அமைக்கப் பட்டிருக்கிறது.
இச்சின்னத்தைக் கடந்து முன்னேறிச் செல்கையில் கடல் தென்பட்டது. மணல் பதியும் கடற்கரை கொண்ட இடமல்ல, கப்பல்களும் சிறிய, பெரிய ரகப் படகுகளும் வந்து நிற்கும் துறைமுகப் பகுதி. இவ்விடத்தை ஒட்டிய பகுதியில் காய்கறி, பழங்கள் மற்றும் மீன்கள் விற்கும் சந்தை சுறுசுறுப்பாய் இயங்கிக் கொண்டிருந்தது.
ஹெல்ஸின்கியைச் சுற்றிலும் சிறிதும் பெரிதுமாய் ஏராளமான தீவுக் கூட்டங்கள்(Archipelago) உண்டு. அம்மாதிரித் தீவுக்கூட்டங்களில் முக்கியமானது சுவோமென்லின்னா(Suomenlinna) எனப்பெயர் பெற்றதாகும். ஸ்வீடிஷ்-ல் இதை ஸ்வேபொர்க்( Sveaborg) என்று அழைக்கிறார்கள். ஐந்து தீவுகள் ஒட்டி அமைந்திருக்கின்றன. பழமை வாய்ந்த கடல் கோட்டை ஒன்றும் இங்கு உள்ளது.
அடுத்த பதிவில் மேலும்...
2 Comments:
gud post. keep it up
hello im living in finland helsinki. finland is very good & nice contry difrent language
Post a Comment
<< Home