பெர்லின் சுவர் -2
இரண்டு பகுதிகளும் துண்டிக்கப்பட்டதால் மக்கள் மிகுந்த இன்னலுற்றனர். உறவினர்களையும் நண்பர்களையும் சந்திக்க இயலாது அவதியுற்றனர். பலர் கிழக்கு ஜெர்மனியிலிருந்து மேற்கு ஜெர்மனிக்குத் தப்பிச் செல்ல முயன்றனர். தப்பிச் செல்ல இயலா வண்ணம் காவல் பலமாயிருந்தது. இருப்பினும் இம்முயற்சியில் பலர் வெற்றி பெற்றனர். இவ்வாறு தப்ப முயற்சிப்பவர்களை எச்சரித்துத் திருப்பி அனுப்பிவிட வேண்டும் என்றே காவல் துறைக்கு ஆணையிடப்பட்டிருந்ததாம் . ஆயினும் இறுதி நடவடிக்கையாக , தப்ப முயற்சிப்பவர்கள் எச்சரிக்கையை மீறினால் சுடலாம் என்று எல்லைப்படைக்கு அறிவுறுத்தப் பட்டிருந்தது. எச்சரிக்கையை மீறி எல்லை கடப்பவர்களை திரும்பச் சொல்லி வானை நோக்கி ஒருமுறை சுடுவார்களாம். அதனையும் மீறிச் சென்ற நூற்றுக் கணக்கான மக்கள் சுடப்பட்டு இறந்தனர். எவ்வளவு பேர் இறந்தனர் என்ற உண்மையான விவரம் அரசால் மறைக்கப்பட்டது.
படம்: ப்ரான்டன்பர்க் நுழைவாயிலும் அதைச் சுற்றியிருந்த பெர்லின் சுவரும் (1969-ல்)
சுவர் கட்டிய முதலாம் ஆண்டு நிறைவில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிளர்ச்சி நடைபெற்றது. பின்னர் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டில் கிழக்கு ஜெர்மனிக்கு மேற்கு ஜெர்மனியிலிருந்து மக்கள் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் சட்டங்கள் சற்றே தளர்த்தப்பட்டு உறவினர் திருமணம், பிறப்பு, இறப்பு போன்ற நிகழ்வுகளின் போது அனுமதி தரப்பட்டது. 1968 ஆம் ஆண்டு முதல், மேற்கு ஜெர்மனியிலிருந்து கிழக்கே வருபவர்கள் பாஸ்போர்ட் மற்றும் விஸா இருந்தால் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.
பெர்லினின் மேற்குப்பகுதியிலிருந்து கிழக்கே நுழைய நுழைவுச் சாவடிகள் உண்டு. அமெரிக்கக் கட்டுப்பாட்டுப்பகுதிலிருந்து கிழக்கு பெர்லின் நுழைய அமைந்த ஒரு சாவடி ப்ரைடுரிஹ்ஸ்ட்ராசே (Friedrichstrasse) எனும் இடத்தில் அமைந்திருந்தது. செக்பாயிண்ட் சார்லி (Check point Charlie) எனப்பெயரிடப்பட்ட இச்சாவடியில் இருந்து கிழக்கு பெர்லின் நுழைவதற்கு ஏராளமானோர் தினந்தோறும் வரிசையில் நிற்பது பல வருடங்களுக்கு வழக்கமாயிருந்தது. "அமெரிக்கக் கட்டுப்பாட்டுப்பகுதியிலிருந்து நீங்கள் வெளியேறுகிறீர்கள்" என அறிவுறுத்தும் பலகை (ஆங்கில, ஜெர்மன்,ரஷ்ய மற்றும் பிரெஞ்சு மொழிகளில்) அங்கு வைக்கப்பட்டு இருந்தது.
செக்பாயிண்ட் சார்லி தற்போது சுவர் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு பெர்லின் சுவரின் பல்வேறு நிகழ்வுகளை இன்னும் சுமந்து கொண்டிருக்கிறது. அது குறித்து பின்னர் காண்போம்.
இருபது ஆண்டுகளுக்கும் மேல் தொடர்ந்த போராட்டம் நாளாக நாளாக வலுத்ததேயன்றி குறையவில்லை. . கிழக்கு ஜெர்மனியிலும் கம்யூனிஸ அரசாங்கத்திற்குப் பல்வேறு நெருக்கடிகளும் குழப்பங்களும் ஏற்பட்டன. 1987-ல் அமெரிக்க ஜனாதிபதியாயிருந்த ரொல்னால்ட் ரீகன் ஜெர்மனிக்கு விஜயம் செய்தார். பெர்லின் நகரின் புகழ் பெற்ற பிரான்டன்பர்க் வாயில் முன் நிகழ்த்திய உரையில் சுவரைத் தரைமட்டமாக்குங்கள் என்று ரஷ்ய அதிபர் கார்பஷேவிடம் கேட்டுக்கொண்டார்.
ரஷ்ய அதிபரும் தனது திட்டமான பெர்ஸ்த்ரோய்கா - வை (Perestroika)அறிமுகப்படுத்தினார். இத்திட்டத்தின்படி சோவியத் யூனியனின் பிடியில் இருந்த பல நாடுகளுக்கு அரசியல், பொருளாதார மற்றும் சமூக வாழ்வில் மாற்றம் ஏற்படும்படி சுதந்திர உரிமை வழங்கப்படும் என்று அறிவித்தார்.எண்பதுகளின் இறுதியில் ஐரோப்பாவில் கம்யூனிஸ ஆதிக்கம் வீழ்வுற்று ஜனநாயகப்பாதையில் சில நாடுகள் அடியெடுத்தன. கிழக்கு ஜெர்மனியிலும் போராட்டங்கள் தொடர்ந்தன. 1989-ல் ஹங்கேரி தனது எல்லைகளை கிழக்கு ஜெர்மனியிலிருந்து வரும் அகதிகளுக்குத் திறந்துவிட்டு அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தது. இறுதியாக வேறு வழியின்றி 1989 ஆம் ஆண்டு நவம்பர் ஒன்பதாம் நாள் , கிழக்கு ஜெர்மனியிலிருந்து மேற்கு ஜெர்மனி செல்ல இனி எந்தக் கட்டுப்பாடும் தேவையில்லை என்று அரசு அறிவித்தது. மறுநாள் முதல் சுவரின் கதவுகள் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் மக்களுக்கு அதுவரை காத்திருக்கப் பொறுமை இல்லை. அன்றிரவே ஆயிரக்கணக்கான மக்கள் சுவரின் இருமருங்கும் கூடினர். கிழக்கு ஜெர்மன் காவலாளிகளுக்கு வாசலைத் திறந்து விடுவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. சந்தோஷ ஆர்ப்பரிப்பில் மக்கள் மேலும் திரண்டனர். சுவர்கள் மீது ஏறினர். சுவரை உடைத்தனர். சுவர் இருந்த சுவடு சில நாட்களில் மறைந்தது. இரு நாடுகளும் இணைந்தன. உலகம் வாழ்த்தியது.
0 Comments:
Post a Comment
<< Home