September 15, 2004

பெர்லின் சுவர் -4

செக் பாயிண்ட் சார்லி அருங்காட்சியகம். உள்ளே நுழைந்தவுடன் வண்ண வண்ண பாஸ்போர்ட்கள் வரவேற்றன. இவையனைத்தும் போலி பாஸ்போர்ட்டுகளாம். கிழக்கு ஜெர்மனியிலிருந்து தப்பித்து மேற்கு ஜெர்மனி வருவதற்கு போலியாகப் பல பாஸ்போர்ட்டுகள் தயாரித்து காவலாளிகளை ஏமாற்றினராம் . அவர்கள் பயன்படுத்திய பாஸ்போர்ட்டுக்கள் அனைத்தையும் சேகரித்து வைத்துள்ளனர். அருங்காட்சியகம் முழுவதும் பெரிய பெரிய கருப்பு வெள்ளைப்புகைப்படங்களும் அவற்றுக்கருகே அப்புகைப்படங்கள் பற்றிய குறிப்புக்களும் நிறைந்துகிடக்கின்றன. ஜெர்மன், ஆங்கிலம், ரஷ்ய மற்றும் பிரஞ்சு மொழிகளில் குறிப்புக்கள் எழுதப்பட்டுள்ளன.

இரண்டு ஆண்கள் உதட்டு முத்தமிடுவது போல் இருந்த ஒரு புகைப்படம் என்னைத் திகைப்பில் ஆழ்த்தியது. அங்கிருந்த குறிப்பைப்படித்த பிறகே அவ்விருவரும் முன்னாள் சோவியத் குடியரசில் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராயிருந்த லியோனிட் ப்ரெஸ்னெவ் மற்றும் கிழக்கு ஜெர்மனியின் கம்யூனிஸ்ட் தலைவர் எரிக் ஹோனெகெர் என்று புரிந்து கொண்டேன். இருவரும் சந்தித்தபோது சகோதரத்துவ முத்தமிட்டு தங்கள் பாசத்தை வெளிப்படுத்திய காட்சியே அது.

ஒரு பழைய கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. இஸெட்டா (Isetta) என்னும் சிறியரகக் கார் அது. அந்த வண்டியின் பெட்ரோல் நிரப்பும் டேன்க்-கை ஒருவர் ஒளிந்துகொள்ளும் வகையில் மாற்றி அமைத்தார் அந்தக் காரின் சொந்தக்காரரான ப்ரீஸ்டோபர் என்பவர். இதை மாற்றி அமைக்க இரண்டு மாத காலமானது. தபால் எடுத்துச் செல்லும் வேலை செய்துகொண்டிருந்த இவர் இக்காரில் ஒன்பது பேரை கிழக்கு ஜெர்மனியிலிருந்து மீட்டு மேற்கே அழைத்து வந்தார். பத்தாவது முறை மாட்டிக்கொண்டாராம். 1964 ஆம் வருடத்து மாடலான இந்தக்கார் இன்னும் பார்வைக்காக இங்கு வைக்கப்பட்டுள்ளது.

லாரிகளை வேகமாக ஓட்டி வந்து சுவர்களை இடிக்கும் முயற்சியும் பலமுறை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இம்முயற்சிகளைத் தடுக்கும் வண்ணம் சுவரின் அருகே அகழிகள் தோண்டப்பட்டு வேலி அமைத்து காவல் பலப்படுத்தப்பட்டது.

துணிகள் தைக்கும் தையல்காரர் ஒருவர் தினமும் மேற்கு ஜெர்மனியிலிருந்து கிழக்கே செல்வது வழக்கம். தையல் எந்திரத்தை ஒரு பெரிய மர டப்பாவினுள் எடுத்துச் செல்வாராம். கிழக்கு பெர்லினைச் சேர்ந்த ஒரு பெண் தப்பிக்க உதவும்படி கேட்டுக்கொள்ளவே அந்த மர டப்பாவினுள் தையல் எந்திரத்துக்குப்பதில் அப்பெண்ணை அடைத்து தனது சைக்கிளில் ஏறி ஓட்டிக்கொண்டே எல்லை கடந்தாராம். தினசரி அவர் செல்கையில் சோதனை செய்யும் காவலர்கள் சில நாட்களில் சோதிக்காமலே விட்டுவிடுவது வழக்கம். அன்றும் அதிர்ஷ்டம் அவருக்குக் கை கொடுத்தது. அப்பெண்ணும் தப்பித்தாள். சில நாட்கள் கழித்து இருவரும் திருமணம் செய்து கொண்டனராம்

சுவரின் கீழ்வழியாக சுரங்கம் தோண்டித் தப்பித்த கதைகளும் உண்டு. கிழக்கு பெர்லினில் இருந்த சில மாணவர்கள் ஒரு வீட்டின் குளியலறையிலிருந்து சுரங்கம் தோண்ட ஆரம்பித்தனர். நூற்றி நாற்பத்தைந்து மீட்டர் நீளமான இச்சுரங்கம் மேற்கு பெர்லினில் ஒரு பேக்கரியில் முடிவடைந்தது. இச்சுரங்கம் வழியாக ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் தப்பித்தனர். ஆனால் இச்சுரங்கம் சில நாட்களிலேயே கிழக்கு பெர்லின் காவலாளிகளால் கண்டு பிடிக்கப்பட்டு மூடப்பட்டது. இதே போல் கிழக்கு பெர்லினில் மற்றொரு சுரங்கமும் தோண்டப்பட்டதாம். கல்லறையினருகே தொடங்கிய இச்சுரங்கத்தைப்பயன்படுத்தியும் பலர் தப்பித்தனர்.
பெரிய ராட்சத பலூன்களில் காற்று நிரப்பி அதில் மிதந்தபடி வனவீதியின் வழியே தப்பிய ஒரு சம்பவமும் உண்டு. மற்றுமொருவர் ஒரு சிறிய க்ளைடர் விமானத்தை உருவாக்கி அதில் பறந்து தப்பினாராம். ரஷ்ய நாட்டு ராணுவ வீரர்கள் போல் சீருடை அணிந்த சிலர் எல்லை கடந்து செல்கையில், அவர்கள் உண்மையிலேயே ரஷ்ய வீரர்கள் என எண்ணிய கிழக்கு பெர்லின் காவலாளிகள் விரைப்பான சல்யூட் அடித்தனரம். மரியாதையை ஏற்றுக்கொண்டே அவர்கள் மேற்கு பெர்லினில் தஞ்சமானார்களாம்.

சுவரை ஒட்டியிருந்த வீடுகளும் தப்பிக்க உதவியிருக்கின்றன. மேற்குப்பகுதியிலிருந்த ஒரு பலமாடிக்கட்டடத்தின் ஜன்னலில் கட்டப்பட்ட கயிறு ஒன்றைப்பிடித்து கிழக்குப்பகுதியிலிருந்து சுவர் ஏறித் தப்பித்த நிகழ்வுகளும் உண்டு.
சுமார் ஐயாயிரம் பேருக்கு மேல் தப்பித்த நிகழ்ச்சிகள் வரலாறு ஆகியுள்ளது. இது தவிர கிழக்கு ஜெர்மனி ராணுவத்தைச் சேர்ந்த எழுநூற்றுக்கும் மேற்பட்டவர்களும் தப்பித்து மேற்கு பெர்லினில் அடைக்கலமாயினர்.

பெர்லின் சுவர் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளை விளக்கும் பல ஒளி-ஒலிக் காட்சிகள் சிறு சிறு அறைகளில் காட்டப்படுகின்றது. அஹிம்சை வழிப்போராட்டம்- காந்தி முதல் வலசா ( போலந்து நாட்டு அமைதிப்புரட்சியாளர்) வரை என்ற ஒரு விவரணப்படமும் அவ்வப்போது ஏற்பாடு செய்யப்பட்டுக் காட்டப்படுகிறது. பெர்லின் சுவர் பற்றிய நினைவுப் பொருட்கள் வாங்கும் சிறு கடையில் உடைந்த சுவரின் துண்டுகள் தற்போது விலைக்குக்கிடைக்கிறது.


ஏராளமான நினைவுகளைச் சுமந்து கொண்டு மியூசியம் விட்டு வெளியேறினோம்.

0 Comments:

Post a Comment

<< Home