October 18, 2004

லக்ஸம்பர்க் - 3



பியான்டன்(Vianden) செல்லும் சாலையும் வளைவுகள் நிரம்பியதாய் இருந்தது. அன்று மதியம் வரை இருந்த மந்த வானிலை மாறி வெய்யில் சுள்ளென்று அடிக்க ஆரம்பித்ததில் குளிர் விட்டு விலகியோடியது. எட்டில்ப்ருக்கிலிருந்து சுமார் ஒரு மணி நேரப்பயணத்தில் பியான்டன் அடைந்தோம். எங்கிருந்து பார்த்தாலும் மலைக்குன்றின் உச்சியில் இருந்த கம்பீரமான மலைக்கோட்டை மனதை மயக்கியது. அவர் (Our) நதிக்கரையிலமைந்த ( நதியின் பெயரே Our தான்) அழகிய கிராமம். நதியினை ஒட்டி வளர்ந்த சிறிய குன்று. உயரம் குறைவெனினும் நீளமான குன்று. குன்றின் மேலும் கீழும் வீடுகள். குன்றின் உச்சியை அடைய அமைந்த வளைந்த சரிந்த பாதைகள் . ஓரிடத்தில் மிதவைப்பயணம் இருந்தது. குன்றின் உச்சியை அடைய ஐந்து நிமிடங்கள் ந்டுத்துக்கொள்ளும் கேபிள் மிதவை. மேலே எழும்புகையில் பியான்டன் நகரின் இயற்கை தெளிவாய் விரிகிறது.



உச்சியை அடைந்ததும் கோட்டை சற்றே அருகில் தென்பட்டது. கேபிள் பயணம் நிறைவுறும் உச்சியிலிருந்து கோட்டைக்கு நடந்து செல்ல ஒரு ஒற்றையடிப்பாதை. பாதையின் இருபுறங்களிலும் ஓங்கி வளர்ந்த மரங்கள், உடைந்த கிளைகள், சிதறிய சருகுகள். அது சமதளமாய் அமைந்த பாதையல்ல, சரிவாய் அமைந்த பாதை . கோட்டை, மலையுச்சியிலிருந்து சற்று உயரம் குறைந்த இடத்தில் அமைந்திருப்பதால் சற்றே கீழிறங்கிச் சென்ற அப்பாதையில் இருபது நிமிட நடைக்குப்பின் கோட்டை வாசலை அடைந்தோம்.



பலமுறை புதுப்பிக்கப் பட்ட கோட்டை இது. பதினொன்றாம் நூற்றாண்டில் கட்ட ஆரம்பிக்கப் பட்டதாம். பதினான்காம் நூற்றாண்டில் வேலைகள் நிறைவடைந்தன. பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆரம்பத்தில் சிதைவடைந்த இக்கோட்டை மீண்டும் புதுப்பிக்கப்பட்டு வருகிறது, இன்றும். ரோமானிய முறைப்படி கட்டப்பட்ட இப்பெரிய கோட்டையில் இருபத்தி இரண்டு அறைகள்,கோட்டையின் மொத்த நீளம் 90 மீட்டர். எண்கோண வடிவில் அமைந்த ஒரு அறை வித்தியாசமானது. தொழுகை நடத்துமிடமும் (Chapel)அதையொட்டி அமைந்த பிரசங்க அறையும் (Oratory) இந்த எண்கோண அறையில் உண்டு.சுற்றிலும் ஆறு வாசல்கள் .உயரமான ஆர வளைவுத் தூண்கள் கம்பீரமாய் நின்றன. அதைத் தொடர்ந்த பெரிய அறை போர்வீரர்களின் அறையாம் (Knight's Room). நிறைய ஓவியங்களும், சிலைகளும் இருந்தன. அந்நாளில் போர்வீரர்கள் அணிந்த கவச உடைகள் வைக்கப்பட்டிருந்தன. நுண்ணிய இரும்பு வளையங்களான கவச உடை பதினாலாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாம். இது தவிர மற்ற போராயுதங்களும் காணக் கிடைத்தன.வழக்கமாக எல்லா அரண்மனைகளிலும் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டிருக்கும் பொருட்கள் இங்கும் இருந்தன. மன்னர்கள் பயன்படுத்திய கட்டில்கள், மேசை, நாற்காலிகள் , வாட்கள் முதலியன அவற்றுள் சில. அந்தக்காலத்து சமயலறையும் பழமை கெடாமல் அப்படியே இருக்கிறது. சமையல் செய்யும் ஏவலாளிகள் போல் மெழுகு பொம்மைகள் வைத்து அடுப்பில் சமைப்பது, கறி வெட்டுவது போன்ற நிகழ்ச்சிகளை கண்முன் நிறுத்துகிறார்கள்.

அரண்மனையின் வெளியிலிருந்து எந்தப்பக்கம் திரும்பினாலும் பசுமை கொஞ்சும் மலைப்பகுதி, மலையில் சரிவாய் அமைந்த வீடுகள், சரிவாய் ஓடும் சாலைகள், மலையின் கீழ் தவழ்ந்து செல்லும் ஆறு என மனம் மயக்கும் காட்சிகள்.



திரும்ப மனமின்றித் திரும்பினோம். கீழிறங்கிச் செல்ல மற்றொரு சாலையைத் தேர்ந்து சாலைவழி நடந்தோம். சரிவாய் அமைந்த பாதைகளில் மலைவழி பைக் ஓட்டும் பொழுதுபோக்கு (Mountain Biking) சுறுசுறுப்பாய் நடந்து கொண்டிருந்தது.

மறுநாள் நாங்கள் சென்றது பௌபோர்ட் (Beaufort) எனப்படும் சிற்றூர். இந்தப்பகுதி முல்லர்தால் (Mullerthal) எனும் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்தப் பகுதியின் நிலவமைப்பு சுவிட்சர்லாந்து நாட்டின் அமைப்பை ஒத்திருப்பதால் குட்டி சுவிஸ் (Little Switzerland) எனும் பட்டப் பெயருமுண்டு. லக்ஸம்பர்க் நகரிலிருந்து மீண்டும் ஒரு பேருந்துப்பயணம். வழக்கம் போல் மேடு பள்ளமான பசுமைப் பகுதி. வழியெங்கும் நிறைய கோல்ப் மைதானங்கள். சில இடங்கள் மரங்கள் அடர்ந்த மலைப்பகுதி. சலசலத்து ஓடும் சிற்றோடைகள் .



சரிவாய் அமைந்த மலைப்பகுதியேலேயே இங்கும் வீடுகள். விதவிதமான பாறைகளின் அமைப்பு. மீண்டும் ஒரு பழமையான கோட்டை. பன்னிரெண்டாம் நூற்றாண்டில் கட்டபட்ட இக்கோட்டை மட்டும் தற்போது எஞ்சியிருகிறது. முற்றிலும் கற்கலால் ஆன கோட்டை இது. பாதாள சித்திரவதை அறைகள் பயமுறுத்தின. சிறு சிறு அறைகள், மற்றபடி சொல்லிக்கொள்ளும்படி வேறெதுவும் இல்லை. கற்சுவரில் ஓடிய சுவர்ப்பல்லியைப் பார்த்து அதிசயித்துக் குதூகலித்த ஒரு சுற்றுலாச் சிறுவனும் அவனது தந்தையும் கண்டு நாங்கள் சிரித்தோம்.

கோட்டையின் மீது ஏறி உச்சியில் நின்று சுற்றிப்பார்க்கையில் தெரிந்த அடர்ந்த காடு எங்களை அழைத்தது. ஆனால் திரும்பிச் செல்லும் விமானப் பயணம் நினைவுக்கு வர காட்டிற்கு விடை கொடுத்து கண்ணுக்கினிய காட்சிகளை எடுத்துக் கொண்டு விமான நிலையம் அடைந்து மியூனிக் செல்லும் குட்டி விமானத்திலேறி ஊர் திரும்பினோம்.

1 Comments:

Blogger இரா. செல்வராசு (R.Selvaraj) சொல்கிறார்...

எழில், உங்கள் பயணக் கட்டுரைகள் மிகவும் நன்றாக இருக்கின்றன. குறிப்பாகப் படங்கள் மிகவும் அருமை.

3:37 AM  

Post a Comment

<< Home