October 02, 2004

லக்ஸம்பர்க் - 2



லக்ஸம்பர்க்-கின் தொட்டில் எனப்படும் இப்பள்ளத்தாக்குப் பகுதியில் இரண்டு பெரிய பாதுகாப்பு அரண்கள் கட்டப்பட்டன. போக் எனப்படும் அரண் (Bock casemates) ஒன்று, பெட்ருஸ்ஸெ பள்ளத்தாக்கில் அமைந்த மற்றொன்று. போக் அரண், பள்ளத்தாக்கின் குறுக்காகக் கட்டப்பட்ட, கற்பதுங்கறைகள் நிறைந்த ஒரு அமைப்பு.



வரைபடத்தில் காண்பது அதன் பக்கவாட்டு அமைப்பும் , அதன் குறுக்கு வெட்டு அமைப்பும் . முற்றிலும் கல்லால் ஆன இந்த அரணுள் ஏராளமான அறைகள். கற்கள் வளைவு வளைவாய் அமைய வெளிப்புறம் திறந்த துளைகள். ஒவ்வொரு துளைக்கருகிலும் ஒரு பீரங்கி மேடையும் அதன் மேல் ஒரு பீரங்கியும் வைக்கப்பட்டிருந்தது.



சுமார் ஐம்பது பீரங்கிகள் வைக்க மேடைகள் அமைக்கப்பட்டிருந்தனவாம். அதனைக்கடந்து கற்படிகளில் கீழிறங்கிச் செல்லவே வெளிச்சம் வரும் ஒரு இடம் தெரிந்தது. பால்கனி போல் அமைந்த அவ்விடம் சென்று வெளியே நோக்கினால் பள்ளத்தாக்கின் மொத்த அமைப்பும் அழகாகக் கண்களுக்குள் விரிகின்றன.

கைதிகளை அடைத்து வைக்கும் சிறையறைகளும் உண்டு உள்ளே நுழைந்தவுடன் இருக்கும் ஒரு பெரிய அறையில் தொல்பொருட்கள் , புகைப்படங்கள் மற்றும் அவற்றின் குறிப்புகள் பார்வைக்குக் கிடைக்கின்றன. இரண்டாம் உலகப்போரின் போது எவ்வாறு இந்தப்பள்ளத்தாக்கு ஏராளமான மக்களுக்கு பதுங்குமிடமாகப் பயன்பட்டது என அறியத்தரும் குறிப்புகள் உள்ளன. போர் விமானங்கள் வீசும் குண்டு வீச்சிலிருந்து சுமார் முப்பத்தைந்தாயிரம் மக்கள் இந்த அரண்களில் மறைந்து தப்பித்தனராம். பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஏராளமான போர் வீரர்களுக்கும் குதிரை முதலான விலங்குகளுக்கும் பாதுகாப்பான மறைவிடம் இதுதான். ஆயுதம் செய்யும் தொழிற்சாலைகளும் சமையலறைகளும் இருந்தனவாம்.
பதினெட்டாம் நூற்றாண்டில் மன்னரின் படைத்தளபதியாயிருந்தவரின் அறைகள், படுக்கையறை, படிப்பறை இந்த அரணுள் உள்ளது. அவர் தமது எண்பத்தியிரண்டாம் வயதில்கூட இங்குதான் இருந்தாராம்.
1994ஆம் வருடம் யுனெஸ்கோ (UNESCO) - வின் உலக கலாச்சாரச் சின்னமாகவும் அறிவிக்கப்பட்டது இப்பாதுகாப்பு அரண்.


மறுநாள் எஷ் சுர் ஸ்யூர் ( Esch Sur Sure) எனும் இடத்திற்குக் கிளம்பினோம்.லக்ஸம்பர்க் சுற்றுலாத்தகவல் மையத்தில் விசாரித்ததில் இவ்விடத்தில் பெரிய அழகான ஏரி ஒன்று உள்ளதென்று அறிந்தோம். லக்ஸம்பர்க் நகரிலிருந்து எட்டெல்ப்ருக் (Ettelbruck)) எனும் குறுநகர் வரை இரயிலில் சென்று அங்கிருந்து இவ்வேரிக்குப் பேருந்தில் பயணிக்க வேண்டுமென்று சொன்னார்கள். எட்டெல்ப்ருக் சென்றபிறகே , அன்றைய தினம் பேருந்துகள் ஏரிக்குச் செல்லாத விடுமுறை நாள் எனத் தெரிந்தது. ஒரு வாடகை டாக்ஸியில் ( ஆங்கிலம் தெரியாத பெண் ஓட்டுனர்) பயணித்தோம். வழியெங்கும் இயற்கை கொஞ்சும் பசும்புல் வெளிகள், ஏறி இறங்கும் நிலப்பகுதி, வளைந்து நெளிந்த பாதை என்று சுவாரஸ்யமாகத்தான் இருந்தது.



சுமார் முக்கால் மணி நேரப்பயணத்தில் ஏரியை அடைந்தோம். அங்கு இன்னொரு ஏமாற்றமும் இருந்தது. ஏரியில் படகு சவாரிக்கும் அன்றைய தினம் விடுமுறை ( ஈஸ்டர் தினம்). இருப்பினும் ஏரியை ஒட்டிய மலைப்பாதைகள், ஏரியின் குறுக்கே ஓடிய பாலங்கள், அதை ஒட்டிய மலைப்பகுதியில் இருந்த மரங்களடர்ந்த காடு , புல் வெளிகள் என்று இயற்கை அழகிற்குக் குறைவில்லை. இந்த ஏரி லக்ஸம்பர்க் நகருக்கு நீர் வழங்கும் ஏரியாகும்.



மரங்களடர்ந்த வனப்பகுதியில் நடந்து சுற்றுகையில் எனது செல்பேசியைத் தவறவிட்டது தெரியவந்தது.ஒரு வேளை நாங்கள் வந்த டாக்சியில் தான் தவறியிருக்கும் என யூகித்து மீண்டும் அதே டாக்சி நிறுவனத்திற்கு ( எனது மனைவியின் செல்பேசி கொண்டு) அழைத்து விசாரித்ததில் செல்பேசி அங்குதான் இருந்தது. திரும்பிச் செல்ல மீண்டும் டாக்சியை வாடகைக்கு அழைத்து செல்பேசியையும் திரும்பப் பெற்றோம்.

எட்டெல்ப்ருக்கிலிருந்து பியாண்டன் (Vianden) எனும் சிறு நகருக்கு அடுத்த பயணம். V- ஐ இங்கு "FO" என்றுதான் உச்சரிக்கிறார்கள்( ஜெர்மனியிலும்தான்). பேருந்து வசதி இருந்தது. பியாண்டன் ஜெர்மனியின் எல்லைக்கருகில் அமைந்த ஒரு அழகிய சிற்றூர். மலை மேல் அமைந்த ஒரு மலைக்கோட்டை இதன் முக்கிய சுற்றுலாத்தலம். அது பற்றி அடுத்த பதிவில்.

0 Comments:

Post a Comment

<< Home