April 21, 2005

குட்டி ஐரோப்பா

பெல்ஜியத் தலைநகர் ப்ரஸ்ஸல்ஸ் நகரின் முக்கியச் சுற்றுலாத் தலம் குட்டி ஐரோப்பா (Mini Europe).

ஐரோப்பியச் சுற்றுலா செல்ல நினைப்பவர்கள் வந்து செல்ல வேண்டிய இடம் இது. அல்லது ஐரோப்பா முழுவதும் சுற்றிப் பார்க்க நேரம் இல்லாதவர்கள் இந்த இடத்திற்கு மட்டுமாவது வந்து சென்றால் ஐரோப்பிய நகர்களுக்குச் சென்ற திருப்தி நிச்சயம். ஐரோப்பிய நாடுகளின் முக்கியமான் கட்டிடங்களையும் பழமையான சின்னங்களையும் இங்கு காணலாம். அனைத்து சின்னங்களும் அதே வடிவத்தில் அல்ல, சிற்றளவாக்கப் பட்ட (Miniature) வடிவத்தில் காணலாம். பெரும்பாலான சின்னக்கள் 1:25 என்ற விகிதத்தில் சிற்றளவாக்கப் பட்டவை. ஒன்றிரண்டு சின்னங்கள் மேலும் குறைந்த விகிதத்தில், உதாரணமாய் இத்தாலி நாட்டில் எரிமலைத் தொடரான வெசுவியஸ் 1:1000 என்ற விகிதத்தில் சிற்றளவாக்கப் பட்டிருக்கிறது. முன்னூறுக்கும் மேற்பட்ட மாதிரிகள் இங்கு வைக்கப்பட்டுள்ளன.

ப்ரஸ்ஸல்ஸ் நகரின் பாதாள இரயிலில் (மெட்ரொ) பிரயாணித்து நகரின் சற்றே வெளிப்பகுதியில் அமைந்த இந்தக் குட்டி ஐரோப்பாவிற்கு நானும் எனது நண்பனும் வந்தடைந்தோம். இதற்கருகே மிகப்பெரிய உருவில் அடாமியம் (Atomium) அமைந்திருந்தது. நேரப்பற்றாக்குறையினால் இந்த அணுவகத்தினுள் செல்ல இயலவில்லை. அணுவின் அமைப்பு போல் வடிவமைத்திருந்தார்கள். 1958-ல் ப்ரஸ்ஸல்ஸ் நகரில் நடந்த ஒரு பொருட்காட்சியின் போது உருவாக்கப்பட்டதென்கிறார்கள்.



பெரிய வரிசையில் நின்று குட்டி ஐரோப்பாவிற்கு நுழைய அனுமதிச்சீட்டு பெற்று உள்ளே நுழைந்தோம். வாண்டுகளின் எண்ணிக்கை அதிகமாகவே இருந்தது.

லண்டனின் அரச பரம்பரையினர் வசிக்கும் பக்கிங்கம் அரண்மனையைக் காவல் புரியும் சீருடை வீரர்கள் போல் ஒரு சிலை . தலைப்பகுதியில் வெற்றிடம். அங்கே நீங்கள் உங்கள் தலையை நுழைத்து, காவலாளி போல் ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம்.



இங்கிலாந்துப் பார்லிமென்ட் கட்டிடம், அதனைத்தொடர்ந்து அதனருகே உலகப்புகழ் பெற்ற பிக் பென் "மணி"க் கோட்டை.



உலக அதிசயங்களுள் ஒன்றான பாரிஸ் நகரத்து ஈபிள் கோபுரம். நேரில் பார்த்தால் 300 மீட்டர் உயரம். இங்கே உயரங்குறைக்கப் பட்டு 12 மீட்டர் மாதிரியாகத் தோன்றினாலும் பிற சின்னங்களின் நடுவே , இந்தச் சிற்றளவாக்க மாதிரியே மிகப்பெரியதாகத் தோன்றியது.

பாரிஸின் மற்றொரு வரலாற்றுச் சின்னமான வெற்றி வளைவு-ம் (Arch De Triumph)காணலாம்.



ஜெர்மன் தலைநகர் பெர்லினின் பிரான்டன்பர்க் கோட்டை மற்றும் பெர்லின் சுவர் ஆகியவையும் காணலாம். எல்லாச் சின்னங்களையும் அப்படியே மாதிரியாய்க் காட்டினால் சுவாரஸ்யம் குறைந்து போய் விடும் என்று கருதிய அமைப்பாளர்கள் விறுவிறுப்பைக்கூட்ட சில பாவனையாக்க மாதிரிகளையும் (Simulated) அமைத்திருக்கிறார்கள். ஐரோப்பாவின் வேகமான இரயில் "தாலிஸ்" . சிறு தண்டவாளம் அமைக்கப்பட்டு அதன் மீது தாலிஸ் வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஆம்ஸ்டர்டாம் நகர வீதிகளின் நடுவே ஓடும் வாய்க்கால்களில் செல்லும் படகுகளைப்போல மாதிரிகளையும் காணலாம். இத்தாலி நாட்டு எரிமலை வெசுவியஸ் திடீரென்று வெடித்து வெளியேறுகிறது.

நம்ம ஊர் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போல் அமைந்த ( சற்று வேறுபட்ட ) ஸ்பெயின் நாட்டுக் காளை அடக்குப் போட்டி நடைபெறும் காளை வளைவு (Bull Ring ) ஒன்றின் மாதிரி அமைக்கப்பட்டு அந்த அரங்கத்தினுள் ஆயிரக்கணக்கான மக்கள் போட்டியினை இரசிப்பதுபோல் அமைந்துள்ளது. அடிக்கடி இரசிகர்கள் எழுப்பும் ஒலியான "ஒலே"(Olé) பின்னணியில் ஒலிக்கப்படுகிறது.



பைசா (Pisa) நகரத்துச் சாய்ந்த கோபுரமும் , வெனிஸ் நகர வீதிகளில் மிதக்கும் படகுகளும் இங்குண்டு.



ப்ரஸ்ஸல்ஸ் நகரின் அரண்மனைகளின் மாதிரியும் அவ்வரண்மனைகள் அமைந்துள்ள இடமான பேரிடத்தின் (Grand place) மாதிரியும் உண்டு. இந் நகரின் விமான நிலையத்தையும் இங்கே காண முடிகிறது. கோபன் ஹேகன் நகரின் பங்குச் சந்தைக் கட்டிடம் விமான நிலையத்திற்கு எதிரே அமைந்திருக்கிறது. ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தயாரிப்பான ஏரியன் ராக்கெட் புறப்படத்தயாராக செலுத்துதளத்தில் நிற்கிறது. கிரேக்க நாட்டுத் தலைநகர் ஏதென்ஸ் நகரின் வரலாற்றுப் புகழ் பெற்ற அக்ரொபோலிஸ் குன்றில் அமைந்துள்ள பழஞ்சின்னங்களையும் காணலாம்.

முப்பரிமாணத் திரைப்படங்களைத் திரையிடும் ஐ-மேக்ஸ் திரையரங்கும் இங்கு உள்ளது.

April 13, 2005

பின்லாந்து - 5

அக்ஸெலி மியூஸியத்திலிருந்து ஒரு வாடகைக்கார் மூலம் பயணித்து ஒரு பெரிய பூங்காவினை அடைந்தோம். இந்தப்பூங்காவினில் ஒரு நினைவகம் அமைந்துள்ளது. கலேவலாப் பாடல்களுக்கு இசையமைத்த ஜீன் ஸிபிலியஸ்-க்கு (Jean Sibelius)இங்கு ஒரு நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.



சற்று வித்தியாசமான நினைவகம்.இசையமைப்பாளருக்கு ,இசைக்கருவியின் வடிவில் ஒரு நினைவுச் சின்னம். ஆர்கன் பைப் (Organ pipe)போன்ற அமைந்த பெரிய பெரிய குழாய்கள். மொத்தம் அறுநூறு குழாய்கள், துருப்பிடிக்காத இரும்பினால் ஆனவை.ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டு சுமார் பத்து மீட்டர் உயரத்திற்கு பிரம்மாண்டமாய் அமைந்திருக்கின்றது. இத்தனைக்கும் சிபிலியஸ் ஆர்கன் பைப் கொண்டு எந்தவொரு இசைத்தொகுப்பையும் வெளியிட்டதில்லை என்கிறார்கள். இந்த இரும்புக்குழாய்கள் ஒரு பாறை மீது அமைக்கப்பட்டிருக்க அருகே சிபிலியஸின் தலைச் சிலை, அதுவும் துருப்பிடிக்கா இரும்பினால் அமைக்கப் பட்டிருக்கிறது.



தொண்ணூற்று ஒரு ஆண்டுகள் வாழ்ந்து, பின்லாந்தின் தலைசிறந்த இசையமைப்பாளராய் அறியப்படும் ஜீன் சிபிலியஸ் 1957-ல் மரணம் அடைந்தார். ஏழு ஸிம்பொனி இசைத்தொகுப்புகளை வெளியிட்டவர். கலேவலாப் பாடல்களுக்கும் இசை அமைத்துத் தொகுப்புகள் வெளியிட்டார். இவரது மறைவுக்குப் பின் இவருக்கு நினைவுச் சின்னம் அமைக்க விரும்பிய சிபிலியஸ் சொஸைட்டி அங்கத்தினர்கள் , சிறந்த சின்னம் வடிவமைக்கும் பொருட்டு ஒரு போட்டியினை அறிவித்தனர். பலத்த போட்டிக்கிடையே எய்லா ஹில்துனென் (Eila Hiltunen) எனும் பெண்மணி வடிவமைத்த , இந்தக் குழாய் வடிவச் சின்னம் தேர்ந்தெடுக்கப்பட்டது. இதற்குப் பரவலாய் எதிர்ப்பும் இருந்ததாம். அவரது உருவச் சிலை இதில் இடம் பெற வேண்டுமென பலரும் வற்புறுத்தவே, இந்த வித்தியாச வடிவமைப்புடன் அவரது உருவச் சிலையும் சேர்க்கப்பட்டது. சுமார் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாய் இதனை மிகக் கவனமுடன் வடிவமைத்து 1961-ல் இச்சின்னம் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. சுமார் முப்பத்தைந்து ஆண்டுகளாய் இன்னும் புத்தம் புதிதாய் அந்த நினைவுச் சின்னம் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.

பூங்காவிலிருந்து வெளியேறி அவ்வழியே சென்ற ட்ராம் வண்டியிலேறி மீண்டும் நகரின் முக்கியப்பகுதியான சந்தைக்கு வந்தோம். ஞாயிற்றுக் கிழமையாதலால் சந்தை பரபரப்பாய் இல்லை. அருகிலிருந்த இன்னொரு தேவாலயம் கண்ணைக் கவரவே அங்கு சென்றோம்.



உஸ்பென்ஸ்கி தேவாலயம் (Uspenski)என்றிதற்குப் பெயர். ரஷ்யர்கள் பின்லாந்தை ஆட்சி செய்தபோது கட்டப்பட்டதாம்.கட்டப்பட்ட ஆண்டு 1868. மற்ற ஐரோப்பிய தேவாலயங்களின் கட்டுமான முறையிலிருந்து ரஷ்யர்களின் கட்டுமான முறை வேறுபட்டு அமைந்திருக்குமாம். இந்தத் தேவாலயம் ரஷ்யமுறைப்படி அமைந்த தேவாலயங்களில் பெரிய ஒரு ஆலயம்.

தேவாலயத்தின் கலசம் வெங்காய வடிவிலமைந்தது. மொத்தம் பதிமூன்று கலசங்கள் இதுபோன்று வெங்காய வடிவிலானவை. இயேசு மற்றும் அவரது பன்னிரெண்டு சீடர்களை உணர்த்தும் வகையில் அமைத்திருப்பதாய்ச் சொன்னார்கள். தேவாலயத்திற்குள் வண்ணமயமான பல ஓவியங்கள். இயேசுவின் வாழ்க்கை நிகழ்வுகளில் சிலவற்றைச் சித்தரிக்கும் ஓவியங்கள் , புத்தம் புதிது போல் பளபளப்பாயிருந்தன.

இது உட்புறம் வழியாகத் தேவாலயத்தின் உச்சியைக் காட்டும் படம்.


பின்னர் ஹெல்ஸின்கியின் முக்கிய வீதிக்கருகிலேயே அமைந்திருக்கும் அட்டெனியம் (Atteneum) எனும் கலைக் கூடத்திற்குச் சென்றோம். பின்லாந்தின் மிகப்பெரிய, சிற்ப மற்றும் ஓவியக் கண்காட்சியகம் இது. பின்லாந்தின் புகழ்பெற்ற ஓவியர்கள், சிற்பிகளின் ஆக்கங்களுடன் உலகப்புகழ் பெற்ற பல ஓவியர்களின் படைப்புக்களும் இங்கு பார்வைக்குக் கிடைக்கின்றன. அக்ஸெலி மியூசியத்திலிருந்த உதவியாளர் சொன்னது போல் அக்ஸெலி காலன் கலேலாவின் புகழ் பெற்ற கலேவலா ஓவியங்கள் இங்கு காணக்கிடைக்கின்றன.

கீழ்க்காணும் ஓவியம், கலேவலாவின் கதைநாயகன் வைனாமொயினனுக்கும் ஐனோ எனும் பெண்ணிற்கும் நடைபெற்ற உரையாடலைச் சித்தரிப்பது. தன்னை மணந்துகொள்ளும் படி கேட்ட வைனாமொயினனை மறுத்து, அவனை மணப்பதைவிட மரணம் மேல் என்று கருதி நீரில் மூழ்கி விடுகிறாள்.



கீழேயுள்ள இவ்வோவியம் மரண வாசலில் இருக்கும் லெம்மின்கைனன் என்பவனின் தாயார் அவனை உயிர்ப்பிக்கும் முயற்சியில் இருப்பதைச் சித்தரிக்கிறது.


இது போருக்குப் புறப்படும் குல்லர்வோ


இன்னும் இதுபோலப் பல ஓவியங்கள், சிற்பங்கள் என அழகாக விரிந்தது அட்டெனியம்.

எங்கள் பயணத்தின் இறுதியாக ,இன்னும் ஒரு தேவாலயத்திற்குச் செல்லப் புறப்பட்டோம். இது மிகவும் வித்தியாசமான ஒரு தேவாலயம். டெம்பலியௌகியோ தேவலாயம் (Temppeliaukio) என்றிதற்குப் பெயர். குகைக்குள் அமைக்கப்பட்ட ஒரு ஆலயம் போன்ற ஒரு தோற்றம்.



கற்களால் செய்த தேவாலயம் என்றும் இதற்குப்பெயர். சுவர் முழுவதும் கற்கலால் ஆனது. தாமிரத்தாலான இதன் கூரை அரைக்கோள வடிவமுடையது. தேவாலயத்திற்குள் நுழைந்தால் அதன் வித்தியாசமான கற்சுவர்களும் தாமிரக்கூரையும் வியப்பளித்தன. இசைக்கருவியான ஆர்கன் (Organ) மிகப்பிரம்மாண்டமான தோற்றத்தில் அமைக்கப்பட்டிருக்கின்றது.


படம்: தேவாலயத்தின் தாமிரக்கூரை

நிறைய இறை-இசை நிகழ்ச்சிகள் இங்கே நிகழ்வதுண்டாம். நாஙள் அங்கே சென்ற வேளையிலும் ஒரு சீருடை இசைக்குழு பக்திப்பாடல்களை இசைத்துக்கொண்டிருந்தது.

இத்துடன் எங்கள் பின்லாந்துப் பயணத்தை முடித்துக் கொண்டு விமான நிலையம் திரும்பினோம். ஒன்றரை மணி நேரப் பயணம் முடித்து கோபன்ஹேகன் இறங்குகையில் குளிர்ந்த காற்று எங்களை வரவேற்றது.