June 20, 2005

ஓஸ்லோ-விஜிலன்ட் பூங்கா-1



ஓஸ்லோ(Oslo) - நார்வே நாட்டின் தலைநகரம். ஓஸ்லோ நகரில் காண வேண்டிய இடங்கள் நிறைய இல்லை என்றாலும், அங்கிருக்கும் விஜிலன்ட் சிற்பப் பூங்கா (Vigeland Sculpture Park) கட்டாயம் பார்க்க வேண்டிய ஒரு சுற்றுலாச் சின்னம். நகரின் மையத்திலிருக்கும் மத்திய இரயில் நிலையத்திற்கு எதிரே ட்ராம் வண்டிகள் வந்து செல்லும். அவற்றுள் விஜிலன்ட் பூங்கா செல்லும் ட்ராம் வண்டியினுள் ஏறி அமர்ந்து கொள்ளுங்கள். பதினைந்து நிமிடப் பயணத்தில் ட்ராம் வண்டி இறுதி நிறுத்தமான விஜிலன்ட் பூங்காவில் உங்களை இறங்கச் சொல்லும். ட்ராம் வண்டியிலிருந்து இறங்கி எதிரே தெரியும் பிரம்மாண்டமான பூங்காவினுக்குள் நுழைந்து கொண்டால் போதும். வேறு உலகிற்கு நீங்கள் செல்வது போல் உணர்வீர்கள்.


பூங்காவின் நுழைவாயிலில் இருந்து நேராகப் பார்த்தால் ஐம்பது மீட்டர் தொலைவில் ஏகப்பட்ட சிற்பங்கள் தெரியலாம். நுழைந்தவுடன் வலப்புறம் திரும்பிப் பாருங்கள். மலர்களுக்கு நடுவே குஸ்தவ் விஜிலன்ட் (Gustav Vigeland) சிலையாய் நின்று கொண்டிருப்பார். தன் வாழ்நாள் முழுவதையும் சிற்பக்கலைக்கு அற்பணித்த நார்வே நாட்டுச் சிற்பி அவர். அங்கிருக்கும் சிற்பங்களையெல்லாம் பார்ப்பதற்கு முன் , அவருடைய வாழ்க்கைக் குறிப்பைச் சுருக்கமாய்ப் பார்த்து விடலாம், வாருங்கள்!



1869-ல் நார்வே நாட்டுத் தென்பகுதித் துறைமுகமான மாண்டல் (Mandal) எனும் நகரில் மர வேலைகள் செய்யும் தச்சருக்கு மகவாகப் பிறந்தவர் குஸ்தவ் விஜிலன்ட். இளமையிலேயே ஓவியங்கள் வரையும் திறனும் சிற்பங்கள் செதுக்கும் திறனும் தனது மகனிடம் மிளிர்வதைக் கண்ட குஸ்தவின் தந்தை, இக்கலையை முறையாகப் பயிற்றுவிக்க எண்ணி, குஸ்தவுடன் ஓஸ்லோ சென்று அவருக்கு கலைக் கல்வி வழங்க ஏற்பாடு செய்தார். அப்போது குஸ்தவுக்குப் பதினைந்து வயது. ஆனால் இந்த ஏற்பாடு வெகுகாலத்துக்கு நீடிக்கவில்லை. ஓஸ்லோ சென்ற இருவருடங்களுக்குள் குஸ்தவின் தந்தை மரணமடைந்துவிடவே , குஸ்தவ் ஓஸ்லொ நகரை விடுத்து மீண்டும் மாண்டல் திரும்ப வேண்டியதாயிற்று. சிற்பம் வடிக்கும் வேலைதேடி மீண்டும் ஓஸ்லோவிற்கே சென்ற குஸ்தவிற்கு ஏமாற்றமே காத்திருந்தது. அங்கே உணவிற்கே திண்டாட வேண்டிய நிலைக்குத்தள்ளப்பட்டார். சிற்பங்கள் செய்ய பல்வேறு விதமான வரைவு மாதிரிகளை அவர் உருவாக்கிக் கொண்டிருப்பினும் அவருக்கு உதவி செய்ய எவருமில்லை. இறுதியாய் பிரையினுல்ப் பெர்க்ஸ்லெய்ன் (Brynjulf Bergslien) எனும் சிற்பி அவருக்கு உதவ முன்வந்தார். குஸ்தவின் திறமையைக் கண்ட அவர் குஸ்தவிற்கு பயிற்சி அளிக்கவும் ஒப்புக்கொண்டார்.

அவரிடம் சிற்பக்கலையைச் செயல்முறையாகக் கற்றுக்கொண்ட குஸ்தவ் மாலை நேரக் கலை வகுப்புகளுக்குச் சென்று கற்கவும் தவறவில்லை. பின்னர் மாதியாஸ் ஸ்கீப்ரொக் (Mathias Skeibroks) எனும் சிற்பியிடமும் சில காலம் சிற்பங்கள் செதுக்கும் உதவியாளராகப் பணிபுரிந்தார். 1889 ஆம் ஆண்டின் இறுதியில் அவரது சிற்பங்கள் அடங்கிய முதல் கண்காட்சி ஓஸ்லோவில் நடைபெற்றதாம்.


இளவயது குஸ்தவ்

பின்னர் டென்மார்க்கின் தலைநகர் கோபன்ஹேகனுக்குச் சென்ற குஸ்தவ் அங்கும் கலை பற்றி கற்கவும், சிற்பங்கள் உருவாக்கவும் செய்திருக்கிறார். அதன் பின் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகருக்குச் சென்று அங்கும் பல சிற்பக்கலை விற்பன்னர்களின் படைப்புகளைப் பார்த்தும், அவர்களுடன் பணிபுரிந்துமிருக்கிறார். புகழ்பெற்ற பிரெஞ்சுச் சிற்பியான ஆகஸ்ட் ரோடின் (August Rodin) என்பவரின் படைப்புகளைக் கண்டு, அவருடன் பழகும் வாய்ப்பும் குஸ்தவிற்கு ஏற்பட்டிருக்கிறது. குஸ்தவின் சிற்பங்கள் பலவற்றினுக்கு ரோடினின் சிற்பங்கள் ஒரு உந்து சக்தியாக, முன் மாதிரியாக இருந்திருக்கின்றன, ரோடினின் "நரகத்தின் கதவுகள்" எனும் சிற்பப்படைப்பு குஸ்தவை மிகவும் கவர்ந்திருக்கிறது. ரோடினின் காமச்சுவை ததும்பும் சிற்பங்களின் வடிவமைப்பில் மயங்கிய குஸ்தவ் பின்னாளில் அது போலவே தானும் பல்வேறு சிற்பங்கள் செய்திருக்கிறாராம். பின்னர் இத்தாலி நாட்டின் பல நகரங்களுக்கும் சென்று அந்நாட்டின் சிற்பக்கலை பற்றியெல்லாம் பார்த்தறிந்திருக்கிறார்.

மீண்டும் ஓஸ்லோ திரும்பிய குஸ்தவ் சில சிற்பக் கண்காட்சிகள் நடத்தியிருக்கிறார். அவை கலாரசிகர்களிடையே வரவேற்புப் பெற்றாலும் , பொருளீட்டும் வண்ணம் அமையவில்லை. எனவே தேவேலாயங்களுக்குச் சிற்பங்கள் வடியமைக்கும் வேலையிலமர்ந்தார். அவரது சிற்பத்திறன் பற்றிய புகழ் கொஞ்சம் கொஞ்சமாக நார்வே நாட்டில் பரவ ஆரம்பித்தது. 1900 முதல் 1910 வரையிலான காலகட்டத்தில் புகழ்பெற்ற நார்வே நாட்டுத்தலைவர்கள், அரச குடும்பத்தினர் ஆகியோரது உருவச்சிலை வடிக்கும் பணியில் ஈடுபட்டார் குஸ்தவ். நார்வே நாட்டின் தலை சிறந்த சிற்பி என்ற பெருமையை அப்போதே பெற்றவரானார். பின்னர் ஓஸ்லோ நகர சபையினர் ( 1924-ல்) , ஓஸ்லோவின் பெரிய பூங்காவான ப்ரோக்னெர் பூங்காவில் (Frogner Park) அவருக்கு இடமொதுக்கி அங்கு சிற்பக்கூடம் ஒன்றையும் உருவாக்கித் தந்தனர்.

அப்போது முதல் தன் வாழ்நாளின் இறுதி வரை (1943) அப்பூங்காவிலேயே சிற்பங்கள் செய்வதில் ஈடுபட்டிருக்கிறார், அவர் அப்போது வடிவமைத்த சிலைகள் தான் இன்று அப்பூங்காவினை அலங்கரித்துக்கொண்டிருக்கின்றன. அவரது மரணத்துக்குப்பின் ப்ரோக்னெர் பூங்கா குஸ்தவின் பெயர் கொண்டு விஜிலென்ட் பூங்கா (Vigeland park) என்றே அழைக்கப் பட்டு பொது மக்கள் பார்வைக்கென திறந்துவிடப்பட்டது.

சரி, குஸ்தவின் சிலையிலிருந்து புறப்பட்டு சற்று முன்னோக்கிச் செல்வோம். மொத்தம் இருநூற்றுப் பன்னிரெண்டு சிலைகள். கிரானைட் ,வெண்கலம் மற்றும் சில இரும்பாலானவை. அவரது பிரெஞ்சுப் பயணத்தில் கிடைத்த அனுபவங்களே சிலைகளாயிருக்கின்றன. வாழ்க்கை எனும் அலையினுள் அகப்பட்டு அல்லாடும் மனித இனத்தின் அனைத்து உணர்ச்சிகளையும் சிலையாய் வடித்துள்ளார். குழந்தையாய்த் தொடங்கும் பருவம் முதல் கிழடாய் முடங்கும் பருவம் வரை மகிழ்ச்சி, துன்பம், பாசம், காதல். காமம், என எல்லாச் சுவைகளையும் வெளிப்படுத்தும் வண்ணம் சிற்பங்கள் அமைந்துள்ளன. "இஸம்" என்று பார்க்கையில் காதல், உணர்வுபூர்வம் மற்றும் இருத்தலியல் (Romanticism ,Emotionalism and Realism) ஆகியவற்றின் அடிப்படையில் இச்சிற்பங்கள் அமைந்திருப்பதாக விவரம் அறிந்தவர்கள் வகைப்படுத்தியிருக்கிறார்கள்.

சரி, அடுத்த பதிவில் அந்தச் சிற்பங்களைப்பற்றி விரிவாகப் பார்க்கலாம்.