June 29, 2004

ஹன்ஸ் குகைகள் - 2



சுண்ணாம்புப் பாறைக்குகைகளின் அமைப்பும் வளர்ச்சியும் அங்குள்ள நீரின் ஓட்டம் மற்றும் கசிவினைப் பொருத்தது. குகையின் கூரையில் கசியும் நீர் இறுகி தொங்கு பாறைகள் வளருகின்றன. தொங்கு பாறைகள் சிந்தும் நீர் தரையில் பட்டு இறுகி தரையிலிருந்து கொம்புபாறைகள் வளர்கின்றன. பாறைகளின் நிறம் அதில் படும் நீரின் மாசு அளவைப் பொருத்து அமையும். எண்ணற்ற இப்பாறைகள் அனைத்தையும் தொடர்ந்து பார்வையிட்டுக்கொண்டே அங்கிருந்த மரப்படிகளில் மேலேயேறியும் கீழிறங்கியும் வளைந்து நெளிந்த பாதையில் நடந்தோம்.



ஓரிடத்தில் வழக்கத்திற்கு மாறாய்ச் சற்று விசாலமானதாகவும் உயரமாகவும் இருந்தது. அங்கே அமர்வதற்கு பல மர இருக்கைகள் இடப்பட்டிருந்தன. வெகுநேரம் நடந்தவர்கள் சற்று இளைப்பாற அமைக்கப் பட்டவை என எண்ணினேன், ஆனால் வழிகாட்டி எங்கள் அனைவரையும் அழைத்து அவ்விருக்கைகளில் அமரச் சொன்னார். எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை.மங்கலாய் எரிந்து கொண்டிருந்த அனைத்து விளக்குகளும் திடீரென்று இருட்டாயின. சற்று நேரத்தில் குகைக்குள் மெல்லிய சிம்பொனி இசை பரவியது. இசையின் ஒலி பெரிதாகிக் கொண்டே வர, எங்கிருந்தோ வந்த ஒரு லேசர் ஒளிக்கற்றை குகையின் கூரையின் மீதமர்ந்த ஒரு வித்தியாசமான தொங்கு பாறையை வெளிச்சம் போட்டுக் காட்டியது. அடுத்து வந்த மற்றொரு ஒளிக்கற்றை குகையின் பக்கவாட்டுச் சுவரில் படிந்திருந்த இன்னொரு பாறையைத் தாக்கியது. இப்படியாய் இசையும் ஒளியும் இணைந்து அங்கிருந்த விதவிதமான பாறைகளைக் கண்களுக்கு விருந்தாக்கின. வெவ்வேறு வண்ணங்களில் சிந்திய ஒளியும் , ஏறி இறங்கிய இசையின் ஒலியும் ஒன்றோடொன்று இயைந்து ஒரு ஒளி ஒலிக்காட்சியைக் கண்ட உணர்வினை உண்டாக்கின.சுமார் பத்துப் பதினைந்து நிமிடங்களுக்குத் தொடர்ந்தது இந்நிகழ்ச்சி.



அரங்கத்தைக் கடந்து சென்றவுடன் ஒரு பெரிய நீரோடை . இது ஒரு குற்றாறு . இதன் பெயர் லெஸ்ஸி. குகையடி வழியாக எவ்வாறு இதன் பயணம் நிகழ்கிறது என எண்ணும்போது வியப்பாயிருந்தது. ஹன்ஸ் பகுதியைச் சுற்றியுள்ள மலையின் ஓரிடத்தில் யார் கண்ணிற்கும் படாமல் மறைந்து கொள்ளும் லெஸ்ஸி, இந்த இடத்தில் தான் மறுபடியும் முகம் காட்டுகிறது. இதன் பாதையைத் தேடி மலைக்குகைக்குள் புகுந்தவர்கள் சிலர் அதன் பிறகு வெளிவரவே இல்லையாம்.நதிநீர் மிகவும் குளிர்ச்சியாக இருந்தது. நான்கு பாகை செல்சியஸ் குளிர்நிலை. நிலமட்டத்திலிருந்து 60 மீட்டர் ஆழத்தில் ஓடும் ஆறு இது. சிறிய படகுகள் மிதந்துகொண்டிருந்தன. அனைவரும் அதில் ஏறி அமர்ந்தோம். பார்ப்பதற்குச் சிறிய படகு போல் தெரிந்தாலும், நிறைய இருக்கைகள் (நீட்டி மடக்கும் மரப்பலகைகள்) இருந்தன.படகு புறப்பட்டது. சிறிது நேரத்தில் லேசான வெளிச்சம் கண்ணுக்குத் தெரிய , வெளியுலகு புலப்பட்டது. அந்நேரத்தில் "படார்" என ஒரு வெடியொலி. திடுக்கிட்டுத் திரும்பினால் " குகை சென்று மீண்டதை" உணர்த்தும் வகையில் வெடிக்கப்படும் வெடி என்றனர். நீள நீளமான குகைப்பாறைகள் இன்னமும் கண்முன் விரிந்துகொண்டிருக்க எங்களது பயணம் நிறைவுற்றது. இம்மலைக்குகைகள் பற்றிய காட்சியகம் ஒன்றும் இங்கே உண்டு.



இந்த மலைக்குகையைச் சுற்றியுள்ள வனப் பகுதியில் வனவிலங்குகள் சரணாலயம் உண்டு. கூண்டுகளுக்குள் அடைத்து வைத்த விலங்குகள் இல்லை அவை. சுதந்திரமாய் வனப் பகுதியில் சுற்றித்திரியும் விலங்குகள்.பெரிய வேன் ஒன்றில் பார்வையாளர்களை அடைத்துக் கொண்டு அவ்வனப் பகுதியைச் சுற்றிக் காட்டுகிறார்கள். சரி, இதையும் பார்த்துவிடலாம் என்று எண்ணி சவாரி மேற்கொண்டோம். முதலில் நாங்கள் சந்தித்த அதிசய விலங்கு எது தெரியுமா? பன்றிகள். . அடுத்து வந்தவை ஆடுகள். பின்னர் மாடுகள், காட்டு நாய்கள் , மான்கள் , குதிரைகள் என வரிசையாய்ப் பல அரிய விலங்கினங்களைக் கண்டு களித்தோம். உடன் வந்தவர்கள் மிகவும் குதூகலித்துக் கொண்டு "வாவ்" என வாய் பிளந்தனர். நானும் என் நண்பனும் "ஆவ்" என்று கொட்டாவி விட்டோம்.இதையெல்லாம் விட பெரிய அதிசயம் , அந்த வனவிலங்ககம் பற்றி எங்களுக்குத் தரப்பட்டிருந்த கையேட்டில் " வன விலங்கில் புது வரவு , அழகான அரிய வகைக் கழுதைகள்" என்று குறிப்பிட்டிருந்ததுதான். தொடர்ந்த பயணத்தில் நாங்கள் இரசித்தது பசுந்தோல் போர்த்திய வனப்பகுதி ,குறுகலாய் வளைந்த பாதைகள் மற்றும் உயர்ந்தோங்கிய மரங்கள் மட்டும்தான்.

நாங்கள் சென்றிருந்த அவ்வேளை "நாட்டுப்புற வாரம் " கொண்டாடப்பட்ட நேரம். பசுப்பையன் (Cow boy) போல் உடையணிந்த பலரும் குதிரைகளில் ஏறி உலா வந்துகொண்டிருந்தார்கள். மாடு மேய்ப்பவர்கள் பயன்படுத்தும் தோலாடைகள், இடைவார்கள் (belt) , தொப்பிகள் போன்றவற்றை விற்பனை செய்யும் கடைகளும் அங்கிருந்தன. உள்ளூர் குழுவினர் நாட்டுப் பாடல்களைப் பாடினார்கள்.

பகல் முழுதும் சுற்றித்திரிந்து களைத்து நாங்கள் இனிய நினைவுகளுடன் திரும்பினோம்

June 23, 2004

ஹன்ஸ் குகைகள் - 1



பெல்ஜியம், லக்ஸம்பெர்க் மற்றும் நெதெர்லாந்து (ஹாலந்து) ஆகிய மூன்று நாடுகளும் ஒன்றோடொன்று ஒட்டிக் கொண்டிருக்கும் சிறிய நாடுகள் . மூன்று நாடுகளையும் இணைத்து பீனலக்ஸ் (Benelux) என்று சொல்லுவார்கள்.

இந்தப் பதிவில் நாம் காணப்போவது பெல்ஜியத்தின் தென் பகுதியிலமைந்த ஹன்ஸ் குகைகள்.

பெல்ஜியத்தின் தலைநகரம் ( ஐரோப்பாவின் தலைநகரமும் கூட) ப்ரஸல்ஸ் (Brussles) நகரிலிருந்து லக்ஸம்பர்க் செல்லும் வழியில் அமைந்திருக்கிறது இக்குகை. மேலே தெரியும் வரைபடத்தில் குறிப்பிடும் அளவுக்கு பெரிய ஊர் இல்லை. குகைக்கு அருகே அமைந்த பெரிய நகரம் நாமுர் (Namur). நாமூரைக் கடந்து சிறிது நேரத்தில் இரயில் யெமிலி (Jemille) என்ற சிற்றூரில் நிற்கும்போது இறங்கிக் கொள்ள வேண்டும். யெமிலியிலிருந்து பேருந்துப் பயணம். சுமார் பத்து கிலோமீட்டர் கடந்தால் உங்களை வரவேற்கிறது ஹன்ஸ் சுர் லெஸ்ஸி (Hans-Sur-Lesse) . சற்று வித்தியாசமான பெயர்தான். நான் அங்கே சென்ற நேரம் நல்ல கோடைகாலம், என்றாலும் வழக்கத்திற்கு மாறான குளிரும் மழையும் அன்று பயணத்திற்கு இடையூறாய் இருந்தது.

குகைச் சுற்றுலா செல்ல அனுமதிச்சீட்டு வாங்கி, தயாராக நின்றிருந்த சிறிய செந்நிற ட்ராம் வண்டியில் அமர்ந்தோம். சில்லென்ற குளிர்காற்று முகம் வருட, வண்டி புறப்பட்டது. சரிவான பாதை. குகையின் வாசலை அடைய பத்து நிமிடப் பயணம் . செல்லும் வழியில் பச்சைப் பசேலென்ற புல்வெளியும் , புல் மேய்ந்துகொண்டிருந்த மான்கூட்டங்களும் , வழியெங்கும் அணிவகுத்த உயரமான மரங்களும் மனதை மயக்கின. கீழேயுள்ள படத்தில் காண்பது நாங்கள் பயணம் செய்த ட்ராம் வண்டி. குகை வாசலில் நிற்கிறது.



அனைவரும் இறங்கியவுடன் வழிகாட்டிகள் வரவேற்கிறார்கள். ஜெர்மன், ஆங்கிலம், டச்சு, பிரெஞ்சு என மொழிக்கு ஒரு வழிகாட்டி. சில சமயத்தில் இரு மொழிகட்கு ஒரு வழிகாட்டியும் அமைவதுண்டு. பயணிகளை மொழிவாரியாகப் பிரித்து சிறுசிறு குழுக்களாய் குகைக்குள் அனுப்புகிறார்கள். எங்களுக்கமைந்த வழிகாட்டி ஆங்கிலம் மற்றும் ஜெர்மன் மொழிகளில் குறிப்புகள் அளித்தார். குகைக்குள்ளே குளிர் அதிகம் இருக்கும் என்றார். சற்றே இருட்டாயிருந்த குகைக்குள் ஒவ்வொருவராய் நுழைந்தோம். வெளிச்சம் குறைந்த பல மின் விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தன, சிறு சிறு படிகள் அமைக்கப்பட்டிருக்க கீழே இறங்கினோம். இந்தக் குகை செயற்கையாய்ச் செய்த குகை அல்ல. இயற்கையே அமைத்த குகை. உள்ளே நிறையப் பாறைகள். கற்பாறைகள் அல்ல , அனைத்தும் சுண்ணாம்புப் பாறைகள். வெளிச்ச நிறத்தில் பளிங்கு போல் பளபளத்தன. இவையனைத்தும் மனிதன் போல் வளரும் பாறைகள். குகைக்குள் ஈரக்கசிவு இருப்பதால் பாறைகள் மீது ஈரம் சேர்ந்து பல நூறாண்டுகளாய் வளர்ந்து ஆச்சரியம் கொடுத்தன.



குகையின் தரையிலிருந்து மேல்நோக்கி வளர்வன ( stalagmites) , குகையின் கூரையிலிருந்து கீழ்நோக்கி வளர்ந்து தொங்குவன(stalactites) , திரைச்சீலை (curtain) போல அடுக்கடுக்காய், வளைவு வளைவாய் அமைவன , கண்ணாடிபோல் பளபளக்கும் படிவுப்பாறைகள் , ஈரக்கசிவினால் மினுமினுத்து பாறையின் நுனியில் ஈரம் உறைந்த ( பாதி நீர்த்துளியாகவும் பாதி பாறையாகவும் ) பாறைகள், கத்திபோல் வளர்பவை, செய்து வைத்த சிலைபோல் உருவங்கொண்ட பாறைகள் , யானைத்தந்தம் போல அமைந்தவை என எண்ணிலடங்காப் பாறைகள்.



இந்தக் குகையின் மொத்த நீளம் பதினோரு கிலோமீட்டர்கள் . ஆனால் பாதுகாப்புக்காரணம் கருதி , சுமார் நான்கு கிலோமீட்டர் நீளக்குகைதான் பார்வையாளர்களுக்கு அனுமதிக்கப்படுகிறது.குகை முழுவதும் சுற்றுவதற்கு மரத்திலமைக்கப்பட்ட சிறு சிறு படிகள் , சில இடங்களில் ஏறுவதற்கும் சில இடங்களில் இறங்குவதற்கும் அமைக்கப்பட்டிருந்தன. சுமார் 400 படிகள் உண்டு. சில இடங்களில் குறுக்கிடும் சிறு நீரோடைகளைக் கடப்பதற்கு குறுகிய மரப்பாலங்களும் உண்டு.

மேலும் பல தகவல்களுடன் அடுத்த பதிவிலும் குகை பற்றி எழுதுகிறேன்.

June 20, 2004

டக்கவ் மரண முகாம் - 2

டக்கவ் முகாமைக் காண நாங்கள் வழிகாட்டியின் துணையுடன் கூடிய (Guided Trip) உலாவினைத் தேர்ந்தெடுத்திருந்தோம். வழிகாட்டியும் இடங்களைப் பற்றி நன்றாகக் குறிப்புகள் கொடுத்ததுடன் அது தொடர்பான மற்ற தகவல்களையும் கூறிக்கொண்டிருந்தார்.

ஹிட்லரைக் கொலை செய்வதற்கு பதினேழு முயற்சிகள் அவரது ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப் பட்டனவாம், அவற்றைத் தவிர , ஹிட்லர் தப்பித்த மற்றொரு சுவையான சம்பவமும் உண்டு. தனியொருவனாய்த் திட்டமிட்டு ( The Lone Assasin) வெடிவைத்துக் கொல்ல சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஜார்ஜ் எல்ஸர் என்பவரின் முயற்சியே அது. மியூனிக் நகரினில் உரை நிகழ்த்த ஒவ்வொரு வருடமும் ஹிட்லர் வருவது வழக்கம். அந்த நிகழ்ச்சியினைத் தன் திட்டத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளத் திட்டமிட்டார் எல்ஸர். ஹிட்லர் உரை நிகழ்த்தவிருந்த மண்டபத்தினைச் செப்பனிட உதவும் தச்சு வேலை செய்பவராகச் சேர்ந்தார். பிறர் அறியாவண்ணம், மேடையின் அருகிலிருந்த தூணிற்குள் நேரவெடி (டைம் பாம்) ஒன்றினை மறைத்துவைத்தார். இந்த வெடியை உருவாக்க சுமார் ஒரு வருடகாலம் முயற்சி செய்ய வேண்டியிருந்ததாம். சம்பவ தினத்தன்று , ஹிட்லரும் வந்தார். மண்டபத்தில் உரையாற்றவும் ஆரம்பித்தார். நம்மூர் அரசியல்வாதிகளைப் போலவே ஹிட்லரும் மணிக்கணக்காய்ப் பேசுவதில் ஆர்வம் கொண்டிருந்தவர். எனவே அவர் வெகுநேரம் பேசுவார் என்று கருதி, எல்ஸர் அவர் பேச ஆரம்பித்து ஒரு மணி பத்து நிமிடங்கழித்து வெடிகுண்டு வெடிக்க கடிகாரத்தில் நேரம் அமைத்திருந்தார். ஆனால் நிகழ்ந்தது வேறு. அன்றைய வானிலை சரியில்லாததால்,பெர்லினுக்கு விமானத்தில் செல்வதற்குப் பதிலாய் இரயிலில் செல்ல ஹிட்லரின் பயணத் திட்டம் மாற்றியமைக்கப் பட்டிருந்தது. எனவே அவர் ஒரு மணி நேரத்திற்குள் தனது உரையை முடித்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பி விட்டார். ஹிட்லர் புறப்பட்ட பன்னிரெண்டு நிமிடங்களில் குண்டு வெடித்துச் சில உயிர்களைப் பலி கொண்டது. எல்ஸரும், சுவிட்சர்லாந்து நுழைய பயணம் செய்யும்போது ஜெர்மனியின் எல்லையில் கைது செய்யப் பட்டு ஒரு மரண முகாமில் அடைக்கப் பட்டார். சில ஆண்டுகள் கழித்துக் கொல்லப்பட்டார்.


டக்கவ் முகாமில் அடுத்ததாக நாங்கள் கண்டது கொல்லப் பட்டவர்களை எரிக்கும் எரியறைகள். உடல் வலு குறைந்து இறந்தவர்கள், சித்திரவதையினால் இறந்தவர்கள் தற்கொலை செய்து கொண்டவர்கள் எனப் பலவகைப் பட்டவர்களையும் எரிக்க இவை பயன்படுத்தப் பட்டன. தினசரி ஏராளமானவர்களை எரிக்க வேண்டியதிருந்ததால் இந்த அறைகள் இராப்பகலாய் புகைந்தவண்ணமிருந்தன. பின் வந்த நாட்களில் சாவு எண்ணிக்கை அதிகரித்தது . மேலும் எரிபொருள் ( நிலக்கரி) கையிருப்பும் குறையவே இறந்தவர்களை பிணவறையில் மலை போல் குவிக்க ஆரம்பித்தனராம் காவலர்கள்.



இந்த அறைகளுக்கு அருகில் விஷவாயு அறையும் உண்டு. கைதிகளை மொத்தமாக இந்த அறைக்குள் அடைத்துவைத்து விஷ வாயுக்களை அறைக்குள் புகுத்திக் கொல்ல இவை அமைக்கப்பட்டன. ஆனால் டக்கவ்-விலிருந்த இந்த விஷவாயு அறை பயன்படுத்தப் படவில்லையாம்.விஷவாயு அறைகளுக்கு அருகில் தூக்கு மேடைகள் அமைக்கப் பட்ட இடங்களும் இருந்தன.

இந்த இடங்களைத் தவிர புகைப்படங்களின் தொகுப்பு அடங்கிய ஒரு காட்சியகமும் உண்டு. 1900 க்குப்பின் ஜெர்மனியில் நிகழ்ந்த நிகழ்வுகளின் பதிவு அது. ஹிட்லரின் கட்சி வளர்ந்த விதம், ஹிட்லரின் வெற்றி, அவரது பதவி ஏற்பு என அனைத்து நிகழ்வுகளையும் கண்முன் நிறுத்தும் புகைப்படங்களை இங்கு காணலாம். இந்த முகாமின் நிகழ்வுகள் பற்றியும் விரிவான புகைப்படங்களின் தொகுப்பும் உண்டு. கண்ட சில புகைப்படங்களில் மனம் பதைத்தது. ஹிட்லர் காலத்து மருத்துவர்கள் தங்களது சோதனைகளுக்கு இம்முகாமிலிருந்த கைதிகளைப் பயன்படுத்திக் கொண்டனராம். மனித உடல் தாங்கும் குறைந்தபட்ச வெப்பநிலை எவ்வளவு என்ற சோதனையா? ஒரு கைதியைப் பிடித்து சோதனை அறையில் அடைத்து விடுவார்கள். சோதனை அறையின் வெப்பநிலையைக் குறைத்துக் கொண்டே வந்து இறுதியில் உள்ளே அடைக்கப்பட்டிருக்கும் கைதி இறக்கும் வரை சோதனை தொடரும். கைதியின் எதிர்வினைகளை ஒவ்வொரு நிலையிலும் படம் பிடித்து கடைசியில் சோதனை முடிவுகளை ஹிட்லரின் காவல்தலைவர் ஹிம்லருக்கு அனுப்புவார்களாம். மனித உடல் தாங்கும் குறைந்த அழுத்தம் எவ்வளவு என்று பரிசோதனை செய்யவும் கைதிகள் பயன்படுத்தப்பட்டனர். பல்வேறு நிலைகளில் மருத்துவர்கள் பதிவு செய்த புகைப்படங்கள் இங்கே காண்பதற்கு மனதை உலுக்கும். கைதிகளைக் காவலர்கள் இரக்கமின்றித் தண்டிக்கும் படங்கள் , இறந்தவர்களை மலை போலக் குவித்திருக்கும் புகைப்படங்கள் , இறுதியில் நேச நாட்டுப் படைகள் வந்து கைதிகளை விடுவித்தவுடன் ஏற்பட்ட சந்தோஷங்களை வெளிப்படுத்தும் படங்கள் என நிறைய புகைப்படங்கள் இங்கே காணக் கிடக்கின்றன.

எல்லாக் குகைகளின் முடிவிலும் வெளிச்சம் தோன்றுவதைப் போல் டக்கவ் முகாமில் உயிரோடிருந்த மற்றும் சித்திரவதைகளிருந்து உயிர் பிழைத்த கைதிகளுக்கும் ஒருநாள் விடுதலை வந்தது. இரண்டாம் உலகப் போரில் நேச நாடுகள் வெற்றி பெற்று ஜெர்மனிக்குள் முன்னேறினர். ஒவ்வொரு முகாமல் அடைக்கப் பட்டிருந்தவர்களையும் அவர்கள் விடுவித்து சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கச் செய்தனர். டக்கவ் முகாமிற்கு வந்த நேச நாட்டுப் படையினரின் முதல் வேலை அவர்களுக்கு வயிறார உணவு தயாரித்து அளிப்பதாயிருந்தது. மகிழ்ச்சி மிகுதியில் பல ஆண்டுகளுக்குப் பின் வயிறார உணவு உண்ட பல கைதிகள் , அவ்வுணவு வயிற்றுக்கு ஒவ்வாமல் மரணித்த சம்பவங்களும் நிகழ்ந்தனவாம்.



புகைப்படங்கள் அடங்கிய காட்சியகத்திற்கு அருகில் ஒரு சிறிய திரையரங்கும் உண்டு. முப்பது நிமிடக் குறும்படம் இங்கு திரையிடப் படுகிறது. ஹிட்லர் பதவி ஏற்கும் காட்சியுடன் தொடங்கும் இக் குறும்படம் அதற்குப் பின் நிகழ்ந்த கொடுமைகளை நம் கண்முன் நிறுத்துகிறது. இறுதியில் இம்முகாமில் அடைபட்டிருந்தவர்கள் விடுதலையாவதுடன் நிறைவடைகிறது இப்படம்.

மியூனிக் நகர் வரும் அனைவரும் இந்த முகாமிற்கு வந்து வரலாற்றின் பக்கங்களைச் சற்றுப் புரட்டிப் பார்த்துவிட்டுச் செல்லலாம்.

June 15, 2004

டக்கவ் மரண முகாம் - 1



ஜெர்மனியின் மியூனிக் நகரிலிருந்து இருபது நிமிட இரயில் பயணம் செய்தால் டக்கவ் (Dachau) எனும் சிறிய புறநகர்ப்பகுதியை அடையலாம். மிக அமைதியான அந்த இடத்தில் அமைந்துள்ள ஒரு வரலாற்றுச் சின்னம் இரத்தத்தை உறைய வைக்கும் செய்திகள் நிறைந்தது. ஹிட்லரின் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட தரவுச்செறிவு முகாம்கள் நிறுவப்பட்ட இடங்களுள்(Concentration Camps) டக்கவ்- வும் ஒன்று. நாம் சற்றுப் பின்னோக்கிப் பயணித்து ஹிட்லரின் காலத்திற்குச் செல்வோம்.

1933-ல் ஜெர்மனியின் அதிபராக முடிசூட்டிக்கொண்டவுடன் தனது அரசியல் எதிரிகளையும், தன்னை எதிர்ப்பவர்களையும் ஒடுக்க நினைத்து , ஹிட்லர் ஆரம்பித்த சிறைகள்தாம் இந்தச் செறிவு ( அல்லது கட்டுப்பாடு) முகாம்கள். ஹிட்லரின் முதன்மைக் காவல்துறை அதிகாரியான் ஹிம்லர் இந்த முகாம்கள் அமைவதில் பெரும்பங்கு வகித்தவர். ஜெர்மனியின் பல இடங்களில் முகாம்கள் ஆரம்பிக்கப்பட்டு , ஜெர்மனியின் சிறப்புக் காவல்படையான Schutzstaffel (SS- State within State) இம்முகாம்களில் சிறைவைக்கப் பட்ட கைதிகளைக் கண்காணித்து வந்தது.

முதலில் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த சுமார் ஐயாயிரம் கைதிகள் மட்டும் அடைக்கப் பட்டனர் . பின்னர் பல நாடுகளைச் சேர்ந்த யூதர்கள், போர்க்கைதிகள் எனப் பட்டியல் நீண்டுகொண்டே போனது. டக்கவில் உள்ளது சற்றுப் பெரிய முகாம்தான். இந்த முகாமைச் சுற்றிலும் பெரிய கோட்டைச் சுவர்,யாரும் தப்பிச் சென்றுவிடாதபடி அதை ஒட்டிய அகழி , மேலும் மின்சார வேலியும் உண்டு. யாரும் தப்ப முயன்றால் மின்சாரம் தாக்கி மரணம்தான். சித்திரவதை தாங்க முடியாத கைதிகள் பலர் தாமே ஓடிவந்து மின்சார வேலியில் விழுந்து உயிர் துறப்பது அன்றாட நிகழ்வுகளில் ஒன்று. ஏழு உயரமான கண்காணிப்புக் கோட்டைகள். அதனுள் அமர்ந்து கொண்டு காவலர்கள் இரவும் பகலும் கைதிகளின் நடவடிக்கைகளைக் கவனித்து வந்தனர்.



முகாமின் நுழைவாயில் ஒரு பெரிய இரும்புக் கதவு.அதில் " Arbeit Macht Frei" என்ற ஜெர்மன் வாசகம். அதன் பொருள் " வேலை செய்வதே சுதந்திரம்".



ஒரு பெரிய திறந்தவெளி மைதானம்.கைதிகள் தினமும் அந்த வெட்டவெளியில் நிறுத்தப்பட்டு வருகைப்பதிவு போல இருப்புப் பதிவு நடத்தப்படும். தினமும் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கடுங்குளிரைப் பொறுத்துக் கொண்டு கைதிகள் நிற்க வேண்டும். பலர் சோர்வடைந்து விழுவதுண்டு. சிலர் இறந்து போவதுமுண்டு.



கைதிகள் அனைவரும் ஓயாது உழைக்க வேண்டும். ஹிட்லரின் படைகளுக்குத் தேவையான ஆயுதங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் ஆயுதத் தயாரிப்பில் கடினமான வேலைகள் கொடுக்கப் பட்டன. சாலைகள் அமைப்பது போன்ற வேலைகளும் உண்டு. எவ்வளவு வேலை செய்தாலும், கைதிகளுக்கு குறைந்த உணவே அளிக்கப்பட்டது. அதாவது, " எதிரிகளைச் சிறைப்படுத்து; அவர்களுக்குக் குறைந்த உணவளி ; அவர்கள் உடலில் மிஞ்சியிருக்கும் ஒரு சொட்டு சக்தி தீரும் வரை வேலை கொடு ; அவர்களின் உடல்வலு தீர்ந்து உபயோகமில்லாமல் போனால் கொன்று விடு" என்பதே ஹிட்லரின் காவலாளிகளுக்கு இடப்பட்டிருந்த எழுதப்படாத விதி.

மைதானத்தை ஒட்டி நீளமாய்ப் பல அறைகள்-கைதிகள் இரவில் தங்குவதற்கு. குளிர்காலங்களில் அறையைக் கதகதப்பாக்கும் வெப்பமூட்டுவான்கள் (Heaters) இல்லை. குளிரில் நடுங்கியபடிதான் கைதிகள் தூங்கவேண்டும். படுப்பதற்கு மரத்தில் அமைக்கப் பட்ட மரப் படுக்கைகள்.ஒன்றின் மேல் ஒன்றாக மூன்றடுக்குக் கட்டில்கள்( நம்மூர் ரயில்களில் உள்ளது போன்று). ஒரு கட்டிலில் மூன்று பேர் படுத்துக்கொள்ள வேண்டும். இரண்டு பேர் படுத்தாலே சிரமமாயிருக்கும் அக்கட்டிலில் மூன்று பேர் படுத்தால் எப்படி இருக்கும்? பின் வந்த நாட்களில் கைதிகளின் எண்ணிக்கை அதிகரிக்க நெரிசலும் அதிகமானது. இரவு வேளைகளில் கைதி அறைகளில் சத்தமோ சச்சரவோ ஏற்பட்டால் அவ்வளவுதான். சம்மந்தப்பட்ட அனைவரும் இரவு வேளையை அறைக்கு வெளியே குளிரில் நடுங்கிக் கொண்டே கழிக்கவேண்டியிருக்கும் அல்லது காவலாளியின் முள்தடிக்கு (இரும்பால் ஆனது) முதுகு காட்ட வேண்டியிருக்கும். படுக்கையறைகளை ஒட்டி குளியலறை மற்றும் கழிப்பறை. அவர்கள் பயன்படுத்திய குளியல் தொட்டிகள் சிதைந்த நிலையில் இன்னும் இருக்கிறது. சில வேளைகளில் கைதிகளாய் அடைபட்டிருந்தவர்கள் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்ளவும் அத்தொட்டிகள் பயன்படுத்தப் பட்டன.



இந்த அறைகளுக்குச் சற்றுத் தொலைவில் பதுங்கு அறைகள் (Bunker Rooms) நிறைய இருந்தன. இந்த அறைகள் வி.ஐ.பி கைதிகளுக்கு. பாதிரியார்கள் , எதிக்கட்சித் தலைவர்கள் போன்றோருக்கான சிறை இது. நமது ஊர்ப் பேருந்து நிலையங்களிலோ இரயில் நிலையங்களிலோ நாம் காணும் கழிவறைகளை விடச் சற்றுப் பெரியவை. இவ்வறைகளுக்கு சன்னல் கிடையாது . நாள் முழுக்க இருட்டுதான். இந்தவகைச் சிறையில் அடைக்கப் பட்டவர்கள் வேலை செய்ய வேண்டுமென்ற கட்டாயமில்லை. மூன்று நாட்களுக்கு ஒரு முறை வழங்கப் படும் சிறு உணவை உண்டுவிட்டு இருட்டறைகளிலேயே அடைந்துகிடக்க வேண்டும். இவர்களின் உறவினர்கள் வந்து பார்த்துவிட்டுச் செல்ல எப்போதாவது அனுமதிக்கப்பட்டது.




June 12, 2004

சில குறிப்புகள்

1.பீஹாரிலிருந்து திரும்பி வந்து சென்னையில் இரண்டு மாதங்கள் R&D செய்துகொண்டிருந்தேன். மறுபடியும் பீஹார் செல்ல மேலதிகாரி உத்தரவிட்டபோது செல்ல விருப்பமில்லை என்றேன். போய்த்தான் ஆகவேண்டும் என்றார். வேறு வழியில்லாமல் நான் கம்பெனியை விட்டு போக வேண்டிய வழிகளில் இறங்கினேன்.

2.உடன் பயின்ற கல்லூரித் தோழி அவள் வேலை செய்யும் நிறுவனத்தில் என்னைப் ப்ற்றிய விபரங்களைத் தரவும், நான் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப் பட்டேன்.இரண்டு நேர்காணல்கள் முடிந்து இறுதியாய் அந்நிறுவனத்தின் R&D பிரிவு ( அங்கேயும் R&D) பொது மேலாளரிடம் மற்றுமொரு நேர்காணல்.தேர்ந்தெடுக்கப்பட்டால் நிறைய பயணம் செய்ய வேண்டுமென்றார். நான் எனது பிஹார் பயணம் பற்றிக் கூறினேன்.அவர் சிரித்துக் கொண்டே, "பிஹாருக்கெல்லாம் அனுப்பமாட்டோம், டெல்லிக்குப் போகவேண்டியிருக்கலாம்" என்றார்.ஜெர்மனிக்குப் போகவேண்டும் என்று சொன்னால் நான் பயந்துவிடுவேன் என்று அவர் எண்ணியிருக்கக் கூடும்.

3.நேர்காணல் முடிவை உடனே சொல்ல வெண்டும் இல்லையெனில் நான் பிஹார் சென்றுவிடுவேன் என்று சொன்னேன்(மிரட்டினேன்). உடனே சொன்னார்கள் . அடுத்த பத்து நாட்களில் அந்த நிறுவனத்தில் சேர்ந்தேன் ( இன்னமும் அங்கு தான் பணி புரிகிறேன்).

4.சேர்ந்த சில நாட்களிலேயே உடல் நிலை மறுபடியும் குன்றியது. குறைந்த இரத்த அழுத்தம் மற்றும் இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவு என்றார்கள். இரண்டு மாதங்கள் அலுவலத்திலேயே ஓய்வு தந்தார்கள் (cool-off period). அதாவது அலுவலகம் வந்து செல்ல வேண்டும். அதுதான் வேலை

5.உடல் நிலை தேறியதும், அடுத்த மாதமே பயணம் மேற்கொண்டேன் . ஜெர்மனியின் மியூனிக் நகர் என்னை வரவேற்றது.மூன்று மாதங்களுக்கு ஜெர்மனி.முதல் வெளிநாட்டுப் பயண ஆச்சரியங்கள் முடிவதற்குள் திரும்பினேன்.

6. அடுத்த மூன்று மாதங்களில் இரண்டாவது பயணம். இம்முறை ஓராண்டுக்கும் மேல்.சில நாடுகளைச் சுற்றும் வாய்ப்பு. மீண்டும் இந்தியா திரும்பினேன்.

7. ஒரு சிறிய இடைவெளிக்குப் பின் மறுபடியும் ஜெர்மனி . அங்கு பணி முடிவடைந்ததும் தற்போது ஸ்வீடன்.

8. சுவிட்சர்லாந்து, பெல்ஜியம் , நெதர்லாண்ட்ஸ்( ஹாலந்து) , ஆஸ்திரியா, ப்ரான்ஸ், லக்ஸம்பர்க், நார்வே , டென்மார்க் போன்ற நாடுகளில் இதுவரை உலாவியிருக்கிறேன். பின்லாந்து மற்றும் போர்ச்சுகல் பயணம் வெகு விரைவில்.

9.வலைப்பூ -வில் இரண்டு வாரங்களாக இப்பதிவினைப் பற்றி(ஊக்குவிக்கும் நோக்கில்) நல்ல கருத்துக்கள் தெரிவிக்கப் பட்டிருந்தன. அடுத்த பதிவிலிருந்து ஐரோப்பிய பயணக் கட்டுரைகளை எழுத ஆரம்பித்து விடுகிறேன்.


June 10, 2004

லல்லுவின் ராஜ்ஜியத்தில் ஒரு மாதம் - 3

பாட்னாவின் வடகரையில் ஆர்ப்பரித்துக் கொண்டு ஓடுகிறது கங்கை நதி. பீஹாரை இருபுறமாகப் பிரித்து வைப்பதும் கங்கையே. நதியைக் கடந்து வடப்புறம் சென்றால் ஹாஜிபூர். நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஆற்றுப் பாலம் உலகிலேயே நீளமான ஆற்றுப் பாலங்களில் ஒன்று.மஹாத்மா காந்தி சேடு(Setu) எனப்பெயர் சூட்டப்பட்ட பாலமிது. சுமார் ஏழு கிலோமீட்டர் நீளமுள்ள இந்தப் பாலத்தை தினசரி காலையிலும் மாலையிலும் கடந்து செல்வதே சுகானுபவந்தான். குறிப்பாக காலை வேளைகளில் செல்லும்போது ஆறு முழுவதும் பனிப்புகை போர்த்திக்கொண்டு இளஞ்சூரிய வெயிலில் குளிர்காய்வது இனிய காட்சி. இந்தப்பகுதியில் நதியின் குறுக்கே இன்னும் இரயில் பாலம் எதுவும் கட்டப்படவில்லை.

நான் அங்கு தங்கியிருந்த நேரம் தேர்தல் திருவிழா நடைபெற்ற நேரம். தேர்தல் நடக்கும் தேதிகளில் கலவரங்கள் நிகழ வாய்ப்பிருப்பதால் விடுதியை விட்டு வெளியேற வேண்டாமென்று எங்களுக்கு அறிவுறுத்தப் பட்டிருந்தது.தொலைக்காட்சி பார்த்துக் கொண்டு இரண்டு நாட்கள் அறைக்குள்ளேயே அடைபட்டுக் கிடந்தோம்.ஒவ்வொரு சேனலாக மேய்ந்ததில் தட்டுப்பட்டது "ஹே ராம்". படம் வெளிவந்து இரண்டு அல்லது மூன்று நாட்கள்தானிருக்கும். அதற்குள்ளாக கேபிளில் திருட்டுத்தனமாக ஒளிபரப்பிக் கொண்டிருந்தனர். நம்ம ஊர் போல்தான் இங்கும் என நினைத்துக் கொண்டேன்.தேர்தலின்போது நிறைய வன்முறைகள்தான். முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் கலவரத்தில் இறந்ததாகச் செய்தி அறிந்தோம். வழக்கம் போல் லல்லுதான் வென்றார். எவ்வளவு ஊழல் செய்தாலும் எத்தனை பேர் குறை சொன்னாலும் தானே ராஜா என நிரூபித்தார். கடைக்குப் போய்த்திரும்பிய சகா லல்லுவைத் தெருவில் பார்த்ததாகக் கூறினான். வெற்றிக் களிப்பில் எல்லோருக்கும் இனிப்பு வழங்கிக் கொண்டிருந்தாராம்.அச்சமயம் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கூட கல்லூரிகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டம் செய்துகொண்டிருந்தனர். காரணம் என்னவென்றால்,மருத்துவம் படிக்கும் லல்லுவின் புதல்வி பல்கலைக் கழகத்திலேயே முதல் மாணவியாய் ரேங்க் எடுத்ததாக அறிவித்ததுதான்.லல்லு இந்தப் போராட்டத்திற்கும் அசரவில்லை.

அலுவல் நாட்களில் மதிய உணவிற்குப்பின் ஹாஜிபூரின் வீதிகளில் ஒரு சிறிய நடை மேற்கொள்வோம் . மிகவும் அழுக்கான வீதிகள், ஈ மொய்க்கும் பண்டங்கள், புழுதிபறக்கும் சாலைகள் என ஏமாற்றம் அளித்தன. தெரியாத்தனமாய் ஒருநாள் டீக்கடையொன்றில் தேநீர் பருக அமர்ந்தோம். அங்கே கொடுக்கப்பட்ட தேநீர் ஒன்றில் கோழி இறகு ஒன்று மிதந்துகொன்டிருந்தது. சில நாட்களுக்கு தேநீர் பருகுவதை மறப்பதென்று முடிவு செய்தோம்.

பாட்னாவிலிருந்து சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் புத்தகயா இருந்தது. நாலந்தாவும் அருகில்தான். இவற்றையெல்லாம் பார்த்துவிடலாம் என்ற என் எண்ணத்தில் மண் விழுவதுபோல் உடல்நிலை சற்று மோசமாக ஆரம்பித்தது. முதலில் சிறிது காய்ச்சல் இருந்தது . நான் தங்கியிருந்த விடுதி வரவேற்பாளரிடம் கேட்டு அருகிலிருந்த ஒரு தனியார் மருத்துவமனைக்குச் சென்றேன். பெரிய கூட்டம். என்னைப் பார்த்ததும் ஒருவர் ஏதோ கேட்டார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. மருத்துவரைப் பார்க்கவேண்டுமென்று ஆங்கிலத்தில் கூறினேன். நூறு ரூபாய் என்றார். எடுத்துக் கொடுத்த அடுத்த நிமிடம் நான் மருத்துவரைப் பார்க்க அனுமதிக்கப்ப்பட்டேன்.மருத்துவர் என்னை மதறாஸியா என்று கேட்ட வண்ணம் , வலிக்க வலிக்க இரண்டு ஊசிகள் போட்டார். ஏகப் பட்ட மாத்திரைகள் எழுதிக் கொடுத்தார். மீண்டும் மறுநாள் வரச் சொன்னார். பின்வந்த நாட்களில் உடல்நிலை இன்னும் மோசமானது. பயந்துபோன எனது மேலதிகாரி சென்னைக்குத் திரும்பிவிடச் சொன்னார்.உடல்நிலை உடனே கொஞ்சம் சீரானது. இதற்குள் எனது மூத்த சகா திரு. இரத்தினம் பிகார் வந்து சேர்ந்தார். அடுத்த வாரம் பயணம் உறுதிசெய்யப் பட மீண்டும் ஒன்றரை நாள் (தனியாகப்) பயணம் செய்து சென்னைப் பட்டணம் திரும்பினேன். வேலையும் அரைகுறையாய் முடித்து , ஒழுங்காய் ஊர் சுற்றவும் முடியாமல் எனது பிஹார் பயணம் பயனின்றி முடிவுக்கு வந்தது








June 08, 2004

லல்லுவின் ராஜ்ஜியத்தில் ஒரு மாதம் - 2

பீகாரின் தலைநகரம் பாட்னாவை அடைந்தபோது ஒன்றரை நாட்களுக்கு மேலேயே ஆயிருந்தது. எனது சகா பாபு எங்களை எதிர்பார்த்துக் காத்திருந்தான். ஜன நெரிசலில் நீந்தி இரயில் நிலையம் விட்டு வெளிவந்தோம். நிலையம் மிகவும் அழுக்காய் இருந்தது. "எங்கெங்கு காணிணும் சக்தியடா" என்று பாரதி பாடியது போல் "எங்கெங்கு காணிணும் புகையிலை எச்சிலடா" எனப் பாடத் தோன்றியது. சுவர்களில் , இரு சுவர்கள் சந்திக்கும் மூலையில், படிச்சுவர்களில் என எங்கும் சிவப்புச்சாறு. "இதெல்லாம் கண்டுக்காத நைனா" என்றான் பாபு.

இரயில் நிலையத்தின் வெளியே ஆட்டோக்களின் அணிவகுப்பு. நிறைய சைக்கிள் ரிக்க்ஷாக்களும் காணமுடிந்தது.ஒரு ஆட்டோவில் ஏறி எங்களுக்கு ஏற்பாடு செய்திருந்த விடுதிக்குப் பயணம் ஆரம்பித்தோம். அவ்வளவுதான். என் எலும்புகள் இடம் மாற ஆரம்பித்தன. சென்னையின் ஆட்டோக்களுக்கு ஓரளவு பழகியிருந்தாலும் பாட்னாவின் சாலைகள் படுபள்ளமாயிருந்தன. ஒரு மாநிலத் தலைநகரின் இரயில் நிலையச் சாலை இவ்வளவு மோசமாக நான் பார்த்ததில்லை. கடந்த தேர்தலில் நமது லல்லு என்ன சொல்லியிருந்தார் தெரியுமா? " பீஹார் மாநிலச் சாலைகளை ஒரு நடிகையின் முகம் பளபளப்பது போல் மிளிரச் செய்வேன்".விடுதி சுமார் நான்கு கிலோமீட்டர் தூரம். ஆட்டோவுக்கு எவ்வளவு ஆயிற்று தெரியுமா? தலைக்கு மூன்று ரூபாய் என்று ( நாங்கள் மூன்று பேர்) ஒன்பது ரூபாய். எனக்கு ஆச்சரியமாகத்தானிருந்தது. சென்னையிலிருந்து யாரும் பாட்னாவிற்கு ஆட்டோ ஓட்டிப் பிழைக்க வரவில்லை என நினைத்துக் கொண்டேன்.

விடுதி வசதியாகத்தானிருந்தது. அறையிலிருந்த தொலைக்காட்சிப் பெட்டியில் அனைத்து வகை சாடிலைட் சேனல்களும் வந்தன. தமிழும் இருந்தது. அகபேசியில்(intercom) சொன்னவுடன் ,விடுதியுடன் இணைக்கப் பட்டிருந்த உணவகத்திலிருந்து உணவும் விரைவாகக் கிடைத்தது. நாங்கள் பணிபுரியச் செல்லவேண்டியிருந்த இடமான ஹாஜிபூரில் உணவகங்கள் சரியில்லை என்பதால் மதிய உணவும் இங்கிருந்தே எடுத்துச் செல்ல வேண்டியிருந்தது. ஹிந்தி எனக்குத் தெரியாது. எனவே எல்லா இடங்களிலும் திணறினேன்

ஹாஜிபூர் - பாட்னாவிலிருந்து சுமார் 25 கிலோமீட்டர் தூரத்தில் இருந்த ஒரு சிறு நகரம். சாலைகள் புதிதாயிருந்தன. பாட்னாவிலிருந்து ஹாஜிபூர் செல்ல சரியான அரசுப் பேருந்துகள் இல்லை. தனியார் பேருந்துகள்தான். பயணச் சீட்டு தரமாட்டார்கள். நடத்துனர் என்று சொல்லக் கூடிய ஒருவர் வந்து பேருந்திலமர்ந்திருக்கும் அனைவரிடமும் பணம் வாங்கிச் செல்வார். பயணச்சீட்டின் விலை சில நாட்களில் வேறுபடும். இருக்கை கிடைக்காமல் நின்றுகொண்டே பயணிப்போர் சில சமயம் நடத்துனரிடம் " உட்கார்ந்து பயணம் செய்தாலும் நின்றுகொண்டே பயணம் செய்தாலும் ஒரே ரேட்தானா? குறைந்த பணமே தரமுடியும்" என்றுகூறி விவாதத்தில் ஈடுபடுவர். எனக்கு அரைகுறையாய்ப் புரியும். நடத்துனர் இதற்கு ஒத்துக் கொள்ள மறுத்து " இந்த வண்டிக்கு நான் கண்டக்டரா, இல்ல நீயா" என்று எதிர்வாதம் புரிவார். அவ்வப்போது அடிதடியும் உண்டு. ஓட்டுனரும் தன் பங்கிற்கு , பேருந்தைச் சற்று ஓரங்கட்டிவிட்டு அடிதடியில் இறங்கும் வழக்கமும் உண்டு. பேருந்து புறப்படும் நேர அட்டவணையும் கிடையாது. வரிசையாகப் பேருந்துகள் வந்து நிற்கும். முதலில் நிற்கும் வண்டியுள் ஏறிக்கொள்ள வேண்டும். வண்டி நிரம்பியதும் கிளம்பி விடவேண்டும். ஓட்டுனர் சற்றுத் தாமதித்தால் அவ்வளவுதான். அடுத்த வண்டியின் நடத்துனர் வசை பாடிக்கொண்டே முன் நிற்கும் வண்டியைத்தட்டி இசை போடுவார்.

பேருந்தில் செல்லப் போரடித்தால் நாங்கள் ஆட்டோவில் பயணிப்போம். சென்னையில் ஓடும் ஷேர் ஆட்டோக்கள் போல்தான் இருந்தன. ஆனால் மிகவும் குறுகலாக இருந்தன. ஐந்து பேர் மட்டும் செல்லக்கூடிய அந்த வண்டியுள் குறைந்தது எட்டுப்பேரைத் திணித்துக் கொண்டு செல்லுவர். இப்படியெல்லாம் நாங்கள் அவதியுறுவதை அறிந்த எங்கள் மேலதிகாரி ஒரு மகிழ்வுந்தை ( அட, கார் தாங்க!) வாடகைக்கு அமர்த்திக்கொள்ளச் சொல்லிவிட்டார்.
ஹாஜிபூரின் மையத்தொலைபேசி இணைப்பகத்தில் தான் எங்களது CDMA நெட்வொர்க் அமைக்கப்பெற்றிருந்தது. இதன் மூலம் ஹாஜிபூரைச் சுற்றிலும் 20 கிலோமீட்டர் வரை செல்பேசிச் சேவை அளிக்கமுடியும். அதன் செயல்பாட்டைச் சோதிக்க , அடர்ந்த காடுகளுக்கு மத்தியலமைந்த கிராமங்களுக்கும் செல்ல வேண்டியிருந்தது. திருடர்பயம் நிறைந்த பகுதி அது. காரில் சென்றால் வழிமறித்து , சட்டை, பேண்ட் உட்பட அனைத்தையும் பறித்துக் கொள்ளும் திருடர்கள் இருப்பதாகக் கூறினார்கள். ஆனால் அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை.

June 03, 2004

லல்லுவின் ராஜ்ஜியத்தில் ஒரு மாதம் - 1

"ன்னடா இவன், ஐரோப்பிய நாடுகளைப் பத்தி எழுதப்போறேன்னு சொல்லிட்டு லல்லு தேசம்னு ஆரம்பிச்சுட்டான்"னு பாக்குறீங்களா? புத்தகங்களில் முன்னுரை வருவதுபோல் இதுவும் ஒரு முன்னுரை . சற்றுப் பெரிய முன்னுரை. நான் ஐரோப்பா செல்லக் காரணமாயிருந்த நிகழ்வு இது என்று கூடச்சொல்லலாம்.

தற்போது நான் பணிபுரியும் நிறுவனத்தில் இணைவதற்கு முன் சென்னையில் இருக்கும் ஒரு மத்திய அரசு நிறுவனத்தில் பொறியியல் பயிற்சியாளனாக (Engineer Traninee) அலுவல் செய்து கொண்டிருந்தேன். R & D பிரிவில் வேலை . எனவே தினமும் R&D தான் (Reading and Dreaming) . செல்பேசியின் பயன்பாடு பரவலாகப் பிரபலமாகத் துவங்கிய நேரம். CDMA -WLL (wireless local loop) பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். தற்போது சென்னையில் Reliance நிறுவனம் அளிக்கும் சேவை இந்த CDMA வகைதான். GSM போல் CDMA -யும் ஒரு கம்பியில்லா தொழில் நுட்பமே (wireless technology). ஐரோப்பிய நாடுகளின் கண்டுபிடிப்பு GSM . CDMA அமெரிக்கர்களின் தொழில் நுட்பம்.
GSM சேவைகளுக்கு இந்தியாவில் அனுமதி தந்தபின் CDMA நெட்வொர்க்குகள் பற்றியும் நமது அரசு யோசித்தது. குறிப்பாக கிராமப் புறங்களுக்கு CDMA மிகச் சிறந்த தொலைபேசித் தீர்வாகும். இதைச் சோதனை செய்து பார்க்க எங்கள் நிறுவனத்திற்கு அனுமதி கிடைத்தது. நகரம் ஒன்றிலும் கிராமம் ஒன்றிலும் பரிச்சார்த்த அடிப்படையில் இரண்டு நெட்வொர்க்குகள் அமைக்க முடிவானது. சென்னையில் ஒரு சோதனை நெட்வொர்க் அமைத்து ஐந்து மாதங்கள் அதன் செயல்பாடுகள் ஆராயப் பட்டன. அப்போது கிடைத்த அனுபவங்கள் குறித்து ஒரு தொடர்கதையே எழுதலாம். வேறொரு சமயம் அது பற்றி எழுதுகிறேன்.

சென்னையில் வேலைகள் முடிவடைந்தன. கிராமம்?
அப்போது தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்தவர் ராம் விலாஸ் பாஸ்வான். பீஹாரில் சோதித்துப் பார்க்கச் சொல்லிவிட்டார். எங்களுக்கு வந்தது சோதனை. பாஸ்வானின் தொகுதியான ஹாஜிபூரில் சோதனை நெட்வொர்க் அமைக்க முடிவானது. எனக்குக் கிலி பிடித்தது. லல்லுவின் ராஜ்யத்தில் ஒரேயடியாக ஆறு மாதங்களா? நல்ல வேளையாக , சுழற்சி முறையில் ஒரு மாதம் சென்னையிலும் ஒரு மாதம் பிஹாரிலும் பணிபுரிய எங்கள் மேலதிகாரி திட்டம் வகுத்தார். முதலில் எனது சகாக்கள் இருவர் சென்று வேலைகளை ஆரம்பித்தனர். அடிக்கடி எனக்கு தகவல்கள் அளித்தவண்ணம் இருந்தனர். நான் பயணம் மேற்கொள்ள வேண்டிய தேதி நெருங்கிக் கொண்டிருந்தது. பிஹாரில் மாநிலத் தேர்தல் நேரம் அது. நிறைய வன்முறைச் செய்திகள் பயமுறுத்தின. போதாக்குறைக்கு என் சகா வேறு , "இன்று ஒருவர் எங்களின் தொலைபேசி இணைப்பக அறைக்கு வந்து முதன்மைப் பொறியாளர் எங்கே என்று விசாரித்தார், அவரது உதவியாளர் கையில் துப்பாக்கி வைத்திருந்தார்" என்றெல்லாம் கூறி , என்னை விரைவாக வந்து சேரும்படி அன்பாக அழைப்பு விடுத்தான்.

இறுதியாக நான் கிளம்பும் நாளும் வந்தது. நானும் எனது சகா மற்றொருவனும் கிளம்பினோம். சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் , வழியனுப்ப எனது நண்பர்கள் வந்திருந்தனர். அமெரிக்காவில் படிக்கும் நண்பன் நாரி( நாராயணன்), " எப்போதாடா பிஹார் போய்ச் சேர்வாய்?" என்று கேட்டான். குறைந்தது ஒன்றரை நாட்கள் என்றேன். அதற்குள் அவன் அமெரிக்கா போய்ச் சேர்ந்துவிடுவானென்று சொன்னான் ( அவனது பயணம் அன்று மாலையில்). லல்லுவிடம் ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டு வரும்படி நண்பர்கள் கேட்டுக் கொண்டனர். அனைவரிடமும் விடைபெற்று இரயிலுள் அமர்ந்தேன். பிஹாரை நோக்கி வண்டி கிளம்பியது.

June 02, 2004

என்னைப் பற்றி..

எனது பெயர் எழில் மயில் வாகனன் ( பயந்து போகாதீங்க) . சுருக்கமாக எழில். மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பியலில் இளநிலைப் பட்டம். ( அதாங்க, B.E in Electronics and Communications)

தற்போது பணி புரிவது கணினி சார்ந்த நிறுவனம் என்றாலும் செல்பேசி தயாரிப்பில் தான் வேலை (cellphone testing) . தற்காலிக வசிப்பிடம் ஸ்வீடன் . சென்ற வருடம் வரை ஜெர்மனி. அலுவலகம் சென்னையில் தான் உள்ளது . ஆயினும் அயல் நாடுகளிலேயே பணி தொடர்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் நான் சுற்றிய ஐரோப்பிய நாடுகளைப் பற்றி வலைபதிக்க ஆவல். முடிந்த வரை சுவையாக எழுத முயற்சிக்கிறேன்.