September 23, 2004

லக்ஸம்பர்க் - 1



லக்ஸம்பர்க்- மத்திய ஐரோப்பாவிலுள்ள ஒரு குட்டி நாடு. மொத்த மக்கள் தொகையே நாலரை இலட்சம்தான். இரண்டாயிரத்து ஐநூறு சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள இந்நாட்டின் மூன்றின் ஒரு பகுதி வனப்பகுதியாகும். சிறிய நாடென்றாலும் இயற்கை அழகு கொழிக்கும் நாடு இது. ஜெர்மனி, பிரான்ஸ் , பெல்ஜியம் ஆகிய நாடுகள் லக்ஸம்பர்க்-கைச் சூழ்ந்துள்ளன. இதனால் பண்டைய நாட்களில் இந்த நாடுகளுள் ஏதேனும் ஒரு நாட்டுக்குட்பட்ட பகுதியாகவே இருந்து வந்திருக்கிறது.
சென்ற வருடம் (கி .பி 2003) ஈஸ்டர் விடுமுறை நாட்களில் லக்ஸம்பர்க் நாடு செல்லத் திட்டமிட்டோம் நானும் எனது மனைவியும். பயணம் திட்டமிடப்பட்ட போது எங்கள் திருமணத்திற்கு நான்கு மாதங்கள் இருந்தன. எனவே " திருமணத்திற்கு முன்னே தேனிலவா?" என்று அனைவரின் கேலிக்கும் ஆளானோம். ஜெர்மனிக்கு அருகில் இருந்தாலும் மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலங்கள் இல்லாதது என்றே பரவலாக அறியப்பட்டிருந்த நாடு லக்ஸம்பர்க். எனது ஜெர்மன் நண்பர் ஒருவர் இதுவரை அங்கே சென்றதில்லை என்று கூறி எங்கள் பயணம் குறித்து ஆச்சரியம் தெரிவித்தார். மியூனிக் நகரிலிருந்து அந்நாட்டின் விமானம் லக்ஸ் ஏர் (Lux Air) மூலம் பயணம் செய்தோம். சிறிய விமானம். விமானத்தினுள் இருந்த பயணக் கையேட்டினை புரட்டுகையில் சென்ற வருடம் விபத்துக்குள்ளான லக்ஸ் ஏர் விமானத்தைப் பற்றிய செய்தி சிறிது பயமூட்டியது. ஒரு மணி நேரப்பயணம் என்றாலும் , நடுவில் சார்புருக்கன் எனும் ஜெர்மானிய நகரில் இறங்கி ஆட்களை ஏற்றிக்கொண்டு ( டவுன் பஸ் போல) மீண்டும் பறந்தது.

லக்ஸம்பர்க் நாட்டின் தலைநகர் பெயரும் லக்ஸம்பர்க் தான். லக்ஸம்பர்க் நகர் என்று இதனை அழைக்கிறார்கள். பேசும் மொழி லக்ஸம்பர்கிஷ் என்றாலும் ஜெர்மன் மற்றும் பிரெஞ்சு மொழிகள் பரவலாகப் பேசப்படுகின்றன. நகரின் மொத்த மக்கள் தொகை எண்பதாயிரம். சுமார் இருநூறு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனக்கள் இயங்குகின்றன. சிறிதும் பெரிதுமாய் எங்கு பார்த்தாலும் ஏதாவது ஒரு வங்கி கண்ணில் பட்டது.

நகரின் மையத்திலிருந்து நடக்க ஆரம்பித்தால் ஒரு சராசரி ஐரோப்பிய நகரின் காட்சிகள் அனைத்தும் இங்கும் வழி நெடுகத் தொடர்கிறது.



வித்தியாசமான சிலைகள் , மியூஸியங்கள் ,தேவாலயங்கள் , அரண்மனைகள், அரண்மனைக்கு வெளியே காவல் செய்யும் சீருடைக் காவலாளிகள் , காவலாளிகள் வேலை முடிந்து அடுத்த காவலாளி பொறுப்பேற்கும் போது செய்யும் அணிவகுப்பு என வழக்கமான காட்சிகள். இளவேனிற்காலம் அப்போதுதான் தொடங்கிய ஏப்ரல் மாதம். அன்றைக்குச் சற்றே குளிராக இருந்தது. அந்தக் குளிரில் விறைப்பாய் நாளெல்லாம் நிற்கும் காவலாளியைக் காண சற்றே பாவமாயிருந்தது.

நகரின் தென்பகுதியிலுள்ள பள்ளத்தாக்கு மிகவும் சுவாரஸ்யமானது. இயற்கையாகவே அமைந்த இப்பள்ளத்தாக்கினைச் சுற்றியும், அதன் உள்ளும் பண்டைய காலத்து மன்னர்கள் நிறைய கோட்டைகள் , மறைவிடங்கள் மற்றூம் தேவாலயங்களை அமைத்தனர். கி பி 963 -ல் கவுன்ட் ஸீக்பீல்ட் எனும் மன்னர் இந்தப் பள்ளத்தாக்கினைச் சுற்றிலும் கற்சுவர்களைக் கட்ட ஆரம்பித்தார்.



எதிரிகள் தாக்குகையில் பதுங்கிக் கொண்டு மறைவிடங்கள் மூலம் திரும்பித்தாக்கும் வண்ணம் கோட்டைகள் கட்ட ஆரம்பித்தனர். இருப்பினும் பின் வந்த நான்கு நூற்றாண்டுகளுக்கு லக்ஸம்பர்க் அந்நியர் வசம் இருந்தது. அவர்களும் இந்தப் பள்ளத்தாக்கினுள் பல கோட்டைகள் கட்டினர். நீறூற்றுக்கள், பசும் புல் வெளிகள் ,மரங்கள் , உறுதியான கற்சுவர்கள் , சலசலத்து ஓடும் சிறு ஓடை என்று இன்றும் பழமை மாறாமல் இருக்கிறது. வடக்கு ஜிப்ரால்டர் என்றே இந்த நகருக்குப் பெயர் வந்தது இந்த நில அமைப்பினால் என்கிறார்கள்.



கால்கள் வலிக்கும் வரை( வலித்த பின்னும்) இந்தப் பள்ளத்தாக்கின் மேலும் கீழும் ,கோட்டைச் சுவர்களிலும் சரிந்த பாதைகளிலும் நடந்தோம். இதன் குறுக்காகக் கட்டப்பட்டுள்ள பாலங்கள் பல. இவற்றுள் வயடுக்ட் (Viaduct) எனும் பாலம் பழமையானது.இருபத்தி நான்கு வளைவுகள் (Arches) கொண்டது. பாலத்தின் மேலிருந்து பார்க்கும் போது கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரிவது இப்பள்ளத்தாக்கின் அழகுதான்.போன்ட் அடோல்ப் (Pont Adolf) எனும் மற்றொரு பெரிய பாலமும் உண்டு.



சுமார் இருபத்தி மூன்று கிலோமீட்டர் நீளமுள்ள மறைவிடம் இப்பள்ளாத்தாக்கில் கட்டப்பட்டதாம். போக் காஸிமேட் (Bock Casemates) எனப்பெயர் பெறும் இந்த குகைப் பகுதி பற்றி அடுத்த பதிவில்.

September 15, 2004

பெர்லின் சுவர் -4

செக் பாயிண்ட் சார்லி அருங்காட்சியகம். உள்ளே நுழைந்தவுடன் வண்ண வண்ண பாஸ்போர்ட்கள் வரவேற்றன. இவையனைத்தும் போலி பாஸ்போர்ட்டுகளாம். கிழக்கு ஜெர்மனியிலிருந்து தப்பித்து மேற்கு ஜெர்மனி வருவதற்கு போலியாகப் பல பாஸ்போர்ட்டுகள் தயாரித்து காவலாளிகளை ஏமாற்றினராம் . அவர்கள் பயன்படுத்திய பாஸ்போர்ட்டுக்கள் அனைத்தையும் சேகரித்து வைத்துள்ளனர். அருங்காட்சியகம் முழுவதும் பெரிய பெரிய கருப்பு வெள்ளைப்புகைப்படங்களும் அவற்றுக்கருகே அப்புகைப்படங்கள் பற்றிய குறிப்புக்களும் நிறைந்துகிடக்கின்றன. ஜெர்மன், ஆங்கிலம், ரஷ்ய மற்றும் பிரஞ்சு மொழிகளில் குறிப்புக்கள் எழுதப்பட்டுள்ளன.

இரண்டு ஆண்கள் உதட்டு முத்தமிடுவது போல் இருந்த ஒரு புகைப்படம் என்னைத் திகைப்பில் ஆழ்த்தியது. அங்கிருந்த குறிப்பைப்படித்த பிறகே அவ்விருவரும் முன்னாள் சோவியத் குடியரசில் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராயிருந்த லியோனிட் ப்ரெஸ்னெவ் மற்றும் கிழக்கு ஜெர்மனியின் கம்யூனிஸ்ட் தலைவர் எரிக் ஹோனெகெர் என்று புரிந்து கொண்டேன். இருவரும் சந்தித்தபோது சகோதரத்துவ முத்தமிட்டு தங்கள் பாசத்தை வெளிப்படுத்திய காட்சியே அது.

ஒரு பழைய கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. இஸெட்டா (Isetta) என்னும் சிறியரகக் கார் அது. அந்த வண்டியின் பெட்ரோல் நிரப்பும் டேன்க்-கை ஒருவர் ஒளிந்துகொள்ளும் வகையில் மாற்றி அமைத்தார் அந்தக் காரின் சொந்தக்காரரான ப்ரீஸ்டோபர் என்பவர். இதை மாற்றி அமைக்க இரண்டு மாத காலமானது. தபால் எடுத்துச் செல்லும் வேலை செய்துகொண்டிருந்த இவர் இக்காரில் ஒன்பது பேரை கிழக்கு ஜெர்மனியிலிருந்து மீட்டு மேற்கே அழைத்து வந்தார். பத்தாவது முறை மாட்டிக்கொண்டாராம். 1964 ஆம் வருடத்து மாடலான இந்தக்கார் இன்னும் பார்வைக்காக இங்கு வைக்கப்பட்டுள்ளது.

லாரிகளை வேகமாக ஓட்டி வந்து சுவர்களை இடிக்கும் முயற்சியும் பலமுறை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இம்முயற்சிகளைத் தடுக்கும் வண்ணம் சுவரின் அருகே அகழிகள் தோண்டப்பட்டு வேலி அமைத்து காவல் பலப்படுத்தப்பட்டது.

துணிகள் தைக்கும் தையல்காரர் ஒருவர் தினமும் மேற்கு ஜெர்மனியிலிருந்து கிழக்கே செல்வது வழக்கம். தையல் எந்திரத்தை ஒரு பெரிய மர டப்பாவினுள் எடுத்துச் செல்வாராம். கிழக்கு பெர்லினைச் சேர்ந்த ஒரு பெண் தப்பிக்க உதவும்படி கேட்டுக்கொள்ளவே அந்த மர டப்பாவினுள் தையல் எந்திரத்துக்குப்பதில் அப்பெண்ணை அடைத்து தனது சைக்கிளில் ஏறி ஓட்டிக்கொண்டே எல்லை கடந்தாராம். தினசரி அவர் செல்கையில் சோதனை செய்யும் காவலர்கள் சில நாட்களில் சோதிக்காமலே விட்டுவிடுவது வழக்கம். அன்றும் அதிர்ஷ்டம் அவருக்குக் கை கொடுத்தது. அப்பெண்ணும் தப்பித்தாள். சில நாட்கள் கழித்து இருவரும் திருமணம் செய்து கொண்டனராம்

சுவரின் கீழ்வழியாக சுரங்கம் தோண்டித் தப்பித்த கதைகளும் உண்டு. கிழக்கு பெர்லினில் இருந்த சில மாணவர்கள் ஒரு வீட்டின் குளியலறையிலிருந்து சுரங்கம் தோண்ட ஆரம்பித்தனர். நூற்றி நாற்பத்தைந்து மீட்டர் நீளமான இச்சுரங்கம் மேற்கு பெர்லினில் ஒரு பேக்கரியில் முடிவடைந்தது. இச்சுரங்கம் வழியாக ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் தப்பித்தனர். ஆனால் இச்சுரங்கம் சில நாட்களிலேயே கிழக்கு பெர்லின் காவலாளிகளால் கண்டு பிடிக்கப்பட்டு மூடப்பட்டது. இதே போல் கிழக்கு பெர்லினில் மற்றொரு சுரங்கமும் தோண்டப்பட்டதாம். கல்லறையினருகே தொடங்கிய இச்சுரங்கத்தைப்பயன்படுத்தியும் பலர் தப்பித்தனர்.
பெரிய ராட்சத பலூன்களில் காற்று நிரப்பி அதில் மிதந்தபடி வனவீதியின் வழியே தப்பிய ஒரு சம்பவமும் உண்டு. மற்றுமொருவர் ஒரு சிறிய க்ளைடர் விமானத்தை உருவாக்கி அதில் பறந்து தப்பினாராம். ரஷ்ய நாட்டு ராணுவ வீரர்கள் போல் சீருடை அணிந்த சிலர் எல்லை கடந்து செல்கையில், அவர்கள் உண்மையிலேயே ரஷ்ய வீரர்கள் என எண்ணிய கிழக்கு பெர்லின் காவலாளிகள் விரைப்பான சல்யூட் அடித்தனரம். மரியாதையை ஏற்றுக்கொண்டே அவர்கள் மேற்கு பெர்லினில் தஞ்சமானார்களாம்.

சுவரை ஒட்டியிருந்த வீடுகளும் தப்பிக்க உதவியிருக்கின்றன. மேற்குப்பகுதியிலிருந்த ஒரு பலமாடிக்கட்டடத்தின் ஜன்னலில் கட்டப்பட்ட கயிறு ஒன்றைப்பிடித்து கிழக்குப்பகுதியிலிருந்து சுவர் ஏறித் தப்பித்த நிகழ்வுகளும் உண்டு.
சுமார் ஐயாயிரம் பேருக்கு மேல் தப்பித்த நிகழ்ச்சிகள் வரலாறு ஆகியுள்ளது. இது தவிர கிழக்கு ஜெர்மனி ராணுவத்தைச் சேர்ந்த எழுநூற்றுக்கும் மேற்பட்டவர்களும் தப்பித்து மேற்கு பெர்லினில் அடைக்கலமாயினர்.

பெர்லின் சுவர் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளை விளக்கும் பல ஒளி-ஒலிக் காட்சிகள் சிறு சிறு அறைகளில் காட்டப்படுகின்றது. அஹிம்சை வழிப்போராட்டம்- காந்தி முதல் வலசா ( போலந்து நாட்டு அமைதிப்புரட்சியாளர்) வரை என்ற ஒரு விவரணப்படமும் அவ்வப்போது ஏற்பாடு செய்யப்பட்டுக் காட்டப்படுகிறது. பெர்லின் சுவர் பற்றிய நினைவுப் பொருட்கள் வாங்கும் சிறு கடையில் உடைந்த சுவரின் துண்டுகள் தற்போது விலைக்குக்கிடைக்கிறது.


ஏராளமான நினைவுகளைச் சுமந்து கொண்டு மியூசியம் விட்டு வெளியேறினோம்.

September 03, 2004

பெர்லின் சுவர் -3



நெய்டர்கிர்ஹ்னெர் ஸ்ட்ராசே (Niederkirchner Strasse) என்னும் தெருவில் பெர்லின் சுவரின் மிச்சங்கள் இருக்கும் விவரத்தை பெர்லின் சுற்றுலாத்தகவல் மையத்தில் கேட்டறிந்து அவ்விடத்திற்குப் புறப்பட்டோம். பெர்லின் சுவர் முற்றிலுமாக நகர மக்களின் பார்வையிலிருந்து மறைந்து விட்டாலும் ஒரு சில இடங்களில் இன்னும் நினைவுச் சின்னமாகப் பாதுகாப்பதை பாராட்டியே ஆகவேண்டும். நான் மேலே குறிப்பிட்ட தெருவை ( எங்கே, அந்தப் பெயரை இன்னும் ஒருமுறை உச்சரியுங்கள் பார்ப்போம் ) அடைந்து சுவரைத் தேடி நடந்தோம். சுவரைக் காணவில்லை. தவறுதலாய் வேறு இடத்திற்கு வந்து விட்டோமா என்று ஐயுற்று, தெருப்பெயரைச் சரிபார்த்ததால், அந்தத் தெரு தான். அவ்வழி சென்ற ஒருவரைப் பார்த்து சுவர் எங்கே என்று விசாரித்தால் சற்றுத் தள்ளியிருந்த ஒரு குட்டிச் சுவரைக் காண்பித்தார். அருகில் சென்றபிறகுதான் அது குட்டிச் சுவரல்ல, வரலாற்றுச் சிறப்புமிக்க பெர்லின் சுவர் என்று தெரிந்தது. சுமார் இருநூறு மீட்டர் நீளம் மட்டும் தற்போது எஞ்சியுள்ளது.

எனது மேலாளராக மியூனிக்-கில் பணிபுரிந்தவர் எரிக் எனும் அமெரிக்கர். அவரது மனைவி ஜெர்மானியர். இருவரையும் நாங்கள் பெர்லினில் சந்தித்தோம்( தற்போது அங்குதான் பணிபுரிகிறார்). பெர்லின் சுவர் கண்டு வந்ததைப் பற்றி அவரிடம் சொன்னபோது 1989 -ல் சுவர் இடிப்பதற்கு சில நாட்கள் முன் அவர்கள் இருவரும் பெர்லின் சுவரைக் காண வந்ததை நினைவு கூர்ந்தார். ஏராளமான காவலாளிகள் இருபுறமும் வரிசை கோர்த்திருக்க, பெர்லின் சுவர் நகரை இரண்டாகப் பிரித்திருந்த காட்சிகள் இன்னும் நினைவில் ஓடுவதாய்க் குறிப்பிட்டார்கள். அவர்கள் வந்து சென்ற சில நாட்களில் சுவர் தரைமட்டமாகியதில் மகிழ்ச்சியடைந்ததாய்க் கூறினார்கள்

முந்தைய மேற்குப்பகுதியிலிருந்து தற்போது சுவரைப் பார்த்தால் அதன் முக்கியத்துவம் ஒன்றும் புலப்படவில்லை. மிகவும் சாதாரணமான சற்றுப் பாழடைந்த சுவர் என்று மட்டுமே எண்ணம் வரும். ஆனால் கிழக்குப் பகுதியிலிருந்து பார்க்கையில் மற்றுமொரு நினைவிடமும் சுவரை ஒட்டிக் காணப்பட்டது. பயங்கரவாதப் புவியமைவு (Topography of Terror) எனப்பெயரிடப்பட்டிருக்கும் இந்தக் கண்காட்சியின் நோக்கம் ஹிட்லர் காலத்து தீவிரவாதத்தை இன்றைய தலைமுறைக்கு உணர்த்தி இத்தகு போக்கை விட்டு அமைதிக்கும் சமாதானத்திற்கும் செல்லும் பாதையினைக் காட்டுவதற்குத்தான்.



1935-க்குப்பின் ஹிட்லர் ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் புகைப்படங்களாக இக்கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன. அப்பாவி மக்களை ஹிட்லரின் படையினர் ஈவிரக்கமின்றிச் சுடும் காட்சிகள் மனதை உலுக்கும். ஹிட்லரின் முதன்மைக் காவல் அதிகாரி ஹிம்லெரின் அலுவலகம் மற்றும் ஹிட்லரின் சோஷலிச அரசின் முக்கிய அலுவலகங்கள் இந்த இடத்தில் அமைந்திருந்ததாம்.அரசியல் எதிரிகளையும் யூதர்களையும் கொன்றுகுவிக்க திட்டங்கள் தீட்டப்பட்டதும் இங்குதான். இக்கட்டடங்கள் அனைத்தும் இரண்டாம் உலகப்போருக்குப்பின் மண்ணோடு மண்ணாயின. 1970-க்குப்பின் மறைந்த இச்சின்னங்களைப்பற்றிய விவரங்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு மக்களறியும் வண்ணம் அருங்காட்சியகங்களாகவும் , கண்காட்சிப் புகைப்படக் கூடமாகவும் மாற்றப்பட்டன. இந்நிகழ்வுகளைப்பற்றிய ஆய்வுகள் இன்றும் தொடர்கின்றன.

இது தவிர கிழக்குப்பக்க ஓவியக்காட்சி (East Side Gallery ) ஒன்றும் உண்டு. கிழக்கு பெர்லினின் பகுதியிலிருந்த சுமார் 1.3 கிலோமீட்டர் நீளச் சுவரில் உலகின் பல்வேறு பகுதியிலிருந்து வந்த ஓவியர்களால் சுவர்ச் சித்திரங்கள் தீட்டப்பட்டன.



வன்முறையையும் அடக்குமுறையையும் எதிர்த்துக்குரல் கொடுத்து அன்புக்கும் அமைதிக்கும் ஆதரவாக மௌனமொழி பேசுகின்றன இவ்வோவியங்கள். 1990-ல் தீட்டப்பட்ட இவை மீண்டும் பத்தாண்டுக்குப்பின் புதுப்பிக்கப்பட்டன.

செக் பாயிண்ட் சார்லி - கிழக்கு ஜெர்மனியிலிருந்து மேற்கு ஜெர்மனிக்குள் நுழைய அனுமதி பெறும் இடம். இங்கு சுவர் அருங்காட்சியகம் ஒன்று உள்ளது. சுவர் கட்டப்பட்ட பின்னும் அங்கிருந்து தப்பித்தவர்களைப்பற்றிய பல குறிப்புகளும் தப்ப உதவிய பொருட்களும் இங்கு வைக்கப்பட்டுள்ளன. சுமார் ஐயாயிரம் பேர் கிழக்கு ஜெர்மனி காவலாளிகளின் கண்களில் மண்தூவித் தப்பித்தனர். தப்பிய கதைகளையும் தப்புவதற்குதவிய பொருட்களையும் சேகரித்து அருங்காட்சியகமாக வைக்கும் வேலைகள் 1960-களின் இறுதியிலேயே ஆரம்பித்துவிட்டனவாம். அடுத்தபதிவில் அக்கதைகள்....