March 22, 2005

பின்லாந்து - 4

பின்லாந்து நாட்டின் தேசிய காவியம் "கலேவலா" பற்றி உங்களில் பலர் அறிந்திருக்கக் கூடும் . பின்னிஷ் மொழியிலிருந்து தமிழுக்கு ஆர். சிவலிங்கம் என்கிற உதணன் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்ட நூலையும் பலர் படித்திருக்கலாம். மதுரைத்திட்டத்தின் தொகுப்பில் இப்புத்தகம் இடம் பெற்றுள்ளது. எனினும், கலேவலா பற்றி ஒரு சிறிய அறிமுகம் தருகிறேன்: நீண்ட நெடுங்காலமாய் ஸ்வீடனின் ஆட்சிக்குட்பட்ட பகுதியாக பின்லாந்து இருந்து வந்தது. ஆட்சி மொழி ஸ்வீடிஷ்தான். மக்கள் விரும்பினால் பின்னிஷ் மொழியைப் படித்துக் கொள்ளலாம். பத்தொன்பதாம் நூற்றாண்டில் பின்லாந்து இரஷ்யா வசம் ஆனது. பின்னர் ஏற்பட்ட சுய விழிப்புணர்ச்சியினால் தங்களது மொழியின் வேர்களையும் பழைய வரலாறுகளையும் மீட்டு , தமது நாட்டின் தனித்தன்மையை மீண்டும் நிலைநாட்ட விரும்பினர். அதன் முயற்சியால் பின்லாந்தின் பழைய கதைகள், வரலாறுகள், நாடோடிப் பாடல்கள் பல தொகுக்கப் பட்டன. பின்லாந்தின் தூர கிழக்குப் பகுதியில் வாழ்ந்த பழங்குடி மக்கள் வெகு காலமாய் அந்த நாடோடிப் பாடல்களைப் பாடி வருவது அறிந்து அவற்றைத் தொகுத்துக் காவியமாக்க விருப்பம் கொண்டனர். அவ்வாறு தொகுத்தவர்களுள் எலியாஸ் லொன்ராத் (Elias Lönnrot) என்பவர் மிக முக்கியமானவர். அடிப்படையில் அவர் ஒரு மருத்துவர் எனினும் தாய்மொழியில் கொண்ட காதலால், மொழிப்பேராசியராகப் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்தார். பின்லாந்தின் வெகு பழமையான நாடோடிப்பாடல்களை எல்லாம் தொகுக்க எண்ணி பல இடங்களுக்கும் பயணம் செய்தார். அங்கு வாழ்ந்த கிராம மக்கள் பாடிய பாடல்களையெல்லாம் தொகுத்தார். இப்பாடல்களின் தொகுப்பு 1835-ல் வெளியானது. பின்லாந்துப் பள்ளிக்களில் பாடமானது இத்தொகுப்பு. பின்னர் மேலும் பல பாடல்களைத் தேடிச் சேகரித்த எலியஸ் விரிவான மற்றொரு தொகுப்பை வெளியிட்டார். பின்லாந்து நாட்டின் தேசிய காவியமாக இப்பாடல் தொகுப்பு அறிவிக்கப் பட்டு , கலேவலா நாள் (Kalevala Day) ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 28-ஆம் நாள் கொண்டாடப் பட்டு வருகிறது. "லார்ட் ஆப் த ரிங்ஸ்" எழுதிய ஜே. ஆர். ஆர். டால்க்கீன் - அவருக்கு மிகவும் பிடித்த தொகுப்பு கலேவலா. அவரது ஸில்மாரில்லியான் - எனும் புத்தகத்தில் கூட கலேவலாவின் கருத்துக்கள் சிலவற்றைக் காணலாம். இப்பாடல்களுக்கு இசை வடிவம் கொடுத்தவர் சிபிலியஸ்(Sibelius) எனும் இசைமேதை. கலேவலா காவியத்தின் பல பாடல்களுக்கு ஓவிய வடிவம் கொடுத்தவர் அக்ஸெலி காலன் கலேலா (Akseli Gallen-Kallela) எனும் புகழ் பெற்ற ஓவியர்.

நிற்க, எங்களது பின்லாந்துப் பயணத்தின் அடுத்த நாள்- அக்ஸெலி காலன் கலேலா வசித்த, தற்போது ஒரு அருங்காட்சியகமாகப் பாதுகாக்கப்படும் வீட்டிற்குச் சென்று வரப் புறப்பட்டோம். ஹெல்ஸின்கியின் மேற்கு எல்லையில் அமைந்திருக்கும் சிறிய நகரான எஸ்பூ (Espoo) விற்கும் ஹெல்ஸின்கிக்கும் நடுவே தர்வஸ்பா (Tarvaspaa) எனும் இடத்தில் அக்ஸெலி வசித்த வீடு அமைந்திருக்கிறது. ட்ராம் வண்டியொன்றில் ஏறிப் பயணித்தோம். ட்ராம் வண்டியின் கடைசி நிறுத்தத்தில் இறங்கினால் அருங்காட்சியகம் செல்லும் வழியை அம்புக்குறியினால் தெரிவித்து இன்னும் 2.6 கிலோமீட்டர் தொலைவு என அறிவித்திருந்தார்கள். நடக்க ஆரம்பித்த சிறிது நேரத்தில் அடர்ந்த காடு எதிர்ப்பட்டது. காட்டிற்கருகே , அதனை ஒட்டிய வண்ணம் சலசலத்துக் கொண்டிருந்தது கடல். லாயலஹ்தி விரிகுடா என்றதற்குப்பெயர். சில இடங்களில் கடற்கரை மணல் வெளியும் தென்பட்டது. நாங்கள் சென்ற பாதை மேடு பள்ளமாய் அமைந்திருந்தது. காலை நேரத்தில் சைக்கிளிலும், நடந்தும் உடற்பயிற்சி செய்பவர்களுக்கு ஏற்ற இடம். வழி நெடுக நடையோட்டம் செய்து கொண்டிருந்தவர்கள் எங்களைக் கடந்து சென்றனர். ஓரிடத்தில் கடல் மிகக் குறுகலாய் இருக்க அதன் மீது ஒரு மரப்பாலம் . நாங்கள் வந்த பாதை சரியானது தானா என எதிர்ப்பட்ட ஒருவரிடம் விசாரிக்க , அவர் பாலத்தைக் கடந்து மறுபுறம் செல்லும்படி கூறினார். பாலத்தைக் கடந்தவுடன் சற்று விசாலமான சாலைகள். வளைந்து நெளிந்து உயர்ந்து சென்றது. சாலைகளின் இருமருங்கும் பசுமரங்கள் (Spur) ஓங்கி உயர்ந்து நிழல் சேர்த்தன. ஜூலை மாத காலை வெய்யில் சுள்ளென்று சுட்டது. தொடர்ந்த சாலையில் விலகிச் சென்ற ஒரு சரிவான பாதை. இயற்கையோடு இயைந்து வாழ நினைத்தே ஓவியர் அக்ஸெலி இவ்விடத்தைத் தேர்ந்தெடுத்து வாழ்ந்திருக்க வேண்டும். இறுதியாய் ஒரு சிறிய வீடு - சிறிய கோட்டை போன்ற அல்லது சிம்னி போன்ற உச்சியைக் கொண்ட வீடு எங்கள் முன் தென்பட்டு , இது தான் நீங்கள் தேடி வந்த காட்சியகம் என்றது.



இவ்வளவு தூரம் கடந்து நாங்கள் இந்த அருங்காட்சியகத்திற்கு வந்தது அருங்காட்சியக் ஊழியர்களுக்கு வியப்பை அளித்திருக்கக் கூடும், ஆச்சரியத்துடன் வரவேற்றார்கள். நுழைவுக்கட்டணம் செலுத்தி வீட்டினுள் நுழைந்தோம். அக்ஸெலியின் வீடு மற்றும் ஓவிய அறையாக-, இரு பயன்பாடுகட்கும் இவ்விடம் பயன்பட்டிருக்கிறது. அருங்காட்சியகத்தைச் சுற்றுப்பார்க்கும் முன் அக்ஸெலி காலன் கலெலாவின் வாழ்க்கையச் சிறிது விரைவாகப் புரட்டிப்பார்க்கலாமா?



1865 -ல் பிறந்த இவர் இளவயதில் ஓவியம் மற்றும் பின்னிஷ் நுண்கலைகள் பற்றிய படிப்பைத் தேர்ந்தெடுத்துக் கற்றிருக்கிறார். பின்னர் பாரிஸ் சென்று அங்கும் ஓவியம் படித்திருக்கிறார். 1890-ல் திருமணம். பின்னர் பெர்லினில் நடந்த ஓவியக் கண்காட்சியில் இவரது படைப்புக்கள் பிரசித்தி பெற்றனவாம். 1900 முதல் கலேவலாவின் கதைக்காட்சிகளை ஓவியங்களாய்த் தீட்ட ஆரம்பித்திருக்கிறார். ஹங்கேரி, பிரான்ஸ், ஜெர்மனி, கென்யா போன்ற நாடுகளுக்குப் பயணித்து ஓவியக் கண்காட்சிகள் நடத்தியிருக்கிறார். புதிய பல ஓவிய நுட்பங்களையும் கற்றிருக்கிறார். 1911-ல் இந்த வீடு கட்டப்பட்டது. பின்னர் 1920 -ல் வெளிவந்த கலேவலா- புத்தகத்தை இவரது ஓவியங்கள் அலங்கரித்தன. அமெரிக்காவிற்கு இருமுறை பயணம் செய்து வந்திருக்கிறார். அமெரிக்கக் கலை, கலச்சாரம் பற்றிக் கற்றுத் திரும்பியிருக்கிறார், கலேவலா தவிர பிற ஓவியங்களும் சிற்பங்களும் அமைத்திருக்கிறார். 1931-ல் கோபன் ஹேகன் சென்று திரும்புகையில் உடல்நிலை சீர்கெட்டு ஸ்டாக்ஹோமில் மரணமடைந்தார்.



அருங்காட்சியகத்துள் நுழைந்ததும் முதல் அறை அவர் ஓவிய அறை. சுற்றிலும் பல்வேறு ஓவியங்கள். அவரது உருவத்தை அவரே வரைந்த ஒரு படமும் உண்டு. அவரது மனைவியைய் மற்றும் தாயின் உருவங்களையும் வரைந்திருக்கிறார். வரையப் பயன்படுத்திய அச்சு ஒன்று, லண்டனில் இருந்து தருவித்தது - இன்னும் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது. இது தவிர, அக்ஸெலி ஓவியம் வரையப் பயன்படுத்திய பொருட்கள் பலவும் காணக் கிடைக்கின்றன. ஓவியம் வரையும் சாய்பலகையும் இருந்தது. அந்த அறையைக் கடந்து அடுத்த அறையினுள் கலேவலாக் கதை ஓவியங்கள் ஒன்றிரண்டு தென்பட்டன. கலேவலாக் கதையின் நாயகனான வைனாமொயினன் படகிலேறி வடக்கு நோக்கிச் சென்றதைச் சித்தரிக்கும் ஒரு ஓவியம் இருந்தது.



பின்னர் சுழல் படிகள் ஏறி மாடி அறைக்குச் சென்றால் படிகளை ஒட்டிய ஒரு அறை- குளியல் அறை. அமெரிக்கா சென்று திரும்பியதும் அங்கிருந்த குளியல் அறைகளைப் போல மாற்றி அமைத்துக் கட்டியதாம் இது. உச்சியில் அவரது படிப்பறை. அந்த அறையில் ஜன்னல் வழியே வெளியே பார்த்தால் அவ்விடத்தின் இயற்கை அத்தனையும் கண்ணுக்குள் விரிகிறது. அறையினுள் அக்ஸெலி படித்த புத்தகங்கள் சிலவும் அவர் விளையாடப் பயன்படுத்திய பழைய டென்னிஸ் மட்டைகளும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இன்னொரு குட்டி அறை. அதிலும் பல ஓவியங்கள். பின்னிஷ் மொழியில் கலேவலாப் பாடல் வரிகள் எழுதப் பட்டிருக்க அவ்வரிகள் ஓவியமாக்கப்பட்டிருந்தன.



அக்ஸெலி பற்றிய புத்தகங்களும் ஓவியக் குறிப்புகள் பற்றிய புத்தகங்களும் நிறைய இருந்தன. ஆனால் அனைத்தும் பின்னிஷ் மொழியில் இருந்தன. அங்கிருந்த உதவியாளரிடம், கலேவலா ஓவியங்கள் இங்கு குறைவாக இருப்பதைக் குறிப்பிட்டோம். ஹெல்ஸின்கி நகரின் மத்தியில் இருக்கும் அட்டெனியம் எனும் கண்காட்சியகத்தில் நிறைய இருப்பதாய்க் கூறினார்.

March 14, 2005

பின்லாந்து - 3

தீவுக்கூட்டங்களைச் சுற்றி முடித்துவிட்டு மீண்டும் ஹெல்ஸின்கி செல்லும் படகுக்காய்க் காத்துக்கொண்டிருக்கையில் ஒரு வயதான பாட்டி எங்களுடன் பேச்சுக் கொடுத்தார். "இந்தியாவிலிருந்து எங்கள் நாட்டைப் பார்ப்பதற்கா இத்தனை தூரம் வந்தீர்கள்" என்று ஆச்சரியம் பொங்கக் கேட்டார். நாங்கள் ஸ்வீடனில் வசிப்பதாய் மறுமொழி சொன்னோம். ஸ்வீடனில் என்ன செய்கிறீர்கள் , எங்கு பணிபுரிகிறீர்கள் என்றெல்லாம் கேட்டுக் கொண்டு வந்தார். ஸோனி எரிக்ஸனில் பணி புரிவதாய்க் கூறியவுடன் " அப்படியானால் நீங்கள் எங்களது போட்டியாளர்கள்" (செல்பேசி தயாரிப்பில் முதலிடம் வகிக்கும் நோக்கியா பின்லாந்து நாட்டில் பிறந்த நிறுவனம்) என்று விளையாட்டாய்க் கூறிச் சிரித்தார்.

ஹெல்ஸின்கி நகர் அடைந்து பேருந்து நிலையம் தேடி நடந்து சென்றோம். மார்க்கெட் சதுக்கத்திலிருந்து நேராகச் செல்லும் முக்கிய வீதியில் வழியெங்கும் பச்சை மரங்களும் சிலைகளும் கடந்து செல்ல நடந்து கொண்டிருந்தோம். ஒரு சிறிய மேடை அமைக்கப்பட்டு பின்லாந்திய இசை நிகழ்ச்சி ஒன்றை வழியில் கண்டோம். தொடர்ந்து செல்கையில் ஒரு பெண் நாய், பூனை முதலியவை கொண்டு சிறு சிறு வித்தைகள் காட்டி, கூடிய கூட்டத்தினை மகிழ்வித்துக்க் கொண்டிருந்தாள்.



பேருந்து நிலையம் அடைந்து பொர்வூ (Porvoo) எனும் சிற்றூர் செல்லும் பேருந்தில் அமர்ந்தோம். சுமார் ஒரு மணி நேரப் பயணம். கடல் வழியாகவும் பொர்வூ செல்லலாம் . ஆனால் பயண நேரம் அதிகமாகும். பொர்வூ -வில் நிறைய மர வீடுகள் உண்டு. இவற்றைப் பார்த்து வரவே இந்தப் பேருந்துப் பயணம். வழி எங்கும் கோடைக்கால பசுமை இனிமை சேர்த்தது. ஆனால் பொர்வூ-வை நெருங்குகையில் மேகங்கள் கூடி மழை பொழிந்துவிடப் போவதாய் மிரட்டின.

மேடு பள்ளமான நிலப்பகுதியில் அமைந்த ஊர் இது. சரிவுகளில் வரிசையாய் வீடுகள்; பெரும்பான்மையான வீடுகள் மர வீடுகளே. ஊரின் தென்பகுதியில் ஓடும் ஒரு ஆறு. ஊரின் பெயரே ஆற்றின் பெயர். பொர்வூ ஆறு என்றே அழைக்கிறார்கள். ஆற்றினைக் கடக்க அமைந்த வளைவுப் பாலங்கள் அழகாயிருந்தன. ஆற்றின் வழியெங்கும் இளைப்பாறிக் கொண்டிருந்தன பலவகைப்பட்ட இயந்திரப் படகுகள்.



தொலைவில் மரங்களர்ந்த ஒரு வனப் பகுதி. ஆற்றின் கரையோரத்திலும் நிறைய மரவீடுகள் , வரிசையாய், சின்னச் சின்னதாய் அமைந்திருக்கின்றன. ஆற்றங்கரையில் நடந்து கொண்டிருக்கையில் மழை பெய்ய ஆரம்பித்தது. அருகிருந்த மரத்தினடியில் ஒதுங்கிச் சிறிது நனைந்து மழையை ரசித்தோம். சற்று நேரத்தில் மழை தூறலாக மாறவே தொடர்ந்து நடந்து சென்றோம். குறுகலான வளைவான உயர்ந்து இறங்கும் சாலைகள்; சாலைகளின் இருபுறமும் முற்றிலும் மரத்திலேயே அமைந்த வீடுகள் என வித்தியாசமான ஊர்தான். மேடான இடத்தில் அமைந்த ஒரு தேவாலயம் எதிர்ப்பட்டது. ஒரு திருமணம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.



தொடர்ந்த தாழ்வான வீதிகளில் இறங்கி, மீண்டும் பேருந்து நிலையம் அடைந்து ஹெல்ஸின்கி திரும்பினோம். பொர்வூவில் பெய்த மழை இங்கில்லை. வானமும் தெளிவாக இருந்தது. வெய்யிலும் சுள்ளென்று சுட்டது. ஹெல்ஸின்கிக்கு அருகிலுள்ள தீவுக்கூட்டங்களைப் படகிலிருந்து பார்த்துக்கொண்டே செல்லும் ஒரு படகுச் சுற்றுலா தயாராய் இருக்கவே படகிலேறி அமர்ந்தோம்.



படத்தில் குறிக்கப்பட்டுள்ள பாதையில் பயணம் அமைந்திருந்தது. படகில் அமைக்கப்பட்டிருந்த ஒலிபெருக்கிகள் ஆங்கிலம், ஸ்வீடிஷ், பின்னிஷ் மற்றும் ஜெர்மனிய மொழிகளில் கடந்து சென்ற இடங்களைப் பற்றிய வர்ணனை வழங்கின. " இடது புறம் நீங்கள் காண்பது, வலது புறத்தில் நீங்கள் காண்பது" என்று சொல்லச் சொல்ல படகில் பயணம் செய்த அனைவரும் வலப்புறமும் இடப்புறமும் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே வந்தோம்.

முதலில் எதிர்ப்பட்டது நாங்கள் ஏற்கனவே பார்த்த சௌமன்லின்னா தீவுக் கூட்டங்கள். அதனைக் கடந்து சென்றால் இன்னொரு தீவு, அதன் பெயர் சான்டாஹமினா(Santahamina). ராணுவ அருங்காட்சியகமும் விலங்குகள் சரணாலயமும் இங்கிருப்பதாய்க் கூறினார்கள். சிறு சிறு தீவுகள் தொடர்ந்து எதிர்ப்பட கடல் சில இடங்களில் குறுகி , தீவுக்கு வழி விடுகிறது. இரண்டு தீவுப்பகுதிகளை இணைக்க ஓரிடத்தில் நகரும் இரும்புப்பாலம் ஒன்றிருக்கிறது. படகுகள் செல்கையில் இப்பாலம் நகர்ந்து வழி விடுகிறது.



படகுகள் கடந்தவுடன் மீண்டும் மூடிக்கொண்டு தீவுகளை இணைக்கிறது. வலப்புறம் காணப்பட்ட அடுத்த பெரிய தீவு லாயசலோ (Laajasalo) . உயர்ந்த பல கட்டிடங்களும் , மரங்களும் தென்பட்டன. கடற்கரை மணல்வெளி சூரியக் குளியலுக்கு ஏற்றது.
வளைந்து நெளிந்த , குறுகலான பாதைகளில் படகு பயணித்துத் திரும்பியது. திரும்பும் வழியில் பெரிய பெரிய கப்பல்கள் நின்று கொண்டிருந்தன.



பனி உடைக்கும் கப்பல்களாம் இவை. குளிர்காலத்தில் வெப்பநிலை உறைநிலைக்குக் கீழ் பல பாகை செல்ஸியஸ் குறைந்து விடுவதால் கடல்நீர் இறுகி உறைந்து விடுகிறது. உறைந்த பனிக் கட்டிகளை உடைத்துக் கப்பல் பயணம் மேற்கொள்ளும் பணியினை இக்கப்பல்கள் நிகழ்த்துகின்றன. பல மீட்டர் ஆழம் சென்று பனியினை உடைத்து வழி செய்யும் ஆற்றல் மிக்கவையாம் இந்தக் கப்பல்கள்.
சற்று நேரத்தில் படகு , பயணம் தொடங்கிய மார்க்கெட் சதுக்கத்தை அடைந்து நின்றது. இரவு பத்து மணியான பின்னும் சிறிது சூரிய வெளிச்சம் மிச்சமிருந்தது. முக்கிய வீதியிலிருந்த "நமஸ்கார்" எனும் இந்திய உணவகத்தில் இரவு உணவு உண்டு விடுதி திரும்பினோம்.

அடுத்த பதிவிலும் பின்லாந்து தொடர்கிறது.

March 10, 2005

பின்லாந்து - 2

சௌமன்லின்னா தீவுக்கூட்டத்திற்குச் செல்ல படகுப்போக்குவரவு உண்டு. படகு ஒன்றில் ஏறிக்கொண்டு பயணம் செய்தோம். நாடு விட்டு நாடு செல்லும் பெரிய பெரிய ஏழடுக்குக் கப்பல்களைக் கடந்து சென்றோம். ஐந்து தீவுகள் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டிருப்பது போல் தோற்றம் கொண்டது இது. பின்லாந்தின் நுழைவாயில் போல் அமைந்திருக்கிறது.



பின்லாந்து நீண்ட காலமாய் ஸ்வீடனின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தாலும் பதினெட்டாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ரஷ்யாவின் எழுச்சி ஸ்வீடனுக்கு ஒரு பயமுறுத்தலாய் அமைந்தது. அப்போதைய ஸ்வீடன் மன்னர் பின்லாந்தின் மீது ரஷ்யா படையெடுத்து வந்தால் அதனைத் தடுத்துப் பதிலடி கொடுக்கும் வண்ணம் கடற்கோட்டைகள் கட்டத் திட்டமிட்டார். பின்லாந்திற்கு நுழைவாயில் போல் அமைந்த இத்தீவுக்கூட்டத்தில் கோட்டை அமைக்க முடிவானது. ஸ்வீடனின் இத்திட்டத்துக்கு பிரான்ஸ் நிதி உதவி அளித்ததாம்.



கி.பி 1748 ல் கட்ட ஆரம்பிக்கப்பட்ட இந்த அரண்கள் சுமார் நாற்பது ஆண்டு காலமாய்க் கட்டப்பட்டன. எதிர்பார்த்தது போலவே ரஷ்யக் கப்பற்படைகள் 1808 ல் இந்த அரண்களை நோக்கி அணிவகுத்தன. அதிக எதிர்ப்பு இல்லாமலேயே ரஷ்யப்படைகளுக்கு சௌமன்லின்னா கோட்டை அடிபணிந்தது. பின்லாந்தில் ஸ்வீடனின் ஆதிக்கமும் முடிவுக்கு வந்தது. பின்னர் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் ஒரு நூற்றாண்டு காலம் இருந்த இக்கோட்டையும் பின்லாந்தும் 1917-ல் ரஷ்யாவிடமிருந்து விடுதலை பெற்றதாம். பிரிட்டிஷ் படைகளால் 1855-ஆம் ஆண்டில் இந்தக் கோட்டைகள் ஒரு முறை தாக்குதலுக்கு உள்ளாயின. சுதந்திரம் பெற்ற இரு வருடங்களுக்கு பின்லாந்தில் உள்நாட்டுக் குழப்பங்களும் கலகங்களும் நடைபெற்றனவாம். அப்போது சிறைப்படுத்தப்பட்ட பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் இந்தக் கோட்டையின் சிறைச் சாலைகளுக்குள் அடைக்கப்பட்டனர்.



படகிலிருந்து இறங்கியவுடன் தகவல் மையத்திற்குச் சென்றோம். தகவல் மையத்தை ஒட்டி ஒரு ஒலி-ஒளிக் காட்சியகமும் அருங்காட்சியகமும் அமைந்திருந்தன. நாங்கள் அங்கே சென்ற நேரத்தில் ஒரு ஒளி-ஒலிக் காட்சி இருந்ததால் அந்தத் திரை அரங்கினுள் அனுமதிச் சீட்டு பெற்றுச் சென்றோம். ஒவ்வொரு இருக்கையிலும் ஒரு ஒலிப்பான் (Head phone) . நமக்குத் தெரிந்த மொழியைத் தெரிவு செய்துகொள்ள விசைகளும் இருந்தன. ஆங்கிலத்தைத் தெரிவு செய்து இருக்கையில் அமர்ந்தோம். எதிரே தெரிந்த திரையில் சில அசையாப் படங்களாகவும் சில அசையும் படங்களாகவும் ஓட அதற்கேற்றாற்போல் வருணனை காதினில் விழுந்தது. கோட்டை கட்ட ஆரம்பித்த வரலாறு முதல் தொடங்கியது. காட்சிகளை விளக்கும் ஓவியங்களும் திரையில் காண்பிக்கப்பட்டன. ரஷ்யப்படைகள் கோட்டையைச் சூழ்ந்து பீரங்கிகளால் தாக்குதல் நடத்தினர் என்ற வருணனையின் போது பீரங்கிகள் எழுப்பும் சத்தத்தை அரங்கினுள் அமைக்கப்பட்டிருந்த பெரிய ஒலி பெருக்கிகள் எழுப்பி,வெடி வெடித்த உணர்வினை உண்டாக்கின. மரத்தினால் அமைக்கப்பட்ட அத்திரை அரங்கு அதிர்ந்தது.

தொடர்ந்த திரைப்படத்தில் பின்லாந்தின் அன்றைய வரலாற்று நிகழ்வுகளும் கோட்டையில் ரஷ்ய நாட்டினர் அமைத்த தேவலாயம் , உள்நாட்டுக் கலவரத்தின் விளைவுகள் அனைத்தும் சுருக்கமாய் விவரிக்கப்பட்டது. திரையரங்கத்தின் மேல்தளத்திலமைந்த காட்சியகத்தில் சிறைச்சாலைகளில் கைதிகள் பட்ட அவஸ்தைகள், பட்டினி,நோய்கள், சாவுகள் போன்றவற்றைச் சித்தரிக்கும் புகைப்படங்களும் குறிப்புகளும் காணப்பட்டன.



பின்னர் தீவுகளைச் சுற்றி வரப்புறப்பட்டோம். மேடு பள்ளமான பாதைகள் , அகண்ட உயரமான கோட்டைச் சுவர்கள் வரவேற்றன. கோட்டைச் சுவர்களுள் செல்லும் இருண்ட சுரங்கப்பாதைகள் , மெல்லிய விளக்கொளியில் வெகுதூரம் பயணம் செய்தன. இருண்ட பாதைகளுக்குள் பின்லாந்தின் குளிர்கால நடுங்கு குளிர் இன்னும் மிச்சமிருந்தது. சிறிய , உயர்ந்த குன்றுகளில் ஏற சுற்றிலும் விரிகிறது கடல். கோடைக்காலத்தைக் கொண்டாடும் வகையில் பச்சைப்பசேல் எனப் புல்வெளிகளும் வெண்ணிறத்தில் மலர்ந்த பூக்களும் சிரிக்கின்றன. ஓரிடத்தில் கப்பல்கள் வந்து நிற்க ஆழப்படுத்தப்பட்ட செயற்கைத் துறைமுகப்பகுதியும், கப்பல் கட்டும் இடமும் இருந்தன. பழைய கப்பல் ஒன்றும் தென்பட்டது.போர்களுக்குப் பயன்படுத்திய பீரங்கிகள் ஆங்காங்கே பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. கடலை ஒட்டிய சிறிய கடற்கரையில் சிலர் உற்சாகமாய் சூரியக்குளியல் எடுத்துக் கொண்டிருந்தனர். கண்ணுக்கெட்டிய தூரம் வரை விரிந்து பரந்த கடலில் நகரும் குடிசைகளாய்க் கப்பல்கள் துறைமுகம் நோக்கிச் சென்று கொண்டிருந்தன. முகத்தில் வண்ணம் பூசி ,வண்ண உடையணிந்த ஒரு குழு நாடகமொன்றை நடத்திப் பாட்டுகள் பாடி ஆடிக்கொண்டிருந்தது.



இந்தக்கோட்டை கட்டி இருநூற்றைப்பது ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி சிறப்புக் கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டன. யுனஸ்கோ, இக்கோட்டைகளைப் பாரம்பரிய உலக கலாச்சாரச் சின்னமாகவும் அறிவித்தது.