ஹாலந்து அனுபவம்
இந்தப் பதிவில் ஹாலந்து நாட்டில் சுற்றிப்பார்த்த அனுபவங்களைப் பற்றி நான் கூறப்போவதில்லை. ஆம்ஸ்டர்டாம் நகரில் அமைந்துள்ள ஒரு முப்பரிமாணத் திரையரங்கில் நடைபெறும் ஹாலந்து அனுபவம் (Holland Experience) என்ற முப்பரிமாணக் காட்சி (3D) பற்றியே இப்பதிவு.
ஆம்ஸ்டர்டாம் நகரில் கண்களுக்கு விருந்தளிக்கும் பல்வேறு இடங்கள் இருப்பினும் இந்த முப்பரிமாணக்காட்சி என்னை மிகவும் கவர்ந்தது. முப்பதே நிமிடங்கள் நடைபெறும் இந்தக் காட்சிக்கு அனுமதி பெற்று திரையரங்கில் சென்று அமர்ந்தீர்களேயானால் ஒரு வித்தியாசமான அனுபவம் உறுதி. ஆம்ஸ்டர்டாம் நகரின் மையத்தில் அமைந்துள்ள திறந்தவெளிச் சந்தைக்கு அருகில் அமைந்துள்ளது இந்தத் திரை அரங்கம்.
அரங்கினுள் நுழைந்தவுடன், வழக்கம் போல் முப்பரிமாணக்காட்சி காண உதவும் கண்ணாடியினை வழங்கினர். அரங்கின் இருக்கைகள் விமானத்தின் இருக்கைகள் போல் வடிவமைக்கப்பட்டிருந்தன.வசதியாக இருக்கையிலமர்ந்து கண்ணாடியை அணிந்து கொண்டவுடன் சிறிது நேரத்தில் இருள் கவிழ்ந்து திரை ஒளிர்ந்தது. விமானம் ஒன்றைத் திரையில் காட்டினார்கள். விமானத்தின் உறுமல் சத்தம் நாம் உணரும் வண்ணம் அரங்கத்தின் அதிர்வுகள் எழுப்பப்பட்டன. விமானத்தில் அமர்ந்தது போல் உணர்ந்தோம்.விமானி எழுப்பும் அறிவிப்பு அடுத்ததாய்க் கேட்டது. "பயணிகளே, இன்னும் சிறிது நேரத்தில் நாம் ஆம்ஸ்டர்டாம் நகரினை அடைய இருக்கிறோம். உங்களது ஹாலந்துப் பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள்" என ஒலிபெருக்கிக் குரல் சொல்லியது. விமானம் தரையைத் தொட்டதும் எழுப்பும் அதிர்வை அரங்கினுள் உணர்ந்தோம். விமானம் ஓடுபாதையில் ஓடி, வேகம் குறைந்து நின்றதும், அரங்கமும் நிறுத்த நிலைக்கு வந்தது. அது ஒரு நகரும் திரையரங்கு. இடப்புறமோ, வலப்புறமோ , முன்னோ , பின்னோ திருப்பும் வண்ணம் அமைந்த நகர் அரங்கு.
ஹாலந்து நாட்டின் எல்லாப் பகுதிகளையும் ஏறக்குறைய முப்பது நிமிடங்களில் சுற்றிக்காட்டினார்கள் என்றே சொல்லலாம். ஆம்ஸ்டர்டாம் நகரின் கால்வாய்களில் படகு சவாரி செய்வது போல் திரையில் காட்சிகள் தெரிய படகில் செல்வது போல் உணர்ந்தோம். கால்வாய்களைக் கடக்க அமைக்கப்பட்டிருந்த எண்ணற்ற வளைவுப் பாலங்களைப் படகு கடந்து செல்கிறது. படகு திரும்பி வளைந்து செல்கையில் அரங்கமும் சற்று வளைந்து கொடுத்து படகில் திரும்பிய உணர்வினை அளித்தது. ஹாலந்து நாட்டின் அரச பரம்பரையின் அரசி நம்மை நோக்கிக் கையசைக்கிறார். வண்ண உடை அணிந்த சின்னஞ்சிறு குழந்தைகள் நம்மைப் பார்த்துச் சிரிக்கின்றன. கால்பந்து மைதானத்தில் சிறார்கள் விளையாடிக்கொண்டிருக்கின்றார்கள். சிறுவன் உதைத்த பந்து திரையை விட்டு வெளியில் வந்து நம் மீது மோதுகிறது. ரோட்டர்டாம் நகரின் துறைமுகங்களில் கப்பல் போக்குவரவு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அங்கே பறக்கும் பறவை விர்ரென்று அரங்கத்தில் புகுந்து ஒலியெழுப்பிச் செல்கிறது.
ஆம்ஸ்டர்டாம் நகரின் சுற்றுலாச் சின்னங்கள் திரையில் தெரிகின்றன. புகழ் பெற்ற ரிக்ஸ் அருங்காட்சியகம், ஹாலந்து நாட்டின் எங்கு சென்றாலும் நீக்கமற நிரைந்திருக்கும் காற்றாலைகள் (Wind mills), புகழ் பெற்ற பீங்கான் காலணிகள் என்று வரிசையாகக் காட்சிகள் விரிந்தன. உலகப் புகழ் பெற்ற டூலிப் தோட்டம் அமைந்துள்ள கியீக்னாஃப்-க்குள்(Keukenhof) அடுத்து நுழைந்தோம். வண்ண வண்ண டூலிப் மலர்கள் திரையில் தெரிகையில் அரங்கினுள்ளும் மலர்களின் சுகந்த வாசம் வீசியது. மலர்களின் நடுவே நடந்த உணர்வு. பயணம் மதுரடாமிற்குத் தொடர்ந்தது. ஹாலந்து நாட்டின் நினைவுச் சின்னங்கள் எல்லாவற்றினையும் ஒரே இடத்தில் சிற்றளவாக்கம் செய்து (Miniature) வைத்திருக்கிறார்கள். மதுராடாம் (Maduradam) என்று அந்த இடத்துக்குப் பெயர். உலகப் பிரச்சினைகளை விசாரிக்கும் நீதிமன்றம் அமைந்துள்ள தி ஹேக் (The Hague) நகரில் தான் இந்த மதுராடாம் அமைந்திருக்கிறது.
திடீரெனறு கிராமப்புறம் நோக்கி ஒரு வண்டியில் ஏறிப் பயணம் செய்து கொண்டிருக்கிறோம். பசுமையான புல்வெளிகளும் தோட்டங்களும் கண்ணில் விரிகின்றன. அருவி ஒன்றில் நீர் வழிந்து கொண்டிருக்க , தட தடவென்று ஒரு பெண் நடுவில் ஓடுகிறாள். அருவி வழிவதையும் , பெண் ஓடுவதையும் நிஜமாகவே அமைத்திருந்தார்கள். திரையில் தெரிந்த பிம்பமல்ல அது.
முப்பது நிமிடங்கள் நொடியில் பறந்து விட்டன. முப்பது நிமிடத்திற்குள் ஹாலந்து நாடு முழுமைக்கும் ஒரு குற்றுலா சென்று வந்த உணர்வு. ஹாலந்து முழுவதும் சுற்றிப்பார்க்கு முன் இந்தக் காட்சியைப் பார்த்து விட்டுப் பின்னர் பயணம் செய்ய வேண்டிய இடங்களை முடிவு செய்யலாம். அல்லது சுற்றிப்பார்க்க நேரமில்லாதவர்கள் இந்தக் காட்சியை மட்டுமாவது கண்டு செல்லலாம். "ஹாலந்து அனுபவம்" தவிர, பிற முப்பரிமாணத் திரைப்படங்களும் விவரணப்படங்களும் இந்த அரங்கில் வழக்கமாக நடைபெறுகிறது.
படங்கள் உதவி: http://www.holland-experience.nl/