ப்ரஸ்ஸல்ஸ் - சிறுவனின் சிறுநீர்
பெல்ஜியத்தின் தலைநகரம் ப்ரஸ்ஸல்ஸ் (Brussles). ஐரோப்பியக் கூட்டமைப்பின்(European Union) தலைநகரமும் இதுதான். இந்த நகரத்தில் உள்ள சின்னஞ்சிறு சிலையே "மான்னிகென் பிஸ்"( Manneken Piss) , ஆனால் சுற்றுலாப்பயணிகள் அனைவரையும் வசீகரிக்கும் சிலை. ஒரு சிறுவன் சிறுநீர் கழிப்பது போல் அமைந்த சிறிய வெண்கலச் சிலை. அச்சிறுவன் மேடையிலிருந்து கீழிருக்கும் கற்தொட்டியில் சிறுநீர் கழித்துக் கொண்டே இருக்கிறான்.

ப்ரஸ்ஸல்ஸ் நகரின் புகழ்பெற்ற அரண்மனைகள் சூழ்ந்துள்ள பகுதி The Grand Place . நடுவில் ஒரு பெரிய திறந்த வெளி , அதைச் சுற்றிலும் மூன்று புறமும் உயர்ந்த மாளிகைகள். அதனைக் கடந்து சுமார் நூறு மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது மான்னிகென் பிஸ். "Manneken Piss " என்றால் சிறுவனின் சிறுநீர் என்று பொருள்.இந்தச் சிலை எதற்காக இங்கு வைக்கப்பட்டுள்ளது என்பதைப்பற்றிப் பல கதைகள் கூறப்படுகின்றன.
பதினான்காம் நூற்றாண்டு முதல் இச்சிலை இதே இடத்தில் அமைக்கப்பட்டிருந்தது என்று செய்திகள் தெரிவித்தாலும் பதினாறாம் நூற்றாண்டு முதலே இச்சிலை பற்றிய குறிப்புகள் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
செல்வந்தர் ஒருவர் தனது மகனைக் காணாமல் தேடி அலைந்தாராம். அந்த ஐந்து வயதுச்சிறுவன் தொலைந்த ஐந்து நாட்கள் கழித்து ஓரிடத்தில் சிறுநீர் கழித்துக் கொண்டிருக்கையில் கண்டுபிடித்தாராம். அந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் வகையில் அந்த இடத்தில் சிலை அமைத்தார் என்பது ஒரு கதை.
எதிர்பாராத விதமாய் எப்படியோ அந்தக் குறிப்பிட்ட இடத்தில் தீப்பற்றிக் கொள்ள அவ்வழி சென்ற ஒரு சிறுவன் சிறுநீர் கழித்து அத்தீயை அணைத்தானாம். தீயை எரிய விட்டிருந்தால் தீ பரவி நகர் முழுதும் சாம்பல் ஆகியிருக்குமாம். தீ விபத்திலிருந்து நகரைக் காப்பாற்றிய அச்சிறுவன் நினைவாய் அச்சிலை அமைக்கப்பட்டது என்பது மற்றொரு கதை. பெரும்பாலானவர்கள் நம்பும் கதையும் இதுதான்.
தெருவில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த ஏழைச் சிறுவன் ஒருவன் , உணவு கேட்க எண்ணி ஒரு மந்திரவாதிக்கிழவனின் வீட்டுக்கதவைத் தட்டினான். கோபங்கொண்டு வெளியே வந்த கிழவன் , எல்லா நேரமும் சிறுநீர் கழித்துக்கொண்டே இருக்க அச்சிறுவனைச் சபித்தானாம். அதன் காரணமாய் அமைந்த நிகழ்வென்பது இன்னுமொரு கதை.

பதினாறாம் நூற்றாண்டில் ஜெரோமி துகொஸ்னொய் (Jérôme Duquesnoy) எனும் சிற்பி வடித்த இச்சிலை வெகு நாட்களுக்குப் பாதுகாப்பாய் இருந்தது. கி.பி 1695-ல் பிரெஞ்சுக் காரர்கள் தாக்கிய போது இச்சிலையை பொதுமக்கள் பத்திரப்படுத்தி வைத்திருந்தனராம். பதினெட்டாம் நூற்றாண்டின் மத்தியில் ஆங்கிலேயர்களால் எடுத்துச் செல்லப்பட்டுப் பின் மீட்கப்பட்டது. அதன் பின்னர் மறுபடியும் பிரஞ்சுக்காரர்கள் எடுத்துச் சென்றுவிட்டனர். சிலையும் உடைந்து போய் விடவே நிஜ சிலையைப் போல் மாதிரி சிலை ஒன்று வடிவமைக்கப்பட்டு இன்று வரை அது பாதுகாப்பாய்ப் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
சுருட்டை முடியுடன் அரையடி உயரத்தில் இந்த ஐந்து வயதுச் சிறுவன் எந்நேரமும் ஒரு சிறு புன்னகையுடன் சிறுநீர் இருந்து கொண்டே இருக்கிறான். ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அவனைக் கண்டு மகிழ்கிறார்கள்.
இந்தச் சிறுவனின் உடைகள் சுமார் அறுநூறு தேறும். விதவிதமான உடைகள் தினசரி அணிந்து மக்களுக்குக் காட்சி தருகிறான். பண்டிகைக் காலங்களில் அதற்கேற்றாற்போல் உடையணிந்து கொள்கிறான். கிறிஸ்துமஸ் தாத்தா போல் , போர் வீரன் போல், எல்விஸ் போல், மொஸார்ட் போல் வெவ்வேறு வகையான உடையலங்காரங்கள். சில நாட்களில் பிறந்த மேனிதான். இவ்வனைத்து உடைகளையும் பார்க்க சிறப்பு மியூஸியமும் உண்டு. கி.பி 1747-ல் பிரெஞ்சு மன்னர் பதினைந்தாம் லூயி பரிசளித்த உடைதான் மிகப் பழமையானது.
இன்னொரு தகவல்: இச்சிறுவனின் பிரபலம் கண்டு பொறுக்காத ஒரு ஆசாமி Jeanneke Pis என்ற பெயரில் ஒரு சிறுமியின் சிலையை 1980-ல் அமைத்தாராம். ஆனால் அது இந்த அளவுக்குப் பிரபலம் அடையவில்லை.