July 30, 2004

சால்ஸ்பர்க் - 3



ஹெல்ப்ருன் மாளிகை(Helbrunn palace) சால்ஸ்பர்க்கின் மத்தியப் பகுதியிலிருந்து நான்கு கிலோமீட்டர்கள் தள்ளியிருக்கிறது. இதுவும் பதினாறாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஒரு சொகுசு மாளிகை. அப்போதைய ஆர்ச் பிஷப் ,மார்குஸ் சிடிகுஸ்(Markus Sittikus) தனது கோடைக்காலத்தை உல்லாசமாகக் கழிக்க நகரை விட்டுத்தள்ளி இயற்கையோடு ஒன்றியிருந்த இந்த இடத்தைத் தேர்வு செய்தார். தனது நண்பர் ஸான்டினோ ஸொலாரி (Santino Solari)எனும் கட்டடக் கலை நிபுணரை   இத்தாலிய முறைப்படி கட்டச் சொன்னார். சுமார் நான்கு வருடங்களில் இந்த அரண்மனை கட்டப்பட்டது. அரண்மனையைச் சுற்றி பசும்புல்வெளிகளும் ஓங்கியுயர்ந்த மரங்களும் மலைகளும் விலங்கினங்களும் சலசலத்து ஓடும் குற்றாறுகளும் ஓடைகளும் அம்மாளிகைக்கு எழில் சேர்த்தன.

மாளிகைக்குள் நுழைந்துவிட்டால் நாம் அந்த நூற்றாண்டுக்குச் சென்றுவிட்ட உணர்வு. முன்பு பயன்படுத்திய பொருட்களனைத்தும் நம் பார்வைக்குக் கிடைக்கின்றன.  உணவறையில் அமைக்கப்பட்டிருந்த நாற்காலிகள் தோலுறை அணிந்தவை. மரவேலைப்பாடுகள் அமைந்த உணவு மேசைகள் , கட்டில்கள், பெரிய சிவிகை போன்று அமைந்த வெப்பமூட்டப்பட்ட அறைகள், மன்னர் தனது அமைச்சர்களோடு கலந்துரையாட அமைக்கப்பட்ட இரகசிய அறைகள், மன்னர் நடனம் இரசிக்கும் அறைகள் என விரிந்தது. எண்கோண (Octogon) வடிவில் இருந்த இசை கேட்கும் அறை - கேட்பொலி விளைவுடன்(Acoustical effects) கூடியது . போர்வாட்கள், போர் உடைகள் கவசங்கள் முதலியவைகளும் இருந்தன. அரண்மனை முழுதும் இருந்த  ஓவியங்களும் சிலைகளும் நேர்த்தியாய் வடிவமைக்கபட்டவை. பறவைகளின் ஓவியங்கள் , விலங்குகளின் சிலைகள் என்னைப் பெரிதும் கவர்ந்தன. குறிப்பாக, ஒருகொம்புக் குதிரை (Unicorn) யின் சிலை அழகாயிருந்தது. எட்டுக் கால்கள் கொண்ட குதிரையின் ஓவியம் ஒன்றின் கற்பனையும் நன்றாயிருந்தது

அரண்மனையின் மாடியின் ஒரு அறையிலிருந்து எதிரே பார்த்தால் மலைத்தொடர் விரிகிறது. மலையினடியில் சிறிய ஒரு வீடு தனியாக , அழகாக, சிறியதாகத் தெரிகிறது. அரண்மனையின் பின்புறம் இருப்பவை பெரிய தோட்டம்  மற்றும் நீரூற்றுத் தோட்டம். உலகப் புகழ் பெற்றவை  இங்குள்ள தந்திர நீரூற்றுக்கள் .

சிறு சிறு குழுக்களாக தண்ணீர்ப் பூங்காவினுள் அழைத்துச் சென்றனர். முதலில் எதிர்ப்பட்டது கல்லினால் செய்யப்பட்ட நீளமான மேசையும் , அதைச் சுற்றி இடப்பட்டிருந்த கல் இருக்கைகளும். அனைவரும் அருகே இருந்த கற்படிகளில் வரிசையாய் அமர்ந்தோம். வழிகாட்டி எங்கள் குழுவில் இருந்த ஒரு சிலரை  அந்தக் கல் இருக்கைகளில் அமரும்படி கூறினார். அந்த இடத்தின் முக்கியத்துவத்தைக் கூற ஆரம்பித்தார். மன்னர் தனது நண்பர்கள் மற்றும் விருந்தினர்களுடன் அமர்ந்து மதுவருந்திக்கொண்டே பேசுவதற்கு அமைக்கப்பட்டவை இந்த இருக்கைகளும் மேசையும். கோடைக்காலத்தில் மன்னர் தன் நண்பர்களை அழைத்து விருந்து கொடுப்பது வழக்கம் என்று கூறிக்கொண்டே வழிகாட்டி தன் சகாவிற்கு சமிக்ஞை செய்தார். அவர் மறைவிடத்திலிருந்த ஒரு விசையை அழுத்த, மேசையைச் சுற்றிலும்  தரையில் மறைவாயிருந்த (கண்களுக்கு எளிதில் புலப்படாத) சிறு குழாய்களில் இருந்து தண்ணீர் பீய்ச்சி அடித்தது. இதை எதிர்பாராத பயணிகள் திகைத்துப் பின் தண்ணீரில் நனைந்தவாறே  மகிழ்ந்தனர். இதுபோல் தான் சுமார் நானூறு ஆண்டுகட்கு முன் மன்னரும் தன் நண்பர்களுக்கு திடீர் தண்ணீர் விருந்து அளிப்பாராம் ( தண்ணி அடிச்சுக்கிட்டே தண்ணீர்  அடிக்கிறது இதுதானோ?) 



தொடர்ந்து இதுபோல் தண்ணீர் அதிர்ச்சிகள் இருக்கும் என்று எச்சரிக்கை செய்த வழிகாட்டி கவனமாய்த் தொடரும்படி விளையாட்டாய்க் கூறி முன்னேறிச் சென்றார். நாங்களும் பின் தொடர்ந்தோம். இரு புறமும் அடர்த்தியாய் வளர்ந்த செடிகளைக் கடந்து செல்கையில் செடி மறைவில் இருந்த நுண்குழாய்களில்  திடீரென்று நீர் பீறிட்டு எங்களை நனைத்தது. அழகிய சிலைகள் , சிலைகள் அருகே தடாகங்கள் மலர்த்தோட்டங்கள் , புல்வெளிகள் எனத் தொடர்ந்தது. சுவரில் மாட்டி வைக்கப்பட்டிருந்த மானின் தலை வடிவச் சிலையிலிருந்தும் நீர் சடாரெனப் பீறிட்டது.



ஒரு சிறிய குகை போன்ற அமைப்பு. வெவ்வேறு சிலைகள்  இருந்தன. தரையிலிருந்து எழும் நீர் ஊற்று ஒன்று இருந்தது. மேலெழும்பும் நீரின் விசை , அதன் மேல் இருந்த பந்தினைத் தாங்கிப் பிடித்து ( பந்து கீழே விழாவண்ணம் ) பந்தினைச் சுழற்றியது. அங்கிருந்த மற்ற சிலைகளைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே குகைச் சுவரின் நுண்ணிய துளைகளிலிருந்து நீர் சிதற, மீண்டும் நனைந்தோம். தொடர்ந்த பாதையில் , நீரின் விசையால் உருளும் சிறு சிறு பொம்மைகள், சுழலும் சிறு சக்கரங்கள் , தறிகள் எனப் பல சுவாரஸ்யமான உருவங்கள். சுவர்களில் ஓவியங்களும் சிலைகளும் மிக நேர்த்தியாய் அமைக்கப் பட்டிருந்தன.  ஒரு சிறிய அரங்கு ( கல்லினாலானது) போன்ற அமைப்பு, அதனுள் ஏராளமான பொம்மைகள் , அனைத்தும் நீரின் விசையால் இயங்குபவை. இதைத் தொடர்ந்த தோட்டத்தில் வண்ண மலர்களும் புல்தரையும்  கண்ணுக்குக் குளிர்ச்சியளித்தன. தோட்டத்திற்கு வரவேற்பு கூறும் வண்ணம் இரண்டு ஒற்றைக்கொம்புக் குதிரைகளின் சிலைகள் முன்கால்கள் தூக்கி நின்று கொண்டிருந்தன.



வனவிலங்ககம் ஒன்றும் அருகே உள்ளது.அத்தனை இயற்கையையும் கண்டு மனமகிழ்ந்து , நனைந்த உடைகள் உலர்ந்து நாங்கள் திரும்பினோம்.

Sound of Music  எனும் திரைப்படம் பற்றி அறிந்திருப்பீர்கள். இது சால்ஸ்பர்க்கின் பல இடங்களிலும், மாளிகைகளிலும் படமாக்கப்பட்டது. இது படமாக்கப்பட்ட இடங்களுக்கெல்லாம் அழைத்துச் சென்று சுற்றிக் காட்டும் உலா (The Sound of Music Tour) ஒன்றும் இங்கு உண்டு. இது தவிர  சால்ஸ்பர்க்கின் அருகே உப்புச் சுரங்கங்களும் உண்டு . ( Salz என்றால் உப்பு என்று  பொருள்) . நேரமின்மையால் இங்கு செல்ல இயலவில்லை.

ஐரோப்பியச் சுற்றுலா மேற்கொள்பவர்கள் சால்ஸ்பர்க் வந்து செல்லாவிடில் அப்பயணம் ஒரு நிறைவான பயணமாகாது என்பது என் கருத்து. அப்படித்தானே?  


July 24, 2004

சால்ஸ்பர்க் - 2


நான்  சால்ஸ்பர்க் வந்த நேரத்தில் ( செப்டம்பர், 2000) ராமராஜனோ , லல்லுவோ இங்கு வந்திருந்தால் மிகுந்த சந்தோசம் அடைந்திருப்பர். நகரம் முழுதும் வண்ண வண்ணப் பசு மாடுகள் நின்றுகொண்டும் அமர்ந்து கொண்டும் இருந்தன, உயிருள்ள பசுக்கள் அல்ல, அனைத்தும் சிலைகள். சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சேர்ந்து நூற்றைம்பது பசுச் சிலைகளை உருவாக்கினர். நகரின் பல்வேறு இடங்களில் இப்பசுச் சிலைகள் சுமார் மூன்று மாதங்களுக்கு வைக்கப்பட்டு பார்வையாளர்களைக் கவர்ந்தன. இந்த நிகழ்ச்சியின் பின்னணி சுவையானது. 

பதினைந்தாம் நூற்றாண்டில் நடைபெற்ற விவசாயிகளின் போர் (Peasant's war) ஜெர்மனியிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் பரவியது. சால்ஸ்பர்க்கில் விவசாயிகள் ஆர்ச்பிஷப்-பின் வசிப்பிடமான கோட்டையை (ஹோஹன்சால்ஸ்பர்க் கோட்டை) முற்றுகையிட்டனர். மரக்குண்டுகளால் (அந்தக் காலத்தில் பீரங்கி ஏது?) கோட்டையின் சுவர்களைத் தாக்க ஆரம்பித்தனர். முற்றுகை பல நாட்களுக்கு நீடித்தது. கோட்டைக்குள் இருந்த உணவுப் பொருட்களின் கையிருப்பு குறைந்துபோக ஆரம்பித்தது. இதைக்கண்ட ஆர்ச்பிஷப் கவலை கொண்டார். இந்த விசயம் வெளியே முற்றுகையிட்டிருக்கும் விவசாயிகளுக்குத் தெரிந்தால் அவர்கள் தங்கள் முற்றுகையை நீடிப்பர்; உணவுப் பொருட்களெல்லாம் தீர்ந்து போனபின் வேறுவழியின்றி கோட்டையை விட்டுத் தர வேண்டியிருக்கும் என்று ஆர்ச் பிஷப் அச்சம் கொண்டார். கோட்டையில் இருந்த மாடுகள் அனைத்தும் தீர்ந்து போய் விட எஞ்சியிருந்தது ஒரே ஒரு பசு மட்டும் தான். 



அப்போது எந்த புத்திசாலிக்கு இந்த ஐடியா உருவாயிற்றோ தெரியவில்லை. எஞ்சியிருந்த மாட்டின் மீது வண்ணம் பூசி கோட்டையின் சுவர்கள் மீது விவசாயிகள் பார்க்கும் வண்ணம் நடக்கவிட்டனர். அடுத்த நாள் அந்தப் பசுவின் மீது வேறு நிற வண்ணம் பூசி கோட்டையின் மீது நடக்கவிட்டனர். இவ்வாறு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வண்ணம் பூசி,  பசு கோட்டைச் சுவர்கள் மீது நடைபோட்டதாம். இதைக் கண்ட விவசாயிகளும் கோட்டைக்குள் நிறைய மாடுகள் (உணவு)இருப்பதாய் நம்பி ( அவ்வளவு முட்டாள்களா என்ன? ) வெறுத்துப் போய் தமது முற்றுகையைக் கைவிட்டனராம். இந்த நிகழ்ச்சியை நினைவுறுத்தும் வகையிலேயே இந்தப் பசு விழா ( Kuh und Kunst) நடைபெற்றது.

நகரின் மத்தியப் பகுதியின் ஒரு நீண்ட குறுகலான தெருவில் அமைந்திருப்பது மொஸார்ட்டின் பிறப்பிடம். 



1756, ஜனவரி 27 ஆம் தேதி இங்குதான் உல்ப்காங் அமேடஸ் மொஸார்ட் ( Woffgang Amadeus Mozart) பிறந்தார். மொஸார்ட்டின் தந்தை லியோபோல்ட் மொஸார்ட் ஒரு சிறந்த இசை ஆசிரியர். எனவே மிக இள வயதிலேயே மொஸார்ட்டுக்கு  இசையில் ஈடுபாடு வந்ததில் ஆச்சரியமொன்றும் இல்லை. சிறுவயது முதலே மன்னனின் சபைகளில் இசை நிகழ்ச்சிகள் செய்ய  அழைப்புகளும் இசைப்பதவிகளும் அவரைத் தேடி வந்தன.



ஆஸ்திரியா மட்டுமின்றி ஐரோப்பிய நாடுகள் பலவும் சென்று தனது இசையினால் பெரும்புகழ் அடைந்தார். சால்ஸ்பர்க்கில் அவர் பிறந்த இடம் தற்போது ஒரு அருங்காட்சியகமாக மாற்றப் பட்டுள்ளது. அங்கே அவர் உபயோகித்த இசைக் கருவிகள்(பியானோ , வயலின்) , நாற்காலிகள் , மேசைகள் மற்றும் இசைக்குறிப்புகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. அவரது பெற்றோர், சகோதரி , மனைவி மற்றும் பலரது ஓவியங்களும் இருந்தன. இரண்டாவது உலகப் போரின் போது இந்த நினைவிடம் சேதப்பட்டாலும், அதன் பின்னர் புதுப்பிக்கப்பட்டது.

சால்ஸ்பர்க்கின் மிக அழகிய மிரபெல் தோட்டம் (Mirabel Garden) பதினாறாம் நூற்றாண்டில் அமைக்கப் பட்டது.



அப்போதைய ஆர்ச் பிஷப் தனது  மனைவிக்காக அரண்மனையை ஒட்டிய வெளியில் மிகப்பெரிய இந்தத் தோட்டத்தை அமைத்தார். மன்னர் தனது ஓய்வு நேரத்தில் இத்தோட்டத்தில் கழி(ளி)த்தாராம். பசும்புல்வெளிகளும், வண்ண வண்ண மலர்களும் விதவிதமான நீரூற்றுக்களும் காண்போர் மனதையெல்லாம் கொள்ளை கொள்ளும்.

July 22, 2004

சால்ஸ்பர்க் - 1

 

சால்ஸ்பர்க் (Salzburg) - ஜெர்மனியின் தென் எல்லைக்கு வெகு அருகில் அமைந்த ஆஸ்திரிய நகர். மியூனிக் மாநகரிலிருந்து இரண்டு மணிநேர இரயில் பயணத்தில் சால்ஸ்பர்க்கை அடையலாம். ஜெர்மனி வந்த சில வாரங்களில் நானும் எனது சகாக்களும் முதன்முதலில் இந்நகருக்குத்தான் பயணம் செய்தோம். ஆல்ப்ஸ் மலையின் அடிவாரத்தில் குடிசை போட்டு அமர்ந்திருக்கும்  நாடுகளில் ஆஸ்திரியாவும் ஒன்று. குளிர்காலங்களில் உடம்பெல்லாம் வெள்ளைப்பனி ஆடை உடுத்திக் கொண்டும் , வேனிற்காலங்களில் பச்சையாடை அணிந்துகொண்டும் காண்பதற்கு இனிமையான பல இடங்களைக் கொண்டது ஆஸ்திரியா.
ஒரு செப்டெம்பர் மாத வேனிற்காலத்தில் சால்ஸ்பர்க் பயணம் செய்தோம். மியூனிக் நகரிலிருந்து சால்ஸ்பர்க் செல்லும் வழி நெடுகிலும் பசுமை , நீரோடைகள் , மலைச்சரிவுகள் என இயற்கை விரித்த அதிசயங்கள் தொடர்ந்தன. எழில் கொஞ்சும் சால்ஸ்பர்க்கில் தனிச் சிறப்புக்கள் பல இருந்தாலும் முக்கியமான ஒன்று- இசை மேதை மொஸார்ட் பிறந்த ஊர் இதுதான். எனவே நகரின் எந்த மூலைக்குச் சென்றாலும் எதாவது ஒரு குழு அல்லது ஒருவர் இசை வாசித்துக்கொண்டிருந்தார்கள். மொஸார்ட் பிறந்த வீடும் தற்போது அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது. 




நகரை இருபகுதிகளாக வகிடெடுப்பது சல்ஸாஹ் (Salzach) எனும் நதி. மிகப்பெரிய நதியல்ல. நதியின் இப்புறத்திலிருந்து அப்புறம் செல்ல, நதியின் குறுக்கே அமைந்த பாலங்கள் பல உண்டு. நதியோரத்தில் நடந்து சென்றால் சலசலத்து ஓடும் நீரின் ஓட்டத்தில் மனமும் ஓடும். நதியிலிருந்து பார்த்தால் எதிரே ஓர் பழைய கோட்டை தெரிந்தது. பதினோராம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஹோஹென்சால்ஸ்பர்க் எனும் மலைக்கோட்டையே அது.  பாலம் ஒன்றைக் கடந்து அக்கரை அடைந்து கோட்டை செல்லும் வீதியில் நடந்தோம். சர்ச் ஒன்றும் இவ்வழியில் உள்ளது. செல்லும் வழியெல்லாம் மக்கள் வெள்ளம். அகலமான வீதிகளில் இசை நிரைந்து வழிந்தது.  வித்தியாசமான சதுரங்க அட்டையில் இருவர் செஸ் விளையாடிக்கொண்டிருந்தனர். நாம் சாதாரணமாக இரு விரல்களால் நகர்த்தும் காய்களை இரு கைகொண்டு தூக்கி நகர்த்தினர். 




எதிர்பட்டார் மொஸார்ட். அவரது சிலைதான்.



சுமார் 400 அடி உயரமான கோட்டையை அடைய கம்பி மூலம் இயங்கும்(funicular) இரயில் உண்டு. சற்றே சரிந்த பாதை. நிமிட நேரத்தில் உச்சியை அடையும் வேகம். உச்சியை அடைந்ததும் நகரின் மொத்த உருவமும் கண் எதிரில். பறவையின்  பார்வை (Bird's View) நகர் மட்டுமல்ல . தொலைவில் தெரிந்த பனியொழுகும் ஆல்ப்ஸ் மலைத்தொடர்களும் தான். 



பதினோராம் நூற்றாண்டில் இந்நகரை ஆண்ட ஆர்ச்பிஷப் ( மன்னர்) கட்டிய இக்கோட்டை மத்திய ஐரோப்பாவின் பெரிய மலைக்கோட்டையாகும்.  பின்னர் பதினைந்தாம் நூற்றாண்டில் மேலும் விரிவு செய்யப்பட்டது. கோட்டைச்சுவர்கள் மிகவும் தடிமனாக , எந்தவொரு தாக்குதலையும் தாங்கும் வண்ணம் அமைக்கப்பட்டிருந்தன. போர்க்காலங்களில் மக்கள் பாதுகாப்பாக மறைந்து கொள்ளவும் இக்கோட்டை பயன்பட்டது. சில வேலைகளில் இக்கோட்டையின் பெரிய அறைகள் சிறைக்கூடங்களாகவும் மாறின.  எல்லா மலைக்கோட்டைகளிலும் இருப்பது போல் இங்கும் ஒரு மியூசியம். பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள், ஆயுதங்கள், உடைகள், மன்னர்களது அறைகள், கட்டில்கள், நாற்காலிகள்  என விரிந்தது.  குற்றவாளிகளைப் பிடித்து அடைத்து வைத்து அவர்களைச் சித்திரவதை செய்யும் அறைகளும் (Torture rooms) இருந்தன. அவற்றிற்கருகில் இருந்த சில சிறிய அறைகளில் காவலாளிகள் தங்கும் அறைகளுமுண்டு. ஒரு சிறிய திரையரங்கும் பொம்மலாட்டம் நடைபெற்ற ஒரு அறையும் இருந்தன.  கோட்டையின் திறந்த வெளிகளில் தற்போது சிறியரக உணவகங்கள் அமைக்கப்பட்டு அதை ஒட்டிய அரங்குகளில் சிம்பனி இசை நிகழ்ச்சிகளும் நடந்த வண்ணம் இருந்தன. ஒரு சிலர் ஆஸ்திரியாவின் பழைய பாரம்பரிய உடையணிந்து நடந்துகொண்டிருந்தனர்.


July 16, 2004

ஸீபிட் 2004 - 3




நோக்கியாவின் புதுரக செல்பேசிகள் அவ்வளவாய்க் கவரவில்லை. நோக்கியாவின் முதல் 3G பேசி (நோக்கியா 7600) ஒரு டப்பா போல் இருந்தது. மற்ற அனைத்து செல்பேசி தயாரிப்பு நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு கவர்ச்சிகரமான பேசிகளை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கும் இவ்வேளையில் நோக்கியாவின் போக்கு அதிர்ச்சியளித்தது. நம் வீட்டிலுள்ள தொலைபேசியின் ரிஸீவர் போல் இருந்த மற்றொரு பேசி (நோக்கியா 7700)யும் பேசுவதற்கும் மற்ற பயன்பாடுகளுக்கும் வசதியாய் இல்லை. பேசியின் மூலம் எடுத்த படத்தை BLuetooth மூலம் இணைக்கப்பட்டிருந்த பிரிண்டரில் உடனடியாய் ஒரு பிரதி எடுத்துக் கொடுத்தார்கள்.

நோக்கியாவின் இந்தப்போக்கு அதன் விற்பனையைச் சிறிது பாதித்துள்ளது. சென்ற காலாண்டில் அதன் லாபம் சற்றுக் குறைந்துள்ளது. உலகின் பேசிச்சந்தையின் முப்பது சதவீதத்தை தன்னிடம் கொண்டிருந்த நோக்கியா ( இன்னும் முதலிடத்தில் இருந்தாலும்) சற்றே பின் வாங்கியுள்ளது. ஸாம்சங்கும் ஸோனிஎரிக்ஸனும் வேகமாய் முன்னேறுகின்றன.



நம் நாட்டிலிருந்து முப்பதிற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டதாக செய்திக்குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது . ஆனால் நாங்கள் பார்த்தவரை எந்தவொரு இந்தியக்கம்பெனியும் கண்ணில் படவில்லை. மென்பொருள் சேவையை (Software Service) மட்டும் நம்பி இன்னும் எவ்வளவு வருடங்களுக்கு நாம் தாக்குப்பிடிக்கப் போகிறோமோ தெரியவில்லை. ஏராளமான சீன , தைவான், ஜப்பானிய உற்பத்தி நிறுவனங்களைக் காண முடிந்தது.இதுவரை நான் கேள்விப்பட்டிராத கம்பெனிப் பெயர்கள் , சிறு சிறு எலெக்ட்ரானிக் பொருட்கள், உதிரி பாகங்கள் , அடாப்டர்கள் , உப பொருட்கள் (Accesorries) என எண்ணிலடங்கா . மின்னியல் மற்றும் மின்னணுவியல் உற்பத்தித் துறையில் அவை மற்ற ஐரோப்பிய நாடுகளையும் முந்திக்கொண்டு முன்னே செல்கின்றன என்று பார்க்கும் போது ஆச்சரியமாகவும், அதே நேரத்தில் நமது நிலையை எண்ணி வருத்தமாகவும் இருந்தது. தரமானதாகவும் விலை மலிவாகவும் அமைந்த ஆறாயிரம் கன்ஸ்யூமர் தயாரிப்புக்கள் (கணினித்துறையிலும் எலெக்ட்ரானிக் பிரிவிலும்) எனக் கூறி ஒரு சீன நிறுவனம் விளம்பரப்படுத்திக் கொண்டது.



தொப்பை வளர்த்த பிக்சர் ட்யூப் திரை போய் தட்டை வயிறு LCD திரைகள் வந்தபின் துல்லிய படமும் வண்ணக் கலவையும் கண்ணை அள்ளும். எல் ஜி மற்றும் ஸாம்சங் நிறுவனங்களின் LCD திரைகள் கண்ணைக் கவர்ந்தன. 170 டிகிரிக் கோணம் வரை பார்க்கும் வசதி(tilting), உயரத்தை அதிகரிக்கவோ குறைக்கவோ செய்ய வசதி உண்டு. இன்னும் பல சிறப்பம்சங்களுடன் கூடிய கணினித்திரைகளும் தொலைக்காட்சியின் அகலத்திரைகளும் (Wide Screen)வரிசையாய் அணிவகுத்தன. ஸாம்சங் நிறுவனத்தின் டிஜிட்டல் ஒலிப்பிரிவில் புதிய ரக வாக்மென்களும், MP3 ப்ளேயர்களும் , நாப்ஸ்டர் ப்ளேயரும் , ஸிடி மேன்களும் பாடல் கேட்கத் தூண்டின. ஒன்று மட்டும் எனக்குப் புரியவில்லை. இப்படி எல்லா நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு MP3 ப்ளேயர்களையும் , நாப்ஸ்டர் ப்ளேயர்களையும் சந்தையில் கடைவிரித்து விற்றுக் கொண்டிருக்கின்றன. எனக்குத்தெரிந்து காப்பி உரிமையுடன் (copy Right) MP3 பாடல்களை இதுவரை யாரும் காசு கொடுத்துக் கேட்பதில்லை. இணையம் வழி இலவசமாய் உருவியே அனைவரும் தத்தமது நினைவுக் குச்சியில் (Memory stick) சேமித்து கேட்டுக் கொள்கிறார்கள். எனவே இத்தகு டிஜிடல் ஒலிக் கருவிகளின் பயன்பாடு ஒலித்திருட்டை (Audio piracy) ஊக்குவிக்கிறதேயன்றி ஒரு ஆரோக்கியமான சந்தையை உருவாக்குவதில்லை.

மேலும் சில துளிகள் ....

1. HP நிறுவனத்தின் அடுத்த தலைமுறை மாத்திரைக் கணினி TC 1100 (Tablet PC) : குறைந்த வோல்டேஜ் , மொபில் ஸெலெரான் ப்ராசசர் , நீடித்த பாட்டரி , மற்றும் கம்பியில்லா லான் (Wireless LAN) .கைக்கடக்கமான குட்டிக் கணினி ,மாத்திரையாகவும் நோட்டுக் கணினியாகவும் இரு செயல்பாடு.

2.கண்காட்சியில் பலவிதமான குட்டி நினைவுக் குச்சிகள் & அட்டைகள் (memory sticks ans cards) பார்த்தேன். கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதைப் போல் உருவம் சிறிது ஆனால் நினைவாற்றல் பெரிது.

3. மென்பொருள் சந்தையின் தற்போதைய தேவை "பாதுகாப்பான பரிவர்த்தனை மற்றும் பயன்பாடு" . தகவல் தொழில் நுட்பத்தின் வளர்ச்சியை விட வேகமாய் வளரும் இந்த வைரஸ் பிரச்சினைகள் தான் . எனவே மென்பொருள் பாதுகாப்பு (Software Security) குறித்த தனியான குடில் ஒன்று என்ற பெயரில் இயங்கியது. தினமும் ஒரு தலைப்பில் விரிவுரைகளும் நடத்தப்பட்டன.

4. வேலை வாய்ப்புப் பிரிவும் இங்கு உண்டு. பெரிய நிறுவனங்கள் தங்கட்குத் தேவையான ஆட்களை இங்கே தேர்ந்தெடுத்துக்கொள்ளும் வகையில் அமைந்த இக்குடிலில் இம்முறை அவ்வளவாய் வாய்ப்புகள் இல்லை. ஐரோப்பாவில் நிலவி வரும் மந்த நிலையால் கடந்த வருடம் முதலே இங்கு வேலை வாய்ப்புகள் குறைந்து வருகின்றன. நம்மூர் மாணவர்கள் (ஜெர்மனியில் பட்ட மேற்படிப்பு )பலரையும் கண்டேன்.

5.பல்வேறு வசதிகளுடன் ( நிறைய மெமரி , அதிக வேகம் , Bluetooth, வயர்லெஸ் LAN , DVD Read Write, ) கூடிய மடிக்கணினி , வீட்டுத் திரையரங்குகள்(Home theaters) , அனைத்துப் பட வகைகளையும் காண ( mp3 , JPEG, DVD, XVCD, MPEG-4,VCD ) உதவும் DVD ப்ளேயர்கள் , செயல் திறன் கூடிய கலர் பிரிண்டர்கள் , உள்ளங்கை கணினி என நவீனத் தொழில் நுட்பத்தின் தயாரிப்புகள் அணிவகுத்தன

6.இந்த வருடம் கலந்துகொண்ட நிறுவனங்களுள் 46 சதவீதம் வெளிநாட்டு நிறுவங்கள் (ஜெர்மனி சாராதவை)

7.ஏழு நாட்கள் நடந்த இக்கண்காட்சியில் கலந்து கொண்டவர்கள் ஐந்து இலட்சத்திற்கும் அதிகம். இதில் 25 சதவீதம் பேர் வெளி நாட்டினர்

ஸீபிட் பற்றிய மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள : http://www.cebit.de/homepage_e?x=1




July 09, 2004

ஸீபிட் 2004 - 2

மரத்தினால் சட்டம் போடப்பட்ட LCD கணினித் திரையைப் பார்த்திருக்கிறீர்களா? மரத்தினால் ஆன கணினி விசைப்பலகை பார்த்ததுண்டா? படத்தில் நீங்கள் காண்பது ஸ்வீடெக்ஸ் எனும் நிறுவனம் அளிக்கும் தயாரிப்புகளே.





மேலும் இம்மாதிரியான மர வேலைப்பாட்டுக் கணினித்திரை, சொடுக்கிகள் மற்றும் விசைப்பலகைகளைக்காண இங்கு செல்லுங்கள். இந்த வடிவங்கள் அனைத்தும் ஸீபிட்டில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.

சுமார் முப்பது மெகா சைஸ் காட்சிக்கூடங்கள். மொத்த மைதானத்தையும் சுற்றிப் பார்க்க இரண்டு நாட்கள் தேவைப்படும். ஒவ்வொரு கூடமும் தனித்தனி பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. மென்பொருள் மற்றும் மென்பொருள் சேவைக்கென மூன்று பெரிய கூடங்கள், தகவல் தொழில் நுட்பம் தொடர்பான சாதனங்கள் பற்றிய கண்காட்சிக்கென பத்துக் கூடங்கள், தொலைத்தொடர்பு மற்றும் தொலைத்தொடர்பு நெட்வொர்க்குகளுக்கு பதினைந்து கூடங்கள் (வேலை வாய்ப்புப் பிரிவும் இதில் அடங்கும்) வங்கி மற்றும் வணிகத்துறைக்கென ஒரு கூடம் மற்றும் ஆராய்ச்சிப் பரிசோதனைகள் , புதுத் தொழில் நுட்பங்கள் , வணிகச் சந்திப்புகளுக்குக்கென ஒரு கூடம். மைதானத்தின் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்குச் செல்ல சிறியரகப் பேருந்துகளும் உண்டு.

நானும் என் மனைவியும் செல்பேசித் தயாரிப்பில் பணியாற்றுவதால் அது தொடர்பான கூடத்திற்கு முதலில் சென்றோம்.செல்பேசித் தயாரிப்பின் நவீன வகைத் தொழில்நுட்பங்கள் அனைத்தையும் பரப்பி வைத்திருந்தனர். பேசிச்சந்தையின் தற்போதைய சூடான தயாரிப்பு - மெகா பிக்ஸெல் கேமராவைக் கொண்ட செல்பேசிகள். ஸாம்சங் மற்றும் ஸோனி எரிக்ஸனின் மாதிரி வடிவங்கள் இருந்தன. ஒவ்வொரு நிறுவனமும் தனித்தனியே பெரிய பெரிய விளம்பரங்கள் , வண்ண வண்ணக் கையேடுகள் , தத்தமது தயாரிப்புகளைப் பார்வையாளருக்கு விளக்கிக்கூற விளக்குனர்கள் என கண்காட்சியைக் களைகொட்ட வைத்துக் கொண்டிருந்தன. நோக்கியா , எல்ஜி , மோட்டரோலா , ஸீமன்ஸ் , ஸோனி எரிக்ஸன், ஸாம்சங்,பானஸோனிக் , என் இ சி (NEC) என செல்பேசி தயாரிப்பில் கொடி கட்டிப்பறக்கும் பெரிய நிறுவனங்களின் மாதிரிகள் எல்லாவற்றையும் பார்வையிட்டோம். செயல்முறை விளக்கங்களும் (டெமோ) கண்டோம். 3G வகைச் செல்பேசிகள் ( பேச்சுடன் பேசுபவரைப் பார்க்கவும் உதவும் Videophone) சிலவற்றையும் கண்டோம்.செல்பேசிக் கேமராவினால் எடுக்கப்பட்ட படங்களை உடனுக்குடன் அச்சிடவும் ( பிரின்டரும் செல்பேசியும் Bluetooth மூலம் தொடர்பு கொள்ளும்) எடுத்த படங்களை மின்னஞ்சல் மூலம் அனுப்பவும் தற்போது சாத்தியமாகிறது. செல்பேசியுடன் இணைக்கப் பட்டிருக்கும் Bluetooth என்ற குறுகியதூர தொடர்பு வசதியால் ரிமோட் கன்ட்ரோல் கார்களை இயக்கி விளையாடவும் முடியும்.
பேசுவதற்கு மட்டுமே செல்பேசி என்ற நிலை போய் எல்லாச் செயல்களுக்கும் ( அலாரம், கேமரா , குறிப்பேடு, மின்னஞ்சல், இணையம் , BLuetooth , Infra red,FM ரேடியோ , கால்குலேட்டர், விடியோகேம்ஸ்) பேசியே துணை என்றாகிவிட்டது. நோக்கியாவும் மோட்டரோலாவும் , தங்களது செல்பேசி கொண்டு வீடியோ கேம்ஸ் போல் மொபைல் கேம்ஸ் விளையாடத் தனித்தனி கூடாரங்கள் அமைத்து பார்வையாளர்களைக் கவர்ந்து கொண்டிருந்தன. அந்தக் கூட்டத்தில் மோட்டரோலாவின் செல்பேசி ஒன்றை யாரோ சுட்டுக்கொண்டு போய் விட போலீஸ் வந்து விசாரித்துக்கொண்டிருந்தார்கள். பார்வையாளர்களைக் கவர பானஸோனிக் நிறுவனத்தினர் ஆடல் காட்சியொன்றும் அளித்து உற்சாகப்படுத்தினர்.



படம்: ஸோனிஎரிக்ஸனின் (Z1010) 3G செல்பேசி

செல்பேசித் தயாரிப்பு நிறுவனங்கள் மட்டுமல்ல, நெட்வொர்க் சேவை அளிக்கும் நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு தங்களின் புதிய சேவைகளை அறிமுகப் படுத்திக்கொண்டிருந்தன. சென்ற வருடம் நவம்பர் மாதத்தில் நான் ஜெர்மனி வாசம் முடித்து ஸ்வீடன் வரும்போது 3G என்கின்ற அகலப்பட்டை செல்பேசி சேவை (3G ,Wideband CDMA ) எந்த ஒரு சேவையாளரும் தரவில்லை. ஆனால் தற்போது மூன்று நிறுவனங்கள் ( T- மொபைல் , வோடபோன் மற்றும் இ-ப்ளஸ்) தர ஆயத்தமாயிருந்தன.



வோடபோன் (Vodafone) நிறுவனம் தனியாக ஒரு வித்தியாசமான குடிலை அமைத்து (படத்தில் காண்க) தனது சேவைகளைப் பட்டியலிட்டுக் கொண்டிருந்தது. செல்பேசியின் சிம் (SIM)கார்டை மடிக் கணினியில் செலுத்தி அகலப்பட்டை (Broadband Internet) இணைய இணைப்புப் பெறும் வசதி அளிப்பதாய்க் கூறி அதற்கு செயல்முறை விளக்கமும் அளித்தனர்.இணைய வேகம் 300 கிலோபைட்டுகள் வரை. அடிக்கடி மடிக்கணினியுடன் பயணம் மேற்கொள்ளுபவர்களுக்கு மிக நல்ல பயன்பாடாகும் இது. ஏறத்தாழ ஐரோப்பாவின் எல்லாநாடுகளிலும் தனது சேவையை விரிவு செய்து நெட்வொர்க் சேவையாளர்களிடையே தனிப்பெரும் சக்தியாக வோடபோன் திகழ்கிறதென்றே சொல்லலாம். இதைக் கண்டு சற்று மலைத்த மற்ற சேவையாளர்கள் ( ஜெர்மனி - T மொபைல் , இத்தாலி - TIM , ஸ்பெயின் - டெலிபோனிகா , ப்ரான்ஸ் - ஆரஞ்ச்) வோடபோனின் ஆதிக்கத்தைக் குறைக்க Freemove alliance என்ற கூட்டுத்திட்டத்தை வகுத்துள்ளனர்.

ஸீபிட் உலா அடுத்த பதிவிலும்.....

July 03, 2004

ஸீபிட் 2004 - 1



சுமார் ஆறாயிரம் கடைவிரிப்பாளர்கள் , மூன்று லட்சம் சதுரமீட்டர் பரப்பளவு கண்காட்சி மைதானம் , புத்தம்புதுக் கண்டுபிடிப்பு வடிவங்களின் அணிவகுப்பு மற்றும் இலட்சக்கணக்கான பார்வையாளர்கள் . இவையனைத்தும் எங்கே என்று கேட்கிறீர்களா? ஜெர்மனியின் ஹானோவர்(Hannover) நகரில் வருடாவருடம் நடக்கும் ஸீபிட்(CeBIT) கண்காட்சியில் தான். உலகின் மிகப்பெரிய தகவல் தொழில் நுட்பம் மற்றும் தொலைத்தொடர்புக் கண்காட்சி ஒவ்வொரு ஆண்டு மார்ச் மாதத்தில் ஒரு வார காலத்திற்கு இங்கு நடைபெறுகிறது.உலகெங்குமுள்ள ஆயிரக்கணக்கான தயாரிப்பு நிறுவனங்கள் , சேவை நிறுவனங்கள், வன்பொருள் மற்றும் மென்பொருள் தயாரிப்பாளர்கள் , மின்னனுவியல் சாதனங்கள் தயாரிப்பாளர்கள் , செல்பேசி நிறுவனங்கள், செல்பேசி சேவை அளிக்கும் நிறுவனத்தினர் என அனைவரும் ஒரு குடையின் கீழ் கூடும் இடம் மார்ச் மாதத்து ஹானோவர்தான். ஒவ்வொரு நிறுவனமும் தான் புதிதாய்த் தயாரித்த மின்னனுவியல் பொருட்கள் , வன்பொருள், மென்பொருள் மற்றும் செல்பேசி போன்றவற்றைச் சந்தையில் வெளியுடும் முன் ஸீபிட்- டில் காட்சியாய் வைத்து விளம்பரம் தேடுகின்றன. தகவல் தொழில் நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்களும் தாம் அளிக்கும் உயர்வகை நுட்பங்களையும் பட்டியலிட்டு அச்சேவை சார்ந்த பிற நிறுவனங்களுக்கு வலை விரிக்கின்றன. தொழில் நிறுவனங்களிடையே வணிக ஒப்பந்தங்கள் ஏற்படுவதற்கும் மற்ற போட்டியளர்களின் தயாரிப்புகளை அறிந்துகொண்டு தற்போதைய சந்தையின் போக்கினைப் (Trend) புரிந்து அதற்கேற்ப தொழில் நுணுக்கங்களை வகுப்பதற்கும் இந்த ஹானோவர் சந்திப்பு பெரிதும் உதவுகிறது.

ஸீபிட் தோன்றிய கதை மிகப் பெரியது, சுருக்கமாகவே சொல்கிறேன்: ஒவ்வொரு வருடமும் ஹானோவர் சந்தை (Hannover Fair) சுமார் ஐம்பது வருடங்களாக நடந்துவருகிறது. குறைக்கடத்திகளின் (Semi conductors) கண்டுபிடிப்புகளுக்குப்பின் மின்னணுவியல் துறையில் ஏற்பட்ட புரட்சி , மின்னணு இயந்திரங்களுக்கும் இந்தச் சந்தையில் ஒரு இடம் பிடித்துக் கொடுத்தது. கணினியின் வரவு மற்றும் தொலைத் தொடர்பியலின் அசுர வளர்ச்சியின் காரணமாக தகவல் தொழில் நுட்பச் சந்தை இக்காட்சியில் முக்கியப் பங்கு வகிக்க ஆரம்பித்தது. 1980-களின் ஆரம்பத்தில் "மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்பச் "சந்தையினைத் தனியான ஒரு கண்காட்சியாக நடத்தும் திட்டம் வலுப்பெற்று அதற்கு செயல் வடிவமும் கொடுக்கப்பட்டது. ஜெர்மனியின் பெரிய நகரங்களிலெல்லாம் இம்மாதிரியான சந்தைகள், விழாக்கள் நடைபெறுவதற்கென்றே காட்சி மைதானங்கள்( ஜெர்மன் மொழியில் இதை Messe என்பார்கள்) அமைக்கப்ப்பட்டிருக்கும். அத்தகு மைதானத்தில் 1987 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஸீபிட் கண்காட்சி தனியான ஒரு பெருங்காட்சியாக மலர்ந்தது. சரி , ஸீபிட் என்றால் என்ன? மத்திய தகவல் தொழில்நுட்ப அலுவலகம் (Center for office and Information technology) என்பதன் சுருக்கமே ஸீபிட் . 87-ல் அனைவரும் கண்காட்சியை ஆவலுடன் எதிபார்த்துக் கொண்டிருக்க எதிபாராமல் வீசிய பனிப்புயலினால் சுமார் ஒரு மீட்டர் உயரத்திற்கு பனி வளர்ந்துவிட்டதாம். பனியகற்றும் வேலையைப் பலமணி நேரம் செய்து காட்சி தடையின்றி நடைபெற்றது. இதனால் அந்த வருடத்து ஸீபிட் வேடிக்கையாக Snowபிட் என்றழைக்கப் பட்டது.



ஹானோவரில் இக்கண்காட்சியின் மாபெரும் வெற்றி , உலகின் மற்ற பகுதிகளிலும் ஸீபிட் விழா தற்போது நடத்த வழி வகுத்தது. அமெரிக்கா, ஆசியா , ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களிலும் திட்டமிடப்பட்டு கண்காட்சிகள் நடைபெறுகின்றன. சீனாவின் ஷங்கை நகரில் ஸீபிட்-ஆசியா ஏப்ரல் மாதத்திலும் , ஸீபிட்-அமெரிக்கா, நியூ யார்க் நகரில் ஆண்டு தோறும் மே மாதத்திலும், ஸீபிட் ஆஸ்திரேலியா சிட்னியில் அதே மே மாதத்திலும் நடைபெறுகின்றன. துருக்கியின் தலைநகரம் இஸ்தான்புல்-லில் இந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் ஸீபிட்- ஈரோ ஆசியா காட்சி நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த வருடம் நடைபெற்ற கண்காட்சிக்கு நானும் எனது மனைவியும் சென்றிருந்தோம். மூன்று வருடங்கள் ஜெர்மனியில் வசித்தபோது நான் செல்லவில்லை ( எனது மனைவி வருடம் தவறாமல் கலந்து கொள்பவர்) . தற்போது ஸ்வீடனிலிருந்து ஹானோவர் செல்லத் தீர்மானித்தோம். ஸ்வீடனின் தென்கோடியில் எங்கள் வசிப்பிடம் இருந்ததால் ஜெர்மனி சற்றுப் பக்கம்தான். டென்மார்க் வழியாக ஜெர்மனியின் பல நகரங்களுக்கும் பேருந்து வசதி உண்டு. சற்று முன்கூட்டியே முன்பதிவு செய்யாததால் விமானத்தில் பயணம் செய்ய முடியவில்லை. சரி, ஆறு அல்லது ஏழு மணி நேரப் பஸ் பயணம் தானே என்று எண்ணி பேருந்தில் ஏறி அமர்ந்தால், பயணம் நம் ஊர் பஸ் பயணம் போன்றே இருந்தது. மீண்டும் திரும்பி வரும் போது வசதியாக இரயிலில் வந்து விட்டோம். டென்மார்க்கையும் ஜெர்மனியையும் கடல் பிரிக்கிறது . கடல் வழியைக் கடந்து செல்ல பெரிய ரகக் கப்பல். பேருந்தையே கப்பலுக்குள் செலுத்திவிட்டனர். இது கூட ஆச்சரியமல்ல. திரும்பி வரும்போது இரயிலில் வந்தோம் என்று சொன்னேனல்லவா? கடல் பிரிக்கும் இடத்திற்கு வந்தவுடன், இரயிலும் கப்பலுக்குள் புகுந்து கொண்டது. கடலைக் கடந்தவுடன் கப்பலுக்கு நன்றி கூறி , இரயில் தனது பயணத்தைத் தொடர்கிறது.
ஜெர்மனியின் மற்றொரு பெரிய நகரான ஹாம்பர்க் கடந்து ஹானோவர் வந்தடைந்தோம்.87 ஆம் ஆண்டில் பனிப்பொழிவு இருந்ததைப்போல இந்த வருடம் இல்லை, என்றாலும் நாங்கள் சென்ற நாளில் சூறைக்காற்று சுழற்றி அடித்தது.

இந்த வருடக் கண்காட்சியின் சிறப்பம்சங்களை அடுத்த பதிவில் எழுதுகிறேன்.